பசுமையான நினைவுகளில் பால்யவயதுகால குறும்புகள்

பாடசாலையில் நாம் கற்க ஆரம்பித்தலிருந்து பால்ய வயதுகால குறும்புகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. இதில் எனது நினைவுகளில் மனதில் பதிந்த சிலவற்றை…

(அபூஹனீபா நவுசாத்)
Read and enjoy don’t follow

பாடசாலையில் நாம் கற்க ஆரம்பித்தலிருந்து பால்ய வயதுகால குறும்புகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. இதில் எனது நினைவுகளில் மனதில் பதிந்த சிலவற்றை வாசகப்பெருமக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பால்ய வயது நட்பில் நாங்கள் ஆரேழு பேர் இருந்தோம். அதோடு தனிப்பட்ட முறையில் எனக்கு, என்னையும் சேர்த்து ஏகப்பட்ட வானரங்கள். அந்த வயதில் நான் படிக்க விரும்பியதில்லை. அப்படியொரு தருணத்தில் ‘அசோகா தியேட்டரில் அடிமைப்பெண் படம். கட் அவுட்டில் உருவியவாளுடன் MGR நிற்கிறார். கீழே சாய்ந்தபடி வில்லன் அசோகன். ஆஹா இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும். 2.30 PM மேட்னி ஷோ. அன்று வெள்ளிக்கிழமையும் கூட. ஜூம் ஆ முடிந்து துஆவுக்கும் இருக்காமல் ‘ரணிங்ல’ வருகிறேன். நாமதான் மொதல்ல டிக்கெட் என்று நினைத்து.

தியேட்டர் அருகில் வந்து பார்த்தால் ஏகப்பட்ட கூட்டம் தியேட்டரை சுற்றி. கூட்டத்தில் பார்க்கிறேன் இரு பள்ளித்தோழர்கள். பொரித்த கடலையை கொறித்தப்படி ஒருவன். ஐஸ்கிரீமை சாப்பிட்டபடி ஒருவன். ஜூம்ஆ தொழாமலேயே வந்து இருக்கிறார்கள். நான் தான் தவறு செய்துவிட்டேனே அடுத்த வெள்ளி மேட்னிக்கு இதை கொஞ்சம் கவனத்தில் எடுக்க வேண்டும். கூட்டத்தில் முண்டியடித்தபடியே உள்ளே நுழைகிறேன்.

இல்லை, இல்லை கூட்டத்துக்கு இடையில் அகப்பட்டு அக்கூட்டம் என்னை தள்ளிக்கொண்டு போய் கவுண்டருக்குள் நுழைத்ததால் உள்ளே போய் டிக்கட் வாங்கினேன். நண்பர்களில் ஒருவனும் பின்னால் வந்தான். இருவரும் சேர்ந்து முன் ‘பெஞ் கலரியில்’ அமர்கிறோம். எங்கடா ஐஸ்கிரீம் சாப்பிட்டவன், டிக்கட் கிடைக்கவில்லை, திரும்பி போய்விட்டான் என்றான் கடலை கொரித்தவன்.

அவனுக்கு ஜூம்ஆவும் இல்லை, படமும் இல்லை. பாவம்டா. நாளை க்ளாசில் வைத்து இஸ்லாம் பாடத்திற்கு படக்கதையை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ளலாம். காரணம் இஸ்லாம் பாட சேர் மிகவும் நல்லவர். எதையும் கண்டுகொள்ள மாட்டார். வானரங்கள் சேட்டை இப்படித்தான் அக்காலங்களில்.

நெடுங்குளத்திற்கு சனி, ஞாயிறு குளிக்க போவோம். 10 மணிக்கு போய் 3 மணிக்கு குளத்திலிருந்து வெளிவருவோம். ஸ்கூல் பரீட்சை வந்தது. 8ம் வகுப்பு, நாளை ஆங்கில பாடம். ‘கிரஸெண்ட்’ தியேட்டரில் ஆங்கிலப்படம். Gold Finger ஜேம்ஸ்பேண்ட் படம். ‘சேன் கொனரி’ என் அபிமான நடிகர். இப்படத்தை தவற விடவே முடியாது. எனது வீட்டில் தான் பத்து, பன்னிரண்டு பேர் பரீட்சைக்கு படிப்பார்கள். 12 மணிக்கு தான் படிப்பு முடியும். இது தான் சந்தர்ப்பம்.

9 மணி ஷோ தான் பொருத்தம். ஆனாலும் ஒரு பிரச்சினை. வயது வந்தவர்களுக்கு மட்டும். இப்போது என்ன செய்வது.

