பண்பாடற்ற செயற்பாட்டை எதிர்கால சமூகத்திற்கு கடத்தாதிருப்போம்

இவ்வாறான செயற்பாடுகள் ஒரு சிலருக்கு ‘முசுப்பாத்தி’, கொண்டாட்டம் என இருந்தாலும் அநேகருக்கு முகம் சுளிக்கவைக்கின்றது. படித்த…

(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)

நோன்பு பெருநாள் முடிவடைந்துவிட்டது. இனி மற்றுமொரு விருந்தோம்பல் நம் சமூகத்தில் ஆரம்பித்துவிடும். ஆம் பேச்சுவார்த்தைகள் முடிந்த திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக ஆரம்பமாகும். இருமனம் இணைகைகளில் சந்தோஷங்கள் கொடிகட்டி பறக்கும். இருமனம் மாத்திரமில்லை இரு குடும்பங்கள், பல வாழ்த்துக்கள். ஆனாலும் ”மாப்பிள்ளை கடத்தல்” எனும் ஓர் பண்பாடற்ற செயற்பாடு எம் சமூகத்தில் ஊடுருவி இருப்பதால் அத்தனை சந்தோஷங்களுக்கும் காணாமல் போகின்றது.

மாற்று மாத சமூகத்தில் இவ்வாறான செயற்பாடுகள் வெகு அரிதாகவே இருக்கையில் பண்பாடுமிக்க எம் சமூகத்தில் இது கரைபுரண்டோடியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் ஒரு சிலருக்கு ‘முசுப்பாத்தி’, கொண்டாட்டம் என இருந்தாலும் அநேகருக்கு முகம் சுளிக்கவைக்கின்றது. படித்த சமூகமாக, பண்பாடுள்ள சமூகமாக எமக்கு இது ஒரு கருப்பு புள்ளி.

திருமணம் என்பது ஒரு அழகான தருணம். புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் தருணம். அதனை இரு வீட்டாரும், அந்த தம்பதியினரும் நினைவுகளாக செதுக்கவே நினைப்பர். அவர்கள் செதுக்கையில் நீங்கள் சில்லு சில்லுகளாக அதனை உடைக்கலாமா.?

நண்பர்களுக்கிடையில் இது ஒரு கொண்டாட்டமாக தெரிந்தாலும் இதற்கு பின்னால் பெரும் பெரும் துயரங்கள் ஒழிந்து கொண்டிருக்கின்றன. விளையாட்டாக நினைத்து செய்கின்ற விடயங்கள் வினையாகி போன வரலாறுகளும் சமூகத்தில் காணப்படுகின்றன. இவைகள் எதிர்கால சந்ததியினருக்கு கடத்தப்படுமிடத்து இன்னும் எம் சமூகம் பின்தள்ளப்பட்டுக்கொண்டே போகும்.

இவைகள் தொடர்பில் மாப்பிள்ளை,பெண், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார், நண்பர்கள், உறவினர்கள் என தூரநோக்கோடு சிந்திக்க வேண்டிய கடப்பாடு அனைவரும் இருக்கின்றது. ஒரு நாள் கூத்து தானே இதிலென்ன இருக்கிறது என கேட்பது காதில் விழுகின்றது.

இரவில் மாப்பிள்ளையை (கடத்தி) அழைத்துக்கொண்டு போய் ஆற்றில், நக்கல் நையாண்டி தனம் செய்தவாறு குளித்துக்கொண்டிருக்கையில் துரதிஷ்டவசமாக மாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி போன சம்பவமும் நம் சமூகத்தில் தான் பதிவாகியுள்ளது. இதனால் இரு குடும்பங்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டு நிரந்தர பகையாகி போயுள்ளது. எத்தனை எத்தனை கனவுகளோடு அந்த திருமணம் நடைபெற்றிருக்கும். அத்தனை கனவுகளும் மண்ணோடு மண்ணாகி போய்விட்டதற்கு யார் பொறுப்பேற்பர். ஒரு ‘குமர்’ பிள்ளைக்கு கல்யாணம் வரம் பார்ப்பது என்பது இலகுவான காரியமென்றா நினைக்கிறீர்கள்.

வாழாமலே வாழா வெட்டியாக போன அந்த பெண்ணின் கண்ணீர் உங்களை சும்மா விடுமா.? குடும்பத்தினரின் சாபம் தான் உங்களுக்கு வந்து சேராது போய்விடுமா.?

திருமணம் முடித்த அந்த இரவு என்பது அவர்களது வாழ்க்கையின் முக்கியமான தருணம். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சந்தித்து சந்தோசத்தை, இன்னோரன்ன விடயங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு அழகிய தருணம். அவர்கள் இருவருக்குமான அந்த தருணத்தை வேறு எவரும் பறித்து கொள்ள முடியாது. அது அவர்களுக்கானது. அவர்களின் பதிய வாழ்க்கைகான அடித்தளம். அந்த தருணத்தில் அவர்களின் படுக்கை அறையில் நண்பர்களால் செய்யப்பட்ட அருவருக்கத்தக்க, அசிங்கமான அலங்காரங்களால் சந்தோஷமான அந்த தருணம் சின்னாபின்னமாகி திருமணம் விவாகரத்தில் போய் நின்ற வரலாறும் எம் சமூகத்தில் தான்.

