நான் நினைத்த புத்தளமும் நான் கண்ட புத்தளமும்..!

-FM சஜீர் – (இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் – அநுராதபுர மாவட்டம்)

புத்தளத்திற்கும் எனது ஊரான கலாவெவயிற்கும் பல தொடர்புகள் பின்னிப் பிணைந்து ஆரம்ப காலத்திலிருந்தே காணப்படுகிறது. சிறுவயதில் ஒரு முறை புத்தளம் வரும் போது மனதிற்குள்ளே ஒரு வித பரவசம். புத்தளத்தை பற்றி காதால் கேட்டவைகளை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம். சிறுவயதிலேயே எல்லோருக்கும் இருந்த ஆர்வம் அது ஒருபுறம்.

உண்மையிலேயே புத்தளத்தின் மண்வாசனையும் புத்தளத்திற்கே உரித்தான உப்பளம், புத்தள களப்பு (நீரேரி) தற்போதய நுரைச்சோலை அனல்மின் நிலையம், காற்றாலை என்பவற்றை தொலைக்காட்சிகள் மூலம் கண்டு ரசித்து அழகு பாராட்டியது இன்னொரு புறம்.

அதன் பிற்பாடு இறைவனின் நாட்டத்தால் புத்தளத்திலேயே திருமணம் முடிக்கலாயிற்று. அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்ப காலத்தில் புவியியல் சம்பந்தப்பட்ட அழகை மாத்திரம் ரசித்த என் உள்ளம் தற்போது அரசியல் சார்ந்த ரசனையோடு புத்தளத்தை உற்று நோக்க வைத்தது.

புத்தளத்தின் பல அபிவிருத்திகளை பார்கையிலும் கேட்கையிலும் அதிமாக கே.ஏ. பாயிஸ் என்ற உச்சரிப்புக்களே அதிகமாக காதில் விழுந்தது. அந்தப் பெயர் உச்சரிப்பை மெய்யாக்க பல அபிவிருத்திகளை காணக்கூடியதாகவும் இருந்தது.

அதையும் தாண்டி இன்னொரு புறம் சில பல குறைபாடுகளையும் புத்தளத்தின் இழப்புக்களையும் சற்றே உணர்ந்தேன்.அந்த இழப்புக்கு முக்கிய காரணமாக ஒரு ஆழுமையுள்ள பாராளுமன்ற பிரதிநிதியை புத்தள மக்கள் இழந்து நின்றமையையும் உணர்ந்தேன்.ஒரு கட்டத்தில் என் மனதிற்குள்ளே எண்ணிக் கொண்டேன் புத்தளம் மாவட்டத்தின் தலைநகர் புத்தளமா? அல்லது சிலாபமா? என்ற அளவிற்கு புத்தளத்திற்கு கிடைக்க வேண்டியவை அங்கே கிடைக்கப்பெற்றுவிட்டது.

ஒரு மாவட்டத்தின் மாவட்ட பெரிய வைத்திய சாலை மாவட்டத்தின் தலை நகரான புத்தளத்தில் இல்லாமல் வேறு ஒரு நகரில் அமைக்கப்பட்டமையை தெரிந்து கொண்டேன். மாவட்ட இளைஞர் கழக கட்டிடமும் புத்தளத்தில் காணமுடியவில்லை அது எங்கே என்று தேடினால் அதுவும் வேறொரு நகரிலே காணப்பட்டது. தொழில் சம்பந்தப்பட்ட கோட்டாக்களிலும் சில முரண்பாடுகள் தென்பட்டது. இப்படி பலதரப்பட்ட இழப்புக்களையும் உணர்ந்தேன். நான் அறியாமல் இன்னும் பல இருக்கலாம்.

கச்சேரி அதாவது மாவட்ட செயலகமும் கூட புத்தளத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கான சதிகளும் கடந்த காலங்களில் இடம் பெற்றதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அது மட்டுமல்ல ஆங்கிலேயர் காலத்தில் வடமேல் மாகாணத்தின் தலைநகராக புத்தளம் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அதற்கான வரைபடம் அதற்கான சான்று என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எது எப்படி இருந்த போதிலும் புத்தளம் இழந்தவைகளில் மீள் பெற்றுக் கொள்ள கூடியவைகளும் இருக்கின்றன. மீள் பெற்றுக் கொள்ள முடியாதவையும் இருக்கின்றன. அல்லது அதற்கு மாற்றீடாக பெறக்கூடியவையும் இருக்கின்றன.
இருப்பவைகளை சரி பாதுகாத்துக் கொள்ள பலம் தேவைப்படுகிறது. இவை புத்தளத்தின் பலம் வாய்ந்த அரசியல் சக்தி ஒன்று இருந்தால் மாத்திரமே சாத்தியம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

புத்தளம் இழந்த உரிமைகளை புத்தளத்து மக்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க புத்தளத்து மக்கள் ஒன்றினைந்து தேர்ந்ததெடுத்த புத்தளத்தின் பாராளுமன்ற சக்தி அதற்காக எந்தளவு முயற்சிகளை எடுத்திருக்கின்றது என்றால் அது கேள்விக்குறியே.

இன்னொருபுறம் அபிவிருத்திகள் என்பது வெறுமனே கட்டிடங்கள் மாத்திரம் அல்ல அது முழுமை பெறுவது மக்களின் உரிமைகளையும் மண்ணின் உரிமைகளையும் வென்றெடுப்பதிலே தங்கியுள்ளது.

மனதிற்குள் இன்னுமோர் சந்தேகம் அடிக்கடி எழுவதுண்டு. இத்தனை இழப்புக்களையும் தேசிய தலைமைகள் என்று சொல்கின்றவர்களால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லையா அல்லது சுயநல அரசியலுக்காக கண்டும் காணாமலும் இருந்து விட்டார்களா? புத்தளத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் வாதிகள் புத்தளத்தோடு அன்னியோன்னியமாக இருந்தும் பல வருடங்களாக அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருந்தும் கூட புத்தளத்தின் உரிமைகளை மீட்டெடுக்க சிறிதளவேனும் உண்மையாக முயற்சி செய்திருப்பின் சில இழப்புக்களை தடுத்து உரிமைகளை பாதுகாத்து கொள்ள முடிந்திருக்கும் அல்லவா.

அது மாத்திரமல்ல நாம் விட்ட பிழை, HS இஸ்மாயில் மற்றும் நெய்னா மரிக்கார் போன்ற தலை சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய சிறந்த அரசியல் தலைமைகள் போன்றோரை தெரிவு செய்வதில் தேடிக்கண்டுபிடிப்பதில் புத்தள மக்களாகிய நாம் தவறிழைத்து விட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பல வருடங்களாக தவமிருந்து மக்கள் ஆணையொன்றின் மூலம் பெற்றெடுத்த பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்பதா அல்லது அதற்கு மாற்றீடாக ஆளுமையுள்ள ஒரு சக்தியை தேர்ந்தெடுப்பதா? ஆளுமை உள்ள சக்தி என்பது புத்தள மக்களிற்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் குறைபாடுகள் அரசியல் வழிகாட்டுதல்களின் குறைபாடுகளும் ஒரு வகையில் புத்தளத்தை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

WAK