ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ. எம். எ. அஸீஸ்
இஸட். ஏ. ஸன்ஹிர் (+94 777 48 49 12 zanhir@gmail.com)
A.M.A. Azeez
அபூபக்கர் முஹம்மத் அப்துல் அஸீஸ் 04.10.1911 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அன்னாரின் தந்தை S.M. அபூபக்கர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் காதி நீதிபதியுமாவர். அவர் யாழ் நகரசபை உறுப்பினராகவும் உபதலைவராகவும் பணியாற்றியதுடன் அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்துள்ளார். கொழும்புக்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்களில் இவரே இப்பதவியை முதலில் வகித்தவராவார். தாயாரின் பெயர் சுல்தான் முஹிதீன் நாச்சியா. வாழ்க்கைத் துணைவி உம்முகுல்தூம்.
Reception to S.M. Aboobucker at Jaffna
on his appointment as Justice of the Peace in 1943
யாழ் வைதீஸ்வரா வித்தியாலயம், யாழ்பாணக் கல்லூரி, கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் கேதரின் கல்லூரி என்பனவற்றில் பயின்ற எ. எம். எ. அஸீஸ், லத்தீன் மொழியைக் கற்றதுடன் தமிழ், ஆங்கிலம் என்பனவற்றில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். இலங்கை முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சிக்குப் பங்காற்றியோரில் அறிஞர் அஸீஸுக்கும் பெரும் பங்குண்டு.
Catherine’s College, Cambridge University, England in 1935 (Azeez is Second from left in standing first row)
இலங்கை சிவில் சேவையில் (C.C.S) இணைந்த முதல் முஸ்லிம் (1935) என்ற பெருமைக்குரிய அஸீஸ் அவர்கள் இலங்கை நிருவாக சேவையின் பல உயர் பதவிகளை வகித்தவர். பின்னர் டீ.பி. ஜாயா அவர்களினால் கொழும்பு ஸாஹிறாவின் அதிபர் பதவி அவருக்கு ஒப்படைக்கப்பட்டது (1948 – 1961). அவர் இலங்கைப் பாராளுமன்ற செனற் சபை உறுப்பினராயிருந்ததுடன் (1952) பொதுச் சேவை ஆணையாளராகவும் சேவையாற்றியுள்ளார் (1963).
Ceylon Muslim League Complimentary Dinner to Azeez
on becoming the first Muslim Civil Servant at the Galle Face Hotel in 1935.
Dr. M.C.M. Kaleel and T.B. Jayah are also present at the head table.
Hon. C.W.W. Kannangara speaking at the YMMA Central Felicitation Dinner to Azeez on his appointment as a Senator in 1952
எ. எம். எ. அஸீஸ் பல உலக நாடுகளுக்கும் பயணம் செய்து பல்வேறு அனுபவங்களையும் பெற்றவர். தனது சேவைக் காலத்தில் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் என, பல்வேறு நாடுகளுக்கும் அவர் பயணித்துள்ளார். தனது பயணங்களின்போது போது அறிஞர்களை சந்திப்பதிலும் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி கலாசார பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினார். குறிப்பாகத் தனது பயணங்களில், கல்விப்புலத்தில் ஆய்வுரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டார். அவரின் ‘மிஸ்ரின் வசியம்’ (1967) இதற்குத் தக்கசான்று.
Azeez Visiting a Muslim School in Mombasa, Kenya 1954
.
Azeez visiting Aga Khan School in Nairobi Kenya in 1954
அரச சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற நூலான இலங்கையில் இஸ்லாம், தமிழ் யாத்திரை, கிழக்காபிரிக்கக் காட்சிகள், ஆபிரிக்க அனுபவங்கள், அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ் உட்படப் பல நூல்களின் ஆசிரியரான அஸீஸ், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக்கு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவரின் நூல்கள், ஆய்வுகள் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு யாழ் பல்கலைக்கழகம் அன்னாருக்கு 1980 இல் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. 22.05.1986 இல் இலங்கை அரசு, தேசியவீரர் தினத்தன்று அன்னாருக்கு நினைவு முத்திரை வெளியிட்டு கெளரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Azeez receiving the Sahitiya Award for his book
அஸீஸ் அவர்கள் பொதுச் சேவையில் பெரும் பங்காற்றியவர். “அஸீஸின் காரில் இரு காகிதப் பெட்டிகள் எப்போதும் இருக்கும். ஒன்று சிவில் சேவைக்குரியது. மற்றயது சமூகசேவைகள் சம்பந்தமானது” என அமைச்சர் டி. பி. இலங்காரத்தின ஒருமுறை குறிப்பிட்டார். கல்முனை உதவி அரசாங்க அதிபராக இருந்த காலப்பகுதியில் அங்கிருந்த பிரமுகர்களுடனும் ஊராருடனும் இணைந்து விவசாயஉற்பத்தி நடவடிக்கைகைகளை ஊக்குவித்தார். இலங்கை முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்திக்கு எவ்வாறு திட்டமிடவேண்டுமென்ற எண்ணம் தனது கல்முனை வாழ்வின் அனுபவமே பெற்றுத்தந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
19.05.1945 இல் அகில இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியை (The Ceylon Muslim Scholarship Fund – CMSF) அஸீஸ் தாபித்தார். 29.07.1944 இல் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் (Y.M.M.A) தந்தை எ.எம்.எ. அஸீஸ் அவர்களே. Y.M.M.A பேரவையின் பொது நோக்கங்களில் ‘கல்வி அபிவிருத்தி’ பிரதான இடம்பெற்றது. மத்திய கிழக்கில் எகிப்து, சூரியா, லெபனான், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் Y.M.M.A. அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. எகிப்து Y.M.M.A., 1927 இல் தாபிக்கப்பட்டதாகும்.
The Ceylon Muslim Scholarship Fund Committee of Management 1948.
Seated (L-R): M. Rafeek, A.M.A. Azeez (Chairman), T.B. Jayah (President, BoT), H.S. Ismail (Secretary, Speaker of Parliament), M. Mathany Ismail ; M.L.M. Mackeen.
Standing (L-R): M.U.M. Saleem, A.J.M. Jameel, A. Raheman Hathy, M.H.M. Naina Marikar M.P, Puttalam ; M.H.S. Marikar.
அஸீஸ் அவர்கள் ஜமாலுதீன் ஆப்கானி, சேர் செய்யத் அஹ்மத்கான், முஹம்மது அப்து, அல்லாமா இக்பால் போன்றோரின் சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டார். மேலைத்தேய நாடுகளுடன் அவர் வைத்திருந்த தொடர்பு அவரது சிந்தனையை விரிவாக்கி கீழைத்தேய தத்துவங்கள், மரபுகள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு ஆராயும் சந்தர்ப்பத்தை அன்னாருக்கு வழங்கியது. உலமாப் பெருமக்களுக்கும் மேற்கத்தேய கல்விமுறையில் பயின்றோருக்கும் இடையில் நிலவிய இடைவெளியைக் குறைப்பதற்கும் பழைமை, புதுமை என்பனவற்றை இணைப்பதற்கும் தாம் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என அறிஞர் அஸீஸ் விரும்பினார். இதற்கு அவரின் குடும்பப் பின்னணி, தாம் பெற்ற கல்வி, வாழ்ந்த சூழல், மொழிப் புலமை, தொழில் வாண்மை, மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள், கல்வி நிறுவனங்களுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு போன்ற அனைத்தும் அவருக்குத் துணைநின்றன.
Azeez presiding at the Allama Iqbal Day
நூலகம், வெளியீட்டகம், சுவடிக்காப்பகம், ஆராய்ச்சி நிலையம், கேட்போர்கூடம், கலாபவனம் போன்றவற்றைக்கொண்ட, இலங்கை முஸ்லிம்களுக்கான கலாசார மத்திய நிலையம் ஒன்றை கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் அவர் அதிபராக இருந்தபோது நிறுவ முயன்றார். 18.03.1958 இல் அதற்கான அத்திவாரக்கல், சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயில் அவர்களால் நாட்டப்பட்டது. எஸ்.எல்.எம். ஷாபி மரிக்கார் ஸாஹிறாவின் அதிபராக இருந்தபோது செப்டம்பர் 1977 இல் இக்கட்டிடம் பூர்த்திசெய்யப்பட்டது. இந்நிலையம் பற்றி அஸீஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஸாஹிறாக் கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமன்றி சாதி, சமய, நிற பேதமில்லாமல் பொதுமக்கள் அனைவருக்கும் இம் மன்றத்தின் வசதிகள் அளிக்கப்படும்”.
Ceylon Muslim Cultural Center Foundation Laying Ceremony,
Stone laid by Hon. H.S. Ismail, Speaker of the House of Representatives, at Zahira College in 1958
முஸ்லிம்களின் கலாசார நிகழ்வுகளை முறைமைத்துவப்படுத்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், சில உலமாக்களால் ‘பித்அத்’ என விமர்சிக்கப்பட்டபோதும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. பொருத்தமான இஸ்லாமிய இலக்கியங்கள் முஸ்லிம் மாணவர்களின் பாடநூல்களாக்கப்படல் வேண்டும் என்று அவர் குரலெழுப்பினார்.
அஸீஸின் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ கட்டுரைக்கும் சாஹிறாவில் நிறுவ முனைந்த கலாசார நிலையத்துக்கும் தொடர்பு இருப்பதாக அஸீஸ் காலத்து ஸாஹிறாவின் ஆசிரியரும், எழுத்தாளரும், நூலகருமான எஸ்.எம். கமாலுத்தீன் குறிப்பிடுகின்றார்.
H.E. Ahmad Foad Naguib, Ambassador for Egypt inspecting model of the Ceylon Muslim Cultural Center
at Zahira College in 1959
ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்றத்துக்கும் அதன் ஆரம்பகால செயற்பாடுகளுக்கும் பங்களிப்பு செய்தவர்களுள் பிரதானமானவர் எ. எம். எ. அஸீஸ். 1941 இல் ‘முஸ்லிம் மித்திரனில்’ அவர் எழுதிய, ‘மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை’ என்ற கட்டுரை, 1963 இல் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற நூலில் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தலைப்பில் மீண்டும் இடம்பெற்றது. இந்நூலில் இலங்கையில் முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பாற்றிய ஒறாபிபாஷா, ஆயிரமாண்டுகள் பழமைமிக்க ஜாமிஉல் அஸ்ஹர், பற்றிய கட்டுரைகளும் அடுத்து ‘எமக்கொரு ஜாமியாஹ்’ என்றகட்டுரையும் ‘தொடர்ந்து முஸ்லிம்களின் கல்விநிலை’ என்ற கட்டுரையும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
‘உமது ஆண்டவனின் பாதையளவில் புத்தியாயும் அழகான போதனைகளுடனும் (அவர்களை) நீர் கூப்பிடும். சிறந்தவையும் மிக அழகானவையுமான முறைகளில் அவர்களுடன் நீர் தர்க்கியும்’.
(குர்ஆன் 16:125)
“எக்காலத்திற்கும் சிறந்த மதப் போதனைக் கோட்பாடுகள் இந்த அற்புத வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அத்தகைய இலட்சணங்களுள்ள மதப் போதகர்கள் எங்கே இருக்கின்றனர்”? என்ற வினாவுடன் ‘எமக்கொரு ஜாமியாஹ்’ என்ற கட்டுரை தொடங்குகின்றது. மதக் கல்வியின் குறைபாடு காரணமாக இஸ்லாம் பிழையாக விளங்கப்பட்டு மூடப்பழக்கவழக்கங்களுக்கு சமூகம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. சிறுவர்கள் செல்லும் குர்ஆன் பாடசாலைகளின் மதக்கல்வியில் முதலாவது கவனம் செலுத்தப்படல் வேண்டும். அக்கல்வி வாழ்நாள் முழுதும் தொடரவேண்டும். அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தரமிக்கோராக இருக்கவேண்டும். சமூகம் இதில் அக்கறை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்களுடன் அக்கட்டுரை தொடருகின்றது.
அக் கட்டுரையில், ஒரு ‘ஜாமிஆ’ எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார். மொழி, கணிதம், விஞ்ஞானம் உள்ளடங்கிய பாடங்களில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியும் போதிக்கப்படல் வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதியுடயோராயிருப்பதுடன் அவர்களில் சிலர் வெளிநாட்டவராகவும் இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு கலாசாலை தொடங்கப்படும்வரை விருப்பமுள்ள மாணவர்கள், இவ்வாறான கல்வியைப் போதிக்கும் மிஸ்று (எகிப்து) போன்ற இடங்களுக்கு சென்று கற்பதற்கான பண உதவிகளையாவது நாம் செய்யவேண்டும்.
நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரக்கூடியவர்களை உருவாக்கும் ஒரு கலாநிலையம் அமைக்கப்படல் வேண்டும் என்று குறிப்பிடும் அவர், “மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை ஒரு யோசனையாக மாத்திரம் முடிந்துவிடாமல் ஒரு நல்ல காலம் அதை எதிர்பார்த்து நிற்கின்றது என நம்பிப் பிரார்த்திப்போமாக” என அக் கட்டுரையை நிறைவுசெய்கின்றார்.
இலங்கையில், செல்வந்தராக மட்டுமன்றி கொடை வள்ளலாகவும் அன்று அனைவராலும் அறியப்பெற்றிருந்தவர் எமது கல்வித் தந்தை நளீம் ஹாஜியாராவார். மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியையும் போதிக்கும் கலாநிலையம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்ற எண்ணம் அன்னார் மனதிலும் உதித்தது. தனது சொத்து செல்வம் முழுவதனையும் அதற்காக அர்ப்பணிக்க ஹாஜியார் தயாராக இருந்தார்.
Al-Haj M.I.M. Naleem (Founder, Jamiah Naleemiah)
தனது ஊரான பேருவலை, சீனன்கோட்டையில் வாழ்ந்த பிரமுகர்கள், மாணிக்கக்கல் வியாபாரிகள் பலரது ஆதரவும் நளீம் ஹாஜியாருக்குக் கிட்டியது. அதில் ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார், இலங்கை முஸ்லிம் மிஷனரி சங்க செயலாளர் அல்ஹாஜ் ஏ. சீ. ஏ. வதூத் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். அக்காலத்தில் படித்த, பட்டம் பெற்ற அறிஞர்களினதும் சிந்தனையாளர்களினதும் தொடர்பும் நளீம் ஹாஜியாருக்குக்கிடைத்தது. முஸ்லிம் சமூகத்தில் பிரசித்திபெற்றிருந்த உலமாவான, மனம் கவரும் சிறந்த பேச்சாளரும் பரந்த சிந்தனை கொண்டவருமான மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களுடன் நளீம் ஹாஜியார் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். அன்னாருக்கும், ஹாஜியார் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதனைக் கேள்வியுற்ற மஸ்ஊத் ஆலிம் அவர்கள் மட்டற்ற மகிழ்வுற்று உற்சாகமூட்டினார். இப்பின்னணியில் அஸீஸ் அவர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது. அவ்வேளை தனது இலட்சியக் கனவு ஹாஜியார் மூலம் நிறைவேறப்போகின்றது என, அறிஞர் அஸீஸ் மட்டற்ற மகிழ்வெய்தினார். சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் வள்ளல் நளீம் ஹாஜியாராவார்.
மஸ்ஊத் ஆலிம் சாஹிப்
ஜாமிஆ நளீமிய்யா இல் தொடங்கப்பட்டபோது வெளியிடப்பட்ட ஜாமிஆ பற்றிய கையேட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “…………….. இஸ்லாத்தையும் அதன் தத்துவம், கோட்பாடு கொள்கைகளையும் ஆழ்ந்து கற்று, அதே நேரத்தில் நல்ல சிந்தனைகள், தத்துவங்கள் என்பனவற்றில் சிறந்த அறிவு படைத்த உலமாக்களை உருவாக்க வேண்டிய ஒரு அவசரத் தேவை இன்று தோன்றியுள்ளது. இத்தகைய உலமாப் பெருமக்களின் வழிகாட்டுதலும் தலைமையுமே மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன………… இத்தகைய உலமாக்களை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தின் இன்றைய ஒரு முக்கிய தேவையைப் பூர்த்திசெய்யும் அடிப்படை நோக்கத்துடனேயே ஜாமிஆ நளீமிய்யா (நளீமிய்யா இஸ்லாமிய கலாநிலையம்) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது”.
ஜாமிஆ நளீமிய்யா தொடங்கப்பட்டபோது வெளியிடப்பட்ட கையேடு
எ.எம்.எ. அஸீஸ் மஸ்ஜிதுகளால் கவரப்பட்டிருந்தார். பள்ளிவாசல்களின் கட்டிடக் கலையம்சங்கள் மட்டுமல்லாது அதன் சமூகப் பங்களிப்புக்கள் பற்றியும் உலக நாடுகளில் தாம் சென்ற இடங்களிலெல்லாம் ஆய்ந்து அறிந்தார். வெளிநாட்டுப் பயணங்களின்போது மசூதிகளைத் தரிப்பதற்கென்றே நாட்களை ஒதுக்கிய சந்தர்ப்பங்கள் உள. ‘மிஸ்றின் வசியம்’ என்ற நூலில் ‘மிஸ்றின் மசூதிகள்’ என்ற ஒரு நீண்ட கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. ‘வளாகத்தின் அமைப்பும் கட்டிடங்களும் இஸ்லாமிய பராம்பரியத்திற்கு இணைந்ததாக அமைத்தல் வேண்டுமென்பதில் அறிஞர் அஸீஸ் மிக்க கரிசனை கொண்டார்’ என நளீமிய்யாவின் பணிப்பாளராக இருந்த கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் தனது, ‘நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
ஜாமிஆ நளீமிய்யாவை ஆரம்பிப்பதற்கு முன் அதன் பாடத்திட்டத்தினை அமைப்பது தொடர்பாக ஒரு கூட்டம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட அறிஞர் அஸீஸ் அவர்கள், “பாகிஸ்தான் போன்ற ஒரு முஸ்லிம் நாட்டைத் தரிசித்து ,அங்குள்ள இஸ்லாமிய கலாநிலையங்களுக்குச் சென்று, அவற்றின் செயல்பாட்டை அவதானித்து, அங்குள்ள புகழ்பெற்ற முஸ்லிம் கல்விமான்கள், சிந்தனையாளர்கள் அறிஞர்களை சந்தித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்று எமது கல்விக் கொள்கையையும் பாடத்திட்டத்தையும் வகுப்பதே மிகப் பொருத்தமானதாக அமையும்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு செல்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, அதிபர் யூ.எம். தாஸின், ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார், ஏ.ஆர்.எம். சுலைமான், பாயிஸ் ஆகியோர் கொண்ட குழு 1972 இல் பாகிஸ்தான் பயணமாகியது. 3.7.1972 இல் அஸீஸ் அவர்கள் மிகவும் நேசித்த, அவரது துணைவியார் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாமிஆ நளீமிய்யாவின் கையேடு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “…………….. இலங்கையில் அறபு முஸ்லிம்கள் முதலில் குடியேறியதாகக் கருதப்படும் வேருவலை (பெர்பரீன்) இல் நிறுவப்பட்டுவரும் இந்த ஜாமிஆ, இலங்கை வாழ் முஸ்லிம்களின் கலாசார மத்திய தலமாகவும் சமுதாய எழுச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தூண்டுகோலாகவும் அமையும். இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் உலக முஸ்லிம்களுக்குமிடையில் கலாசாரப் பண்பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்தும் ஓர் இணைப்புச் சக்தியாகவும் விளங்கும்”.
