ஜனாஸா எரிப்பு

(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்)

Prof. M.S.M. Anas

ஜனாசாக்களை எரிக்க ஒரு துணிவு வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் வீழ்ச்சி, உயிர்த்தஞாயிறு தற்கொலை த்தாக்குதல், இனவாத ஆட்சியாளரும் இனவாத ஊடகங்களும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அவதூறுகள். இப்படிப்பல.

முஸ்லிம்கள், அரசியல் பகடைக்காய்களாக்கப்பட்டிருப்பதன் அறிகுறிதான் ஜனாஸா எரிப்பு. அரசியல் அனாதைகளாக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்கள். ஆரம்பத்தில் புதைக்க அனுமதி தரப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவன விதிகளைப் பின்பற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம் என்று இலங்கை அரசு அறிவித்தது. புதைப்பதோ எரிப்பதோ அந்தத் தீர்மானத்தை குடும்ப உறவினர்களிடம் விடும்படியும் மரணித்தவரின் சமய பண்பாட்டு உணர்வுகளை சிதைக்க முயல வேண்டாம் என்றும் அந்த உலக நிறுவனம் கூறியிருந்தது.

இது உலகப் பொது நியமம். காரணமின்றி மக்களின் உணர்ச்சிகளோடு விளையாட வேண்டாம். போதுமான சுகாதார ஏற்பாடுகளுடன் இறுதிச் சடங்குகளை நடத்த அரசுகள் அனுமதிக்க வேண்டும். இதுதான் நடந்திருக்க வேண்டும். இலங்கை அரசு உலக சுகாதார நிறுவன நியதிகளை மீறியது. முஸ்லிம்களுடன் கலந்துரையாடாது அவர்களுடைய அனைத்து எதிர்ப்புக்களையும் மனிதாபிமான வேண்டுகோள்களையும் கருணைக் கோரிக்கைகளையும் அரசு நிராகரித்தது .

நீதி அமைச்சர் அலிசப்ரியின் புதைப்பதை அனுமதிக்கக் கோரும் ( சில உத்தரவாதங்கள் தரப்பட்டிருந்த நிலையில்) அமைச்சரவைப்பிரேரணை அவர் முகத்திலேயே வீசி எறியப்பட்டது. அலிசப்ரி தனது சமூகத்திற்காக நீதி அமைச்சுப்பதவியை தவறாகப் பயன்படுத்துவதாக பிக்குகள் சிலர் கோஷம் எழுப்பினர். அமைச்சர் அவைக்கு பிரேரணை கொண்டு வந்து பயனில்லை . சுகாதார நிபுணர் குழுதான் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச குதித்த அதிர்வு இன்னும் ஓயவில்லை . கம்மன்பில மற்றும் அடிப்படைவாத பிக்கு அணியினரும் இதை ஆதரித்துக் குரல் எழுப்பினர்.

ஆனால் அரசுக்குள் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்தன. அரச தரப்பு டிலான் பெரேரா( பா.உ.) முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது, அதற்கு இடையூறு செய்வது தவறு என்று பாராளுமன்றத்தில் துணிச்சலாகத் தனது கருத்தைக் கூறினார். விமல் குழுவினருக்கு எதிரான கருத்து அது . ஆனால் அது டிலானின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல.

பிரதமர் மகிந்தவிற்கு ஒரு மாற்றுக்கருத்து இருந்தது. சர்வதேச அரங்கில் பிரேத எரிப்பு பூமரங்காக மாறும் என்றும் பிரதமர் யோசித்திருக்கலாம். மனித உரிமைகள் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க முஸ்லிம் நாடுகளின் காலடிக்குச்செல்லும் போது பிரேதங்களை எரியூட்டிய முகத்தோடு எப்படி அரபிகளின் முகத்தைப் பார்ப்பது. இப்படி ஒருவகைக் கிலேசமும் அரசை வாட்டியது.விமல் குழுவினரின் முகமும் வாடித்தான் இருந்தது. றிஸாத் , ஹக்கீம் (ஏன் அலி சப்ரியும் இல்லாது) ஆட்சி அமைப்போம். முஸ்லிம்களே இல்லாது மந்திரிசபை அமைப்போம் என்று வாய்கிழியக்கத்தியவர்கள், ஜனாஸா எரிப்பை தேசியக் கொள்கை ஆக்கிக்கொண்டவர்கள், அரபிகள் வீட்டுக்கதவுகளைத்தட்டிய பேரோசை உலகம் முழுக்கக் கேட்டது.

சிறுபான்மையினரை அடக்கி ஆளும் சுபாவம் கொண்ட மற்றும் சிலர் (இப்பேராபத்திலிருந்து) தம்மைக் கைதூக்கிவிட அரபு நாடுகள் நிச்சயம் ஆதரவளிக்கும் என்று பேட்டி கொடுத்தனர். ஜெனீவா ஜுரத்தின் சாதனை இது. எரியூட்டுவதை’ ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற இனவாதக் கோட்பாட்டோடு ஒன்றிணைத்து அழகு பார்த்தவர்கள் இம்ரான் கானின் எரிப்பதைத் தடுக்கும் இதமான வேண்டுகோளையும் நிராகரித்தனர். ஆனால் ஒரு பாதை ஒரு நோக்கு என்ற சீனாவின் பேராசைத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசை இம்ரான் வலிறுத்திக்கேட்டபோது அரசு அமைதி காத்தது ( இறையாண்மை). அரபு நாடுகளுக்கு ஆலவட்டம் பிடிக்கத்தான் அண்டை நாட்டு இம்ரானை அரசு அழைத்தது என்பது இன்னொரு கதை.

பாராளுமன்றத்தில் இம்ரான்கான் பேசுவார் என்று தண்டோராப்போடப்பட்டது. பாராளுமன்றம் செல்ல மாட்டார் என்று மறுநாள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவைப் பகைக்கக் கூடாதாம்.( இறையாண்மை ). முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரானைச் சந்திக்கத்தடை விதிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் சந்திப்புக் கிடையாது என்று அரசின் உயர்மட்ட அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். முஸ்லிம்களை அவமதிக்கும் முடிவு இது. யாரைத்திருப்திப்படுத்த இந்தத் தடை உத்தரவு. ஜனாஸா எரிப்பதற்கு எதிராக நல்ல தீர்வு வேண்டும் என்று இலங்கை அரசிடம் கூறாது இம்ரான் இலங்கையை விட்டு வெளியேறி இருக்க மாட்டார் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை .