ஜூன் 08 – உலகப் பெருங்கடல்கள் தினம்

உலகப் பெருங்கடல்கள் தினம்

( M.U.M. SHAJAHAN )

ஐக்கிய நாடுகள் சபையினால் 2008 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தினம் உலகப் பெருங்கடல்கள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. நாம் பூமியில் வாழ்வதற்கு கடலின் பங்கு எல்லைகளற்றது என்பது உண்மையான விடயமாகும். கண்டங்களை ஒருங்கிணைத்தல், போக்குவரத்தை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளில் பெருங்கடலின் பங்கு மிகப்பெரியது. காலநிலை மாற்றங்களை சீர்படுத்தல் மற்றும் எமது உணவுத் தேவைகளை நிறைவேற்றல் என்பவற்றில் கடலின் பங்கு கணக்கிட முடியாதது. உளரீதியில் எமது உண்ணதமான மகிழ்வுக்கு, உயிரோட்டமான பொழுதுபோக்கிற்கு கடலின் பங்கை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. மனிதனோடு மட்டுமன்றி ஏனைய உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் தன்னை அர்ப்பணிக்கின்றது.

இவ்வாறான மாபெரும் இறைவனின் இயற்கைக் கொடை மனித நடத்தைகளால் மாசுபட்டுக் கொண்டிருப்பதை தாய்நாட்டில்கூட தற்போது நாம் காண்கின்றோம். அன்றாட செய்திகள் உணர்த்தும் கல்கிஸ்சை கடலோர நிலையைப் பார்க்கும் போது நாம் கண்ணீர் வடிக்கின்றோம். கழிவுகளை கடலுடன் கலந்து விட்டு நாம் நிம்மதியாக இருக்கின்றோம் என்று கனவு காண்கின்றோம். நிச்சயமாக பின்னாலில் அது எம் கனவுகளையே கலைத்துவிடும் என்பதை தற்போது ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்.

2020 ஆம் ஆண்டின் கருப்பொருளான நிலையான கடலுக்கான கண்டுபிடிப்பு என்பதற்கிணங்க கடலின் மகிமையைப் போற்றுவதற்கான, அதன் நிலையான தன்மையைப் பேணுவதற்கான செயற்திட்டங்களைக் கண்டுபிடிப்பதில், அவற்றை அறிமுகப்படுத்தி செயற்படுத்துவதில் நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம்.

இயற்கை வளத்தைப் பாதுகாத்து எம் வாழ்வை ஒளிமயமாக்குவோம்.