“வளாகத்தின் மத்தியில் கண்ணைக் கவரும் வகையில் இஸ்லாமியக் கட்டிடக் கலைச் சிறப்பை உணரத்தக்க கூடிய வகையில் ஒரு மஸ்ஜித் கட்டப்படுகின்றது. அமைப்பிலும் வனப்பிலும் ஜாமிஆவின் சிறப்பம்சமாக இப்பள்ளிவாசல் அமையும். இந்த ஜாமிஆவில் பயிலும் மாணவர்களுக்குப் பரந்த இஸ்லாமிய அறிவைப் புகட்டுவதோடு இஸ்லாமிய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் என்பனவற்றில் பயிற்சியளிக்கும் நோக்கத்துடனேயே இம் மஸ்ஜித் எழுப்பப்படுகின்றது. ………….. இஸ்லாமிய அறிவின் சின்னமாக ஜாமிஆவும் இஸ்லாமிய வாழ்க்கை முறைப் பயிற்சியின் சின்னமாக மஸ்ஜிதும் அமையும்”.
L-R 3. Naleem Hajiar 6. A.M.A. Azeez 7. A.M. Ameen (Judge)
ஜாமிஆ நளீமிய்யாவின் பாடத்திட்டம் பற்றி, கையேட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இஸ்லாமியக் கல்வியுடன் பொதுக் கல்வியும் பயிலக் கூடிய விதத்தில் பாடத்திட்டம் அமையும். குர்ஆன், ஹதீது, இஸ்லாமிய சட்டக்கலை, இஸ்லாமியப் பண்பாடு, தத்துவ ஞானம், நாகரீகம், மதங்கள் நவீன சிந்தனைகள் தத்துவங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு என்பன பாடத்திட்டத்தில் இடம்பெறும். அத்துடன் பாடத்திட்டத்தை அமைப்பதிலும் காலத்துக்கு காலம் அதனைப் புதுப்பிப்பதிலும் இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற ஜாமிஆக்களின் படிப்பினைகளும் அனுபவங்களும் கருத்திற் கொள்ளப்படும். ஆங்கிலம் கட்டாயப் பாடம் என்பதுடன் இறுதி ஆண்டுகளில் அறபு போதனா மொழியாகவும் இருக்கும். எதிர்கால வாழ்கைக்குப் பயன்மிக்க வகையிலான பயிற்சிகளும் வழங்கப்படும்”.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கான முதல் மாணவர் தொகுதியை தெரிவுசெய்வதற்காக அன்றைய தேசிய பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு எழுத்துப்பரீட்சையொன்று 1973 ஜூன் 16 ஆம் திகதி சனிக்கிழமையன்று மருதானை ஸாஹிறாக் கல்லூரியில் நடைபெற்றது. மொழி, கணிதம், இஸ்லாம், பொது அறிவு ஆகியவற்றில் பரீட்சை இடம்பெற்றது. விண்ணப்பித்த மொழியிலேயே பரீட்சை எழுதவேண்டுமெனவும் கேட்கப்பட்டது. பரீட்சியில் சித்தியடைந்தோருக்கான நேர்முகப் பரீட்சை, வெள்ளவத்தை நளீம் ஹாஜியாரின் இல்லத்தில் 1973 ஜூலை மாதம் 9, 10, 11,16,17,18 ஆகிய ஆறு நாட்கள் இடம்பெற்றன. அதில் நானும் சித்தியடைந்தேன்.
நளீமிய்யாவுக்கு முதல் மாணவர் தொகுதியை தெரிவுசெய்வதற்கான பரீட்சை
மருதானை ஸாஹிறாக் கல்லூரியில் இடம்பெற்றபோது…
நேர்முகப் பரீட்சையை நடத்தியோரில் அறிஞர் எ. எம். எ. அஸீஸ், ஜாமிஆவின் முதல் அதிபர் மெளலவி யூ. எம். தாஸீன், அறிஞர் அஸீஸின் ஸாஹிராக் கல்லூரி மாணவன் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி, மெளலவி தாஸீன் அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஜாமிஆவைப் பொறுப்பேற்று வக்கீலுல் ஜாமிஆவாகப் பணியாற்றிய ஷாகுல் ஹமீத் பஹ்ஜி, நீதிபதி ஏ. எம். அமீன், மசூத் ஆலிம் சாஹிப், இலங்கை முஸ்லிம் மிஷனரி சங்க செயலாளர் அல்ஹாஜ் ஏ. சீ. ஏ. வதூத், மெளலவி ஏ. எல். எம். இப்ராஹிம், சீனன்கோட்டையை சேர்ந்த ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார் போன்றோர் குறிப்பிட்டு சொல்லக்கூடியோராவர். நளீம் ஹாஜியார் அவர்களும் அங்கு சமூகமளித்திருந்தார்.
