பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம்
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் வைபவத்தின் புத்தளம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் (23-03-2023) புத்தளம் கல்விப் பணிமனை பிரதி கல்வி பணிப்பாளர் திரு.A.H.M. அர்ஜுன அவர்களின் தலைமையில் புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம்_கல்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும், கல்வி அமைச்சரின் புத்தளம் மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இணைப்பாளருமான அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி கல்வி பணிப்பாளர் திரு அர்ஜுன அவர்கள் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினரை புத்தளம் கல்விச்சமூகம் மட்டுமல்ல புத்தளம் கல்வி பணிமனையும் என்றும் நன்றியுடன் நினைவு கூறும் என்றார். பாராளுமன்ற உறுப்பினரின் சேவைகளை பாராட்டிய பிரதி பணிப்பாளர், அவரின் சேவை அனைவருக்கும் கிடைக்க தம்மாலான பங்களிப்பையும் நல்குவதாக கூறினார்.
இதில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தான் அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்தே தனது BCMH என்னும் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு பாடப்பைகள் மற்றும் அப்பியாச புத்தகங்கள் வழங்கி வருவதாகவும் இம்முறையும் தேவையுடைய மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10,000 புத்தகப் பைகளும் 10,000 அப்பியாச கொப்பிகளும் அடுத்த மாதம் அளவில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புத்தளம் தேர்தல் தொகுதியில் உள்ள சிங்கள மாணவர்களுக்கும் தனது சேவை கிடைக்க கல்விப் பணிமனை உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி மற்றும் உதவி கல்வி பணிப்பாளர்கள், புத்தளம் பிரதிபொலிஸ் மாஅதிபர் திரு. செனவிரத்ன, சென் மேரிஸ் தமிழ் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி உட்பட பாடசாலை அதிபர்கள், தொழிலதிபர் திரு.கபில, ஆனந்தா தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஊடகவியலாளர் திரு.நலின் ஆகியோரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
WAK