நோன்புப் பெருநாள் விழாக்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை
(எம்.யூ.எம்.சனூன்)
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் நோன்புப் பெருநாள் விழாக்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் (03-04-2023) புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
புத்தளம் மாவட்ட செயலாளரினால் நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பெருநாள் விழாக்கள் தொடர்பான திட்டங்களையும் முன்வைத்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் பெருநாளைத் தொடந்து நடத்தப்படும் விழாக்களில் பௌத்த, கத்தோலிக்க மற்றும் இந்து சமய மக்களும் இன,மத பேதமின்றி பங்குபற்றிய வந்துள்ளனர்.
எனவே புத்தளம் மாவட்டத்தில் சகல மதத்தவர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்கின்றமையால் சகோதர மதத்தவர்களின் பாரம்பரியங்களை அறிந்திருப்பதுடன் அதற்கு மதிப்பளிக்கவும் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கு விளக்கமளித்தார்.
அந்த வகையில் எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் பெருநாள் விழா நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. புத்தளம், கல்பிட்டி மற்றும் மதுரங்குளி நகரங்கள் அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
புத்தளம் நகரத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் புத்தளத்திலும் கல்பிட்டி பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் நுரைச்சோலையிலும் மதுரங்குளி பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் கடையாமோட்டை பகுதியிலும் நடத்தப்படவுள்ளன.
இந்த பெருநாள் விழா அரச நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
WAK