நேர்முகப்பரீட்சையின் ஒவ்வொரு நாளும் அஸீஸ் பிரசன்னமாகியிருந்தார். அவரின் வசீகரித் தோற்றம் இன்றும் எம் நெஞ்சில் நிழலாடுகின்றது. அங்கு அவர் ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் வினாக்ளைத் தொடுத்து கலந்துரையாடியதனை இன்றும் நாம் நினைவுகூருகின்றோம்.
ஜாமிஆ நளீமிய்யாவின் முதல் தொகுதி மாணவர்கள் சுட்டிலக்க வரிசைப் பிரகாரம்
ஜாமிஆவில் அவரை சந்தித்த மாணவர்கள், முதல் தொகுதி மாணவர்கள் மட்டுமே. ஏனெனில் ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களில், 24 நவம்பர் 1973 இல் அன்னார் இறையடிசேர்ந்தார்கள். ஜாமிஆ நளீமிய்யாவுக்கு வந்து சுமார் ஒரு வாரகாலம் பேருவலையில் தங்கி நிற்கவேண்டும் என்ற எண்ணத்துடன், அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோதே அவர் காலஞ்சென்றார்.
இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிட்ட அல்லது தொலைத்துவிட்ட ஒரு பொக்கிஷம் ‘அறபுத்தமிழ்’. அறிஞர் அஸீஸ் அவர்கள் அறபுத்தமிழைப் பாதுகாப்பதில் அதிக கரிசனை செலுத்தினார். ஒலிக்குறி ஒருமைப்பாடு, அறபுத்தமிழ் அகராதி, அறபுத்தமிழ் இலக்கியக்கோவை என்பன எமது அத்தியாவசியத் தேவை என வலியுறுத்தியவர் அவர். ஒருமுறை ஜாமிஆ நளீமிய்யாவின் தாபக அதிபர் எமது மதிப்புக்குரிய மெளலவி யூ. எம். தாஸீன் (நத்வி, அல் அஸ்ஹரி) அவர்கள், அறிஞர் அஸீஸ் அவர்களை எமது வகுப்பறைக்கு அழைத்துவந்தார். நல்ல உயரமும் சிவந்த நிறமும் சிரித்த முகமும் கொண்ட அவர், அனைவரையும் கவரத்தக்கவர். அவரின் கையில் ஒரு அடுக்கு புத்தகங்கள் இருந்தன. ‘அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என்ற அவரின் நூலே அவை.
மெளலவி யூ. எம். தாஸீன் (நத்வி, அல் அஸ்ஹரி)
முதலில் நூல் அறிமுகம் இடம்பெற்றது. தொடர்ந்து, அஸீஸ் அவர்கள் தனது கரங்களினால் எம் அனைவருக்கும் அதனை அன்பளிப்பு செய்தார். நாம் அவருக்கு கைகளைக்கொடுத்து, சலாம்செய்து அவற்றைப் பெற்றுக்கொண்டது இப்போதும் நினைவிலுள்ளது. இறுதியில் எமது அதிபர் மெளலவி யூ. எம். தாஸீன் அவர்கள் எம்மில் ஒருவரை நன்றியுரைக்கு அழைத்தபோது நாம் அமைதியாக இருந்தோம். அப்போது எமது வகுப்புத்தோழர், புத்தளத்தை சேர்ந்த அபுல்பசர் பெயர்கூறி அழைக்கப்பட்டார். அவர் நன்றியுரை வழங்கினார்.
ஜாமிஆ நளீமிய்யாவின் திட்டத்தில், ஜாமிஆ நூலகத்திற்கு அஸீஸ் சிறப்பிடம் அளித்ததாக அஸீஸ் காலத்து ஸாஹிறாவின் ஆசிரியரும், எழுத்தாளரும், நூலகருமான எஸ்.எம். கமால்தீன் குறிப்பிடுகின்றார். நளீமிய்யா நூலகத்தைத் திட்டமிடும் வாய்ப்பு அஸீஸ் அவர்களினால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அஸீஸின் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் தனக்குக் கிடைத்ததாக, கமால்தீன் சிலாகித்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
L-R S.M. Kamaludeen 2. A.M.A. Azeez
எ. எம். எ. அஸீஸ் அவர்கள் தனது மரணத்தின் பின்னர் விலைமதிக்க முடியாத, அவரது நூல்களை ஜாமிஆவுக்கு வழங்கிய வள்ளலாவார். எமது வகுப்பறைக்குப் பக்கத்துக்கு அறையில் அவை அடுக்கப்பட்டு ஜாமிஆவின் நூலகம் தொடங்கப்பட்டது. அவரின் பென்சில் குறிப்பு இல்லாத எந்தவொரு புத்தகமும் அதில் இருக்கவில்லை. அப்போது நாம் அவற்றை எடுத்து ஆச்சரியமாகப் பார்ப்போம். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. நூர் அமீன் அவர்கள், அப்போது ஜாமிஆவின் நூலகராக இருந்தார். ஜாமிஆவின் தாபக அதிபர் மெளலவி யூ. எம். தாஸீன் அவர்களும் தனது நூல்களை ஜாமிஆவுக்கே அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஜாமிஆ நளீமிய்யா பற்றிய கையேடு பின்வருமாறு குறிப்பிடுகின்றது.” ஜாமிஆவின் நூல்நிலையம் உசாவுதலுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்ற வகையில் அமையும். ஜாமிஆவின் விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமன்றி இலங்கையிலும் வெளிநாட்டிலுமுள்ள உலமாக்களினதும் அறிஞர்களினதும் உபயோகத்திற்கும் இந் நூல்நிலையம் துணைபுரியும். இந்த நூல்நிலையத்தில், அறபு மொழியிலும் ஏனைய மொழிகளிலுமுள்ள இஸ்லாமிய நூல்கள் இடம்பெறும். அறபுத் தமிழ் நூல்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் இந்த நூல்நிலையத்தில் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதற்கும் விசேஷ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அறிஞர் அஸீஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போலவே, ‘விரிவுரையாளர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சேர்த்துக்கொள்ளப்படுவர்’ என ஜாமிஆ பற்றிய அறிமுகக் கையேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1975 காலப்பகுதியில் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலிருந்து ஷேய்ஹ் அப்துல் பத்தாஹ், ஷேய்ஹ் இப்ராஹிம் அல் மலீஹ் ஆகிய இரு விரிவுரையாளர்கள் ஜாமிஆவில் கற்பிப்பதற்காக வருகை தந்தனர். எனினும் அதற்கு முன்னரே இலங்கையில் வசித்துவந்த எகிப்தியரான அப்துல் கலீல் அயாத் என்பவரும் ஜாமிஆவுக்கு வருகைதரு விரிவுரையாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷேய்ஹ் அப்துல் பத்தாஹ்
