தில்லையடி கிராமத்தின் ஓர் முத்து முன்னாள் உறுப்பினர் சலீம்கான்
எம்.எஸ்.எம். அப்பாஸ் (Newton Isaac)
.
‘பின் படிய’ என்றுதான் சிங்களத்தில் சொல்வார்கள். நமது பாசையில் சொல்வதானால் ‘பிச்சைக்கார சம்பளம்’. மக்கள் சேவைக்கென்றே பிறந்த அந்தநாள் உள்ளுராட்சி உறுப்பனர்கள் நீண்ட காலமாக சம்பளமில்லாத சேவையைச் செய்து வந்து பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 300 ரூபா அலவன்ஸைப் பெற்றுத்தான் தமது காலத்தையும், நேரத்தையும் நகரத்துக்காக தத்தம் செய்தார்கள்.
.
அத்தகையோரின் வரிசையிலே மிச்ச சொச்சமாக இருக்கும் (இருக்கிறார்களோ தெரியாது) இரண்டொருவரைப் பற்றிப் பேச வந்து நேற்று பாரூக் காக்காவைப் பற்றி எழுதினேன். இன்று முன்னாள் நகர சபை உறுப்பினர் சலீம்கான் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்ய உத்தேசித்தேன்.
.
வாழ்வோர் மத்தியிலே இன்னும் வாழ்வதற்குப் பாக்கியம் செய்துள்ள முன்னாள் நகர சபை உறப்பனிர் சலீம்கானுக்கு இப்போது வயது 70. அவர் முன்னாள் நகர பிதா பிஸ்ருல் ஹாபி அவர்கள் தலைவராக இருந்த 09 உறுப்பினர்களைக் கொண்ட நகர சபையின் 02 ஆம் வட்டாரத்துக்கான (தில்லையடி) உறுப்பினராக 1985 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு சபையில் நுழைந்து ஆறு வருடங்கள் மாத்திரமே தனது சேவையை வழங்கிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
.
‘இந்த சாக்கடை அரசியல் நமக்கு ஒத்துவராது’ என்பதுதான் அரசியலை விட்டு ஒதுங்க சலிம்கான் என்னிடம் சொன்ன விளக்கம். வாஸ்தவம்தானே! நயினா மரிக்கார் அவர்களோடு ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியலைச் செய்துவிட்டு கௌரவத்தோடு ஒதுங்கிக் கொண்ட கௌரவத்துக்குரியவர்.
.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் நயினா மரிக்காரின் வலது கை என்றால் அது மிகைப்படுத்தலாக அமையாது, யாராவது கிறுக்குத்தனம் செய்பவர்கள் கொச்சைப்படுத்தினால் அன்றி. சலீம்கான் ஒரு திறமையான உள்ளுர் அரசியல் வாதி. மக்கள் சேவையை உள்ளுர உணர்ந்து செயற்பட்டவர். மர்ஹும் நயினா மரிக்கார் அவர்கள் சலீம்கானை பெரிய பெரிய இடங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருந்ததால் பெரிய பெரிய காரியங்களை தனியான ஒரு நகர சபை உறுப்பினராக மிக இலகுவாக அவரால் சாதிக்கக் கூடியதாக இருந்தது.
.
தில்லையடி வீட்டுத் திட்டம், தில்லையடி பாடசாலைக்கான 14 ஏக்கர் விளையாட்டுத் திடல், இரண்டாம் வட்டாரம் மற்றும் அதைச் அண்மித்துள்ள பகுதிகளில் வாழும் முஸ்லிம் சமுகத்துக்கான நாலரை ஏக்கர் மையவாடி, இப்படி அவர் செய்த பாரிய சேவைகளின் பட்டியல் விரிவதைப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் கால காலமாக ஓலைக் கூரையின் கீழ் வாழ்ந்தோருக்கு ஓட்டு வீடுகளில் வசிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொடுத்தது என இப்படி சலீம்கானின் தனி நபர் சாதனைப் பட்டியல் நீள்கிறது.
.
இலங்கை மத்திய வங்கி உத்தியோகத்தரான சலீம்கான் இப்போது சேவையில் இருந்து ஓய்வு பெற்று புத்தளம் போள்ஸ் வீதியில் பாத்திமா மகளீர் கல்லூரிக்கு அருகாமையில் எழுதுகருவிகள்- காகிதாதிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு மிக அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறார்.
.
சபை அறிக்கைகளை மிகக் கவனமாக, வரி வரியாக வாசித்து அடுத்த கூட்டத்துக்கு வரும்போது கேள்விகளுடன் வரும் உறுப்பினர் என்றால் என்னைப் பொறுத்தவரையில் அது சலீம்கான் மத்திரம்தான். தர்க்க பூர்வமாக, யதார்த்தமாக, அறிவு பூர்வமாக எந்த விடயத்தையிட்டும் வாதப் பிரதி வாதங்கள் நடத்துவார். இவருடைய காலத்தில் நகர சபைக் கூட்டங்கள் எப்போதும் கல கலப்பாகத்தான் இருக்கும்.
.
இன்னும் கூட இளமைத் தோற்றத்துடனும், மன, உடல் பலத்துடனும் இருக்கும் சலீம்கான் மாநகர பிரதிநிதித்துவத்துக்கு மிகவும் பொருத்தமானவரானாலும் அவர் இப்போது ஓய்வின் சுவையை அனுபவித்த வண்ணம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எப்போது எமது நல்வாழ்த்துக்களும், பிரார்தனைகளும். நலமே இன்னும் பல்லாண்டு வாழ்க.
.
WAK