வாழ்க்கை ஆரம்பிக்கவே இல்லை. ஒரு நிமிடத்தில் முடிவடைந்துவிட்டது. இதற்கு அந்த நண்பர்கள் தான் பொறுப்பு கூறுவார்களா.? வெறுமனே நாங்கள் ‘ஜோக்’காக தான் செய்தோம் என்று கடந்து சென்று விடமுடியாது. உங்களுக்கிடையிலான அந்த ஜோக் அவர்களுக்கிடையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

ஐந்து விரல்களும் ஒன்றுக்கொன்று வேறுபடத்தானே செய்யும். காலவோட்டத்தில் எத்தனை எத்தனையோ விடயங்கள் மாறுகின்றன, மாற்றப்படுகின்றது. அந்த வரிசையில் இப்பண்பாடற்ற செயற்பாடும் மாற்றப்பட வேண்டும். சும்மாவே காதி நீதிமன்றில் எத்தனையோ கணக்கான விவாகரத்து வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இவற்றுள் இச்செயற்பாடும் ஒரு காரணம்.

ஒரு திருமணம் நடைபெறும் போது பெற்றோர்கள் எவ்வாறானதொரு மனநிலையில் இருப்பார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். எந்த சங்கடமும் இல்லாமல் அந்த நிகழ்வுதனை நிறைவேற்ற நிம்மதியற்று அங்கே இங்கே என்று ஓடி கொண்டிருப்பர். அதனையெல்லாம் நீங்கள், திருமணம் முடித்த அடுத்த நாள் அந்த தந்தை அயர்ந்து, நிம்மதியாக உறங்கும் போது காண்பீர்கள். சும்மாவே அது சரியில்லை, அழைத்த முறை சரியில்லை, சாப்பாடு அப்படி இல்லை, இப்படி இல்லை என ஆயிரம் குறைகள். அவ்வாறாதொரு நிலையில் இந்த ‘மாப்பிள்ளை கடத்தல்’ எனும் செயற்பாடு வேறு. அவர்களின் நிம்மதியை உருகுலைக்கும். நாளை நீங்களும் ஒரு பெற்றோர் அதனை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

கொஞ்சம் நேர ‘முஸ்பாத்தி’ என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரே ஒரு பெண் பிள்ளை, அவளுக்கு பார்க்காத வரனே இல்லை. வயதும் போகின்றது. ஒவ்வொரு காரணங்களால் திருமணம் தடைபட்டுக்கொண்டே போகின்றது. அனைத்து குடும்பங்களும் அப்பிள்ளையின் திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் கல்யாணம் கைகூடி வருகின்றது. அந்த நாள் அவர்களுக்கு எப்படி இருக்கும். குடும்பமே சந்தோஷமாக இருக்கையில் ‘மாப்பிள்ளையை’ அழைத்து கொண்டு போய் விடுகிறார்கள்.

அந்தோ பரிதாபம் பிள்ளையின் ‘உம்மம்மா’ ஏக்கத்தில் கை,கால் இழுத்து பக்க வாதமாய் படுக்கையில். காலையில் தான் மாப்பிள்ளை வருகிறார். அந்த இரவில் வீட்டில் நடைபெற்ற ஒன்றுமே அவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.

அந்த பிள்ளை தான் என்ன செய்யும். ‘உம்மம்மாவை’ பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் முகத்தை மூடிக்கொள்கிறது. சந்தோஷமாக இணைய வேண்டிய இந்த திருமணதில் கடைசி வரையும் அந்த குற்ற உணர்ச்சி வலம் வந்துகொண்டே இருக்கும். அவளின் திருமணத்தை ஆவலோடு எதிர்பார்த்த குடும்பம் இப்போது வெறுப்பாக பார்க்கின்றது. காரணம் இந்த பண்பாடற்ற செயற்பாடு. இவைகளை இன்னும் இன்னும் நாம் தொடர முயற்சிக்காது இன்றே  நிறுத்த வேண்டும். ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

பண்பாட்டினை மாற்றுமத சகோதரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய நாம் இப்போது மாற்றுமத சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளோம். திருமணத்திற்கு முன்னர் மாப்பிள்ளை,பெண், பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் விஷேட பயிற்சி பட்டறை ஒன்று நடைபெறுகின்றது. அதனை போன்று ஒன்று எம் சமூகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

திருமணம் என்பது என்ன.? அவை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும், நகைச்சுவை, பகிடி எனும் போர்வையில் செய்யப்படும் தேவையற்ற செயற்பாடுகள், தொடர்பிலான விழிப்புணர்வு உள்ளிட்ட விடயங்கள் இப்பயிற்சி பட்டறையினூடாக வழங்கப்படுமிடத்து எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடலாம்.

மாப்பிள்ளை கடத்தல் – முஸ்லிம் சமூகம் – ஆரோக்கயமற்ற செயற்பாடு – விழிப்புணர்வு