முஸ்லிம்களின் வீட்டு மொழியாக அறபைக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டியவர் முகம்மது காசிம் சித்தி லெவ்வை ஆவார். அறிஞர் அஸீஸூம் அறபு மொழிக்கு முக்கியத்துவம் வழங்கினார். எகிப்தினால் வசீகரிக்கப்பட்டவர் அஸீஸ். முஸ்லிம்கள் எகிப்துடன் தொடர்புகொண்டவர்களாக இருக்கவேண்டுமென்ற அவா அவருக்கு இருந்தது. ‘ஜாமிஉல் அஸ்ஹர்’ என்ற தனது கட்டுரையில், எகிப்து இஸ்லாத்தையும் மேல் நாட்டு நாகரீகத்தையும் இணைப்பதில் ஆர்வம்கொண்டுள்ளது. நம் முன்னோர் ஆங்கிலக் கல்வியை வெறுத்தபோது கலை, கலாசார பாரம்பரியம் கொண்ட எகிப்திலிருந்து ஒறாபி பாஷா குழுவினர் இலங்கை வந்து, அவ்வெண்ணம் தவறானது என்று சுட்டிக்காட்டி கல்வியில் ஆர்வமூட்டினர், என்ற கருத்துக்களைத் தெரிவிக்கும் அவர், அரசினர் பாடசாலைகளில் இன்று அறபு மொழிக்கு முக்கியம் வழங்கப்பட்டுள்ள நிலையினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு, மிஸ்ரில் பரவிவரும் போதனா முறைகளைப்பற்றியும் அங்கு புதிதாக இயற்றப்பட்டுள்ள புதிய அறப்புப் பாடப் புத்தகங்களையும் பற்றிய அறிவு எமக்கு அவசியமாகும் என்றும் குறிப்பிடுகிறார்.
A.M.A. Azeez and his wife in Egypt in 1947
அஸீஸ் எகிப்துக்கு நான்கு தடவைகள் சென்றுள்ளார். 1947 இல் அவர் எகிப்து சென்றபோது பத்துவார காலம் அங்கு தங்கியிருந்தார். இக்காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியத்தினால் நான்கு மாணவர்கள் அஸ்ஹர் கலாநிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் அலவி அபுல்ஹசன் ஆவார். அகில இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதித் தலைவர் என்றவகையில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு அப்போது சென்று அதன் தலைவர், ஷெய்குல் அஸ்ஹர் ஷெய்கு முஸ்தபா அப்துர் றாஸிக் உட்பட பலருடன், பல்கலைக்கழகக் கலைத்திட்டம் பற்றியும் இலங்கை எகிப்திய தொடர்புகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் அறபு மொழிக் கல்வி வரலாற்றில் இது ஒரு மைல் கல்லும் திருப்புமுனையுமாகும்.
“ஒறாபி பாஷா, மகுமூது சாமிபாஷா போன்றவர்களுடனும் மகல்ல தீவைச் சேர்ந்த தனவந்தர் இப்ராகீம் தீதியுடனும் கலந்தாலோசித்த பின் சில மாணவர்களை எகிப்துக்கனுப்புவதன் மூலமே இலங்கையின் அரபு மொழிக் கல்வியை விருத்தி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, அதற்கான முயற்சி செய்த முகம்மது காசிம் சித்தி லெவ்வையின் முயற்சியும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியது. வெற்றியடையாத முகம்மது காசிம் சித்தி லெவ்வையின் இம் முயற்சிதான் அஸீஸின் பிற்கால முயற்சிக்கு ஆரம்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது என்று கூறுவதும் தவறாகாது” என ஏ.எம். நஹியா அவர்கள் தனது ‘அஸீஸூம் தமிழும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
1947 இல் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியத்தினால்
அஸ்ஹர் கலாநிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நால்வரும்
A.M.A. அஸீஸ்,ஷெய்குல் அஸ்ஹர் ஆகியோர் முன்னால் அமர்ந்துள்ளனர்.
ஷெய்குல் அஸ்ஹருடன் இலங்கை மாணவர்கள் நால்வரும்
ஆரம்பகாலங்களில் ஜாமிஆ நளீமிய்யா எகிப்திய தூதுவராலயத்துடன் நெருங்கிய உறவைக்கொண்டிருந்தது. 1973 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஞாயிறன்று ஜாமிஆ நளீமிய்யா , கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அன்று எகிப்தியத் தூதுவர் கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா அவர்களும் சமூகமளித்திருந்ததுடன் பின்னரும், அவர் அறிஞர் அஸீஸ் அவர்களுடன் நளீமிய்யாவுக்கு வருகைதருவார்.
ஜாமிஆ நளீமிய்யா தாபகர் நளீம் ஹாஜியார் அவர்கள் அதிதிகளை வரவேற்கிறார்.
L-R நளீம் ஹாஜியார், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எகிப்தியத் தூதுவர் கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா ஆகியோர்
ஹாஜியார் அவர்களால் அதிதிகள் வரவேற்கப்பட்டு அழைத்துவரப்படுகின்றனர்
பிரதம அதிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் உரையாற்றுகிறார்.
ஜாமிஆ நளீமிய்யாவின் அங்குரார்ப்பணத்தின் போது
முதல் தொகுதி மாணவர்கள் முன்னால் அமர்ந்துள்ளனர்.