டிக்கட் கொடுக்கும் அப்பாவுக்கு இரவில் கண்பார்வை கொஞ்சம் கம்மி. ஒருவாறு டிக்கட் கிடைத்தது. முழுவதையும் மூடிக்கொண்டு முத்தக்காட்சிகள்’ இதுதான் அந்த கால வயதுவந்தவர்களுக்கு மட்டும். பல தடவை சிறுவன் என மண்டையில் குற்றி துரத்திவிட்டிருக்கிறார்கள். எழுதும் போது பண்பு தவறவிடக்கூடாது தான். ஆனாலும் இப்படி எழுதக்காரணம் உண்டு.இந்தக்கால வானரங்களின் கைகளில் உள்ள போன்களிலோ…! இறைவா நீ அவர்களை மன்னிக்க வேண்டும். பரிணாம வளர்ச்சி இதிலும் உண்டு போலும்.

பரீட்சை முடிந்தது. பணக்கார நண்பன் ஒருவன் முதலிடம் வந்தான். பால் விற்றுப்படித்த நண்பன் இரண்டாவது வந்தான். அடியேன் தான் 39 மாணவர்களில் மூன்றாவது. ஒரு சில எண்ணிக்கை தான் மூவருக்கும் வித்தியாசம். பரீட்சை வந்தால் விழுந்து விழுந்து படிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

எதிர்மறையாக ஏதாவது செய்தால் தான். பரீட்சையை ஓரளவுக்காவது எழுதமுடியும். இப்படி ஒரு புதிர்க்குணம். மற்றது இரத்தத்திலும் கொஞ்சம் கல்வி இருந்தது. குடும்ப சூழலும் சீராக இல்லாததால் அதை ‘பேலன்ஸ்’ பண்ண விளையாட்டிலும் குறும்பு சேட்டையிலும் தான் மனம் நிறைந்திருந்தது. ஆம் எல்லாமே விதிப்படியே நடந்தேறின.

நோன்பு காலங்களில், மஹ்ரிப், கஞ்சி மறக்காத நினைவுகள். மவ்லாம் மக்காம் பள்ளியில் (இப்போதைய மர்கஸ்) ஹாஜியார் அப்பாட காலம். அவரின் ஒளிமிகுந்த வதனம். பேஷ் இமாமாக இருந்தார்கள். கஞ்சி ஊற்றுவது வைப்பது எல்லாமே நாங்கள் தான். சம்பவ தினம் கஞ்சிக்குடித்து நோன்பு திறந்து தொழுகைக்கு நிற்கிறோம்.

மனப்பாதிப்பு உள்ள ஒருவர் ஓவராக கஞ்சி குடித்துவிட்டு 3வது சப்பில் தக்பீர் கட்டினார். அந்த சப்பின் ஓரத்தில் நான். ருகூவுக்கு போனபோது எடுத்தாரே வாந்தி. முதல் சப்பும் நாசம், சோற்றுப்பருக்கைகள் சிந்தி இரண்டாவது சப்பும் அதைவிட நாசம். மூன்றாவது சப்பு சுமாரான நாசம். தொழுகை சீர்குலைந்தது. ஆனாலும் வாந்தி எடுத்தவர் தக்பீரை விடவில்லை. நூலுக்கு தொழுகை.

கோபமாக எழுந்த பெரியவர்களில் சிலர், பாய்ந்து ‘அடியென்றால் சொல்லி வேலை இல்லை’ . அதோ என் பால்ய நண்பன் பால்விற்று படித்தவன். (இவரை பற்றிய ஆய்வு ஒன்றை இன்ஸா அல்லாஹ் எழுதவுள்ளேன்). வருகிறான்.

வந்தவன் என்னிடம் “குடியியல் ஹோம் வேர்க் செய்துவிட்டாயா” என்று கேட்டான். நான் அவனிடம் “குடியிருந்த கோயில்” படம் பார்க்க போவோமா என்று கேட்க நினைத்திருந்தேன். ” இந்த மடையன்” எப்போதுமே இப்படித்தான் எங்கு என்னை சந்தித்தாலும் பாடம் படிப்பு சம்பந்தமாகவே தான் பேசுவான். அன்றைய நட்பு.

எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். பால்ய வயதில் அந்த நெஞ்சில் நிறைந்த நினைவுகளை. ஆம் இன்றும் அதே நண்பர்கள். அதே நட்பு. நட்பு எவ்வளவு ஆழமானது, மானசீகமானது என்பதற்கு உதாரணம் நாங்கள்.

பால்ய வயதில் படிப்பை பற்றி பேசியவர்கள் இன்று எப்போது சந்தித்தாலும் சமுதாயத்தை பற்றி பேசுகிறார்கள். தேசிய ரீதியில் இயங்குபவர்கள், தோட்ட முதலாளிகள், துறைசார் நிபுணர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், வியாபார சீமான்கள், அதனோடு இறைவனின் சோதனையை ஏற்றுக்கொண்ட நோயாளிகள், அனைவருடனும் சற்று உலக அனுபவம் பெற்ற அடியேனும், அந்த நாள் நினைவுகளில்.

இந்த நாள் வரையில்லை, இன்ஸா அல்லாஹ் இறுதிவரையும் இணைபிரியாதவர்களாவோம்.

WAK