எகிப்தியத் தூதுவர் கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா அவர்கள் இலங்கையிலிருந்து நாடு திரும்பும்போது ஜாமிஆவில் பிரியாவிடை நிகழ்வொன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய தூதுவர், “இந்த ஜாமிஆவில் பயின்ற சிறந்த மாணவர்கள் சிலருக்கு எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தமது மேற்படிப்புக்காக வசதிகள் செய்து கொடுக்கப்படும்” எனக்குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய எ. எம். எ. அஸீஸ் அவர்கள், இந்த நிகழ்வு 1901 இல் இலங்கை முஸ்லிம்கள் ஒறாபி பாஷாவுக்கு அளித்த பிரியாவிடையைத் தமக்கு நினைவூட்டுவதாகத் தெரிவித்தார். ஜாமிஆவின் தந்தை, நளீம் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், ஜாமிஆவின் முதலாவது அதிபர் மெளலவி யு. எம். தாஸீன் அவர்களும் உரையாற்றினார். (தினகரன் 6.9.1973)
L-R
Seated
- Nooman Hajiar 2. Mukthar Haj. 3. M.H.M. Hibathullah Haji 4. Abul Hasan Haji 5. Dr. M.A.M. Shukri 6. Shahul Hameed Bahji 7. A.M.A. Azeez 8.Egyptian Ambassador HE Khalifa Abdulaziz Austhafa 9. Naleem Hajiar 10. Thasim Moulavi 11. Buhari moulavi 12. Razik sir (Mawanella) 13. Justice A.M. Ameen 14. Wadood Haji 15. …. 16. Rauff Haji 17. Hamza Haji (Car Hamza)
Standing
- ….. 2. Sulaiman Haji 3. Muhammaed Hanifa Haji (Mannanif0 4. Kaleel Haji 5. Faiz Haji 6. M.H.M. Hamza Haji 7. Mohamed Faiz Haji 8. Basheer doctor 9. ……. 10. Yakooth Haji 11. Marzook Haji 12. …. 13. Haroon Haji 14. Anver Haji 15. Mohame Cassim Master (V.P. Al Humaizara) 16. Ameer Haji 17. Sanoon Haji 18. …. 19. Nilam Haji (Jamiah staff)
L-R 1. A.M.A. Azeez 2. A.M. Ameen (Judge) 3. Naleem Hajiar 4. HE Ambassador Khalifa abdulaziz Musthafa
5. Dr. U.L.M. Basheer (China fort) 6. Al Haj Razik Yusoof (China fort)
1965 இல் கொழும்பு, ஐக்கிய அரபு ஸ்தானிகராலய உதவியுடன் எமது அதிபர் மெளலவி தாஸீன் அவர்களுடன் சிலர் அல் அஸ்ஹரில் கல்வி பயின்றனர். ஜாமிஆ நளீமியாவில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு அதிபர் மெளலவி தாஸீன் (அல் அஸ்ஹரி) மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
வலது கோடியில் நிற்பவர் அதிபர் மெளலவி தாஸீன், (நத்வி, அல் அஸ்ஹரி)
1978 இல் நளீமியாவின் முதல் தொகுதி மாணவர்களான ஜே.எம். உவைஸ் (கொழும்பு), ஏ.எம். அபுவர்தீன் (மாத்தளை), வை. அபுல்பஷர் (புத்தளம்) ஆகியோரும் ஜாமிஆவின் உப அதிபர் மெளலவி ஏ.எம்.சீ.எம்.புஹாரி (மன்பஈ – புத்தளம்), விரிவுரையாளர் எஸ்.எல்.எம். ஹசன் (கிண்ணியா) ஆகியோரும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு, வக்ப் அமைச்சின் புலமைப்பரிசில் பெற்று சென்றனர். சொற்ப காலத்துக்குள் மற்றுமொரு மாணவரான எம்.ஐ.எம். நியாஸும் (பொல்கஹவெல) அவர்களுடன் இணைந்துகொண்டார். ஜாமிஆவே அவர்களை அங்கு அனுப்பிவைத்தது. முதல் தொகுதி மாணவர்களான, அபுல்பஷர், எம். ஐ. அப்துர் றஹீம் (மூதூர்) ஆகியோர் ஜாமிஆவின் கற்கையைப் பூர்த்திசெய்து பட்டத்தையும் பெற்றனர். அஸ்ஹர் சென்றோர் கலைமானிப் பட்டத்தைப் பெற்றனர். அபுவர்தீன், கலாநிதிப் பட்டம்பெற்ற நளீமிய்யாவின் முதலாவது மாணவராவார்.
L – R 1. நளீம் ஹாஜியார் 2. …………. 3. J.M. உவைஸ் (எகிப்தில் இலங்கைத் தூதுவராலாலய இல்லத்தில்)
L-R 1. ஏ.எம். அபுவர்தீன், 2. வை. அபுல்பஷர், 3. எம்.ஐ.எம். நியாஸ்
எம். ஐ. அப்துர் றஹீம்
மெளலவி எஸ்.எல்.எம். ஹசன்
1973 ஆகஸ்ட் 19 ஆம் திகதி ஞாயிறு அன்று ஜாமிஆ நளீமிய்யா உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் 1973 ஜூன் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெற்ற வை.எம்.எம்.ஏ. யின் 23 வது வருடாந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு எ.எம்.எ. அஸீஸ் உரையாற்றும்போது பின்வருமாறு தெரிவித்தார். “இஸ்லாத்தை நன்கு தேர்ந்து, இஸ்லாத்திற்காக வாழ்வை அர்ப்பணித்து, ஜூம்ஆப் பள்ளிவாசலை சமுதாயத்தின் ஒரு மையமாக ஆர்வத்துடன் ஏற்படுத்தக்கூடிய உலமாப் பெருமக்களின் புதிய பரம்பரையொன்று உருவாகுவதை நாம் உற்சாகத்துடன் ஆதரிக்கவேண்டும்”
ஜாமிஆ மாணவர்கள் மார்க்கக் கல்வியையும் உலகக் கல்வியையும் சமசந்தர்ப்பத்தில் பெறவேண்டும். அரசாங்க அதிபர்கள் போன்ற உயர் பதவிகளை வகித்து, பள்ளிவாசல்களில் கொத்பாப் பேருரைகளையும் நிகழ்த்தவேண்டும் போன்ற சிந்தனைகளை ஜாமிஆவில் விதைத்தவர்கள் அறிஞர் அஸீஸ் அவர்களும் அதிபர் தாஸீன் அவர்களுமாவர். இச்சிந்தனைகளால் உருப்பெற்ற செயல், இன்று வளர்ச்சியடைந்து வியாபித்துள்ளது. ஜாமிஆவின் இரண்டாம் தொகுதி மாணவர்களில் ஒருவரான கனேவல்பொலயை சேர்ந்த ஹபீப் முஹம்மத், இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து, மூதூர் உதவி அரச அதிபராக சேவையாற்றியபோது, 03.09.1987 அன்று அதிகாலை சுபஹ் தொழுகையை நடத்துவதற்கு, பள்ளிவாசலுக்கு நடந்துவரும்போது சுடப்பட்டார். சமூகத்துக்காகத் தனது உயிரை தியாகம்செய்த நளீமி அவர்.
ஹபீப் முஹம்மத்
ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட வழிகாட்டி அறிஞர் எ. எம். எ. அஸீஸின் மரணத்தின் பின்னர் எஸ்.எம். கமாலுத்தீன் இவ்வாறு எழுதுகின்றார். ‘அன்றென்னைப் பயணக் குசலம் விசாரிக்க வந்த அஸீஸ் மூன்றே தினங்களில் மீளாததொரு பயணத்தை மேற்கொள்வாரென அவ்வேளையில் நான் எவ்வாறு அறிவேன்! இறை நாட்டம் அவ்வாறு அமைந்திருந்தது! அன்றைய சந்திப்பின்போது நெடுநேரம் குதூகலமாகக் “கதையளந்தார்” அஸீஸ். நளீமிய்யா முதல் “நாட்டியவாதம்” வரை – மெடொஸ்வீட் முதல் மட்டக்களப்பு மாவட்ட வயல்வெளி வரையிலான தனது எண்ணக் குவியலையெல்லாம் கொட்டித்தீர்த்தார் அவர். இன்றதனை என்னும்போது அன்றவர், அந்தளவு கதைத்துத் தீர்த்தத்திற்கு எதோ இனம்புரியாத காரணத் தொடர்பு காணவிளைகிறது மனம்’.
அஸீஸின் மறைவையொட்டி ‘அறிஞர் அஸீஸூம் ஜாமிஆ நளீமிய்யாவும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், எஸ்.எம். கமால்தீன் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.”இவ்வறிவுப்பீடத்திற்கான அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட பின்வரும் கட்டுரை மருதானை முஸ்லிம் சங்க வெளியீடான முஸ்லிம் மித்திரனில் ‘மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை’ என்ற தலைப்பில் வெளியானது. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் வேருவளை சீனன்கோட்டையில் இன்று ஆல்போல் வளர்ச்சியுற்றுக் காணும் ஜாமியா நளீமியாவின் அமைப்பிற்கான திட்டமிடுதலைத் தனது வாழ்நாளின் இறுதிப் பெரும் பணியாக ஏற்று இறைப் பொருத்தம் கண்டார் அறிஞர் அஸீஸ்”.
“முஸ்லிம்களின் அறிவுத்துறையில் வளர்ச்சிக்காகவும் அவர்தம் சமூக வாழ்வு வளம்பெறவும் அஸீஸ் அளித்த புத்தூக்கம் அளப்பரியதாயுள்ளது. உண்மையில் அஸீஸ் போன்றோர் மரணிப்பதில்லை. மக்களின் உள்ளங்களிலே ஒளியேற்றி வைப்பதற்காக ஓயாது உழைப்பவர்கள். மக்களுக்காகப் பணிபுரிவதாகப் பாசங்கு செய்பவர்களைப்போலன்றி அதி உன்னத வாழ்வுநிலையை எய்துகிறார்கள்”. பாகிஸ்தான் நாட்டின் தலைசிறந்த அறிஞரும் சட்டவல்லுனரும் எழுத்தாளருமான ஏ.கே. புரோஹி அவர்கள் அஸீஸ் பற்றிய ஞாபகார்த்த உரையொன்றில் குறிப்பிட்ட கருத்துக்கள் இவை.
ஏ.கே. புரோஹி அவர்கள், 07.01.1976 அன்று ஜாமிஆவுக்கு சமூகமளித்து, நிருவாகத் தொகுதிக் கட்டிடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தார். அவ்வமயம் அவர் ஆற்றிய உரையின்போது கூறிய கதை இது. “ஒரு மாணவன் ஓர் ஆசிரியரிடம் கற்றான். அவரே அம்மாணவனின் முதல் ஆசிரியருமாவார். கற்றல் நடவடிக்கைகளின் இறுதிநாளன்று அவ்வாசிரியர், ஒரு காகிதத்தில் ‘ஒன்று’ என்ற இலக்கமிட்டு அதனை அவனுக்கு வழங்கினார். அம்மாணவன் இரண்டாவது ஆசிரியரிடம் பயின்று முடிந்தபோது இரண்டாவது ஆசிரியர் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒரு பூச்சியத்தைப் போட்டு அக்காகிதத்தை அவனிடம் கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது கற்பித்தலின் இறுதியில் ஒவ்வொரு பூச்சியம் போட்டனர். பெறுமதி அதிகரித்துச் சென்றது. ஒரு நாள் அம்மாணவன் தனது முதலாவது ஆசிரியரை சந்தித்தபோது, தொகை அதிகரித்திருப்பதை பெருமையோடு கூறினான். அப்போது அவ்வாசிரியர், அந்தக் காகிதத்தைப் பெற்று, தான் முதலாவதாக எழுதிய ஒன்று என்ற இலக்கத்தை அழித்துவிட்டு அம்மாணவனிடம் அதனை மீளக்கையளித்தார்”.
ஜாமிஆ நளீமிய்யா மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஓர் ஆளுமை எ. எம். எ. அஸீஸ்
இஸட். ஏ. ஸன்ஹிர்
உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை)
அல்லாஹுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.
Special thanks to https://azeezfoundation.com/
புகைப்படங்கள் தகவல்கள் பெற உதவிய அனைவருக்கும் நன்றிகள்