பாத்திமாவின் நிலை கவலையளிக்கின்றது

தற்போதைய நிலை கவலைக்குரியது. என்னிடம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்தவுள்ளேன், இதேவேளை கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் கவனத்திற்கும் இதனை கொண்டு செல்லவுள்ளேன் என அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பிரதி நிதிகளிடம் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.

“வடமேல் மாகாணத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையான புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் அடிப்படை தேவைகள் கூட நிவர்த்திக்கப்படாத நிலையில் காணப்படுவது கவலை தருகின்றது” என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமப்புற மற்றும் பிரதேச குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த தெரிவித்தார். மேலும், “பாடசாலையின் தேவைகள் தொடர்பில் தமது கவனம் செலுத்தப்படும்” என்றும் கூறியுள்ளார்.

புத்தளம் நகர பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் தையூப் முஜாஹிதுல்லாவின் அழைப்பின் பேரில் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு கடந்த புதன்கிழமையன்று (16.12.20) விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், பாடசாலையில் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதன் பின்னர், பாடசாலை அதிபர் உள்ளிட்ட முகாமைத்துவக்குழு, ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பிரதி நிதிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் இதன்போது அவர் கருத்துரைக்கையில் – வடமேல் மாகாணத்தில் மிகவும் முக்கியமான பாடசாலை இதுவாகும். இன்றைய எனது விஜயத்தின் போது எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்தவுள்ளேன், இதேவேளை கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் கவனத்திற்கும் இதனை கொண்டு செல்லவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக உள்ளக பாதைகள், பாடசாலை வகுப்பறைக்கட்டிடம், என்பன தொடர்பில் தேவையான ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதுடன்,விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மூலமாக பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை நவீன மயப்படுத்த தேவையான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Fathima Media Unit _FMU)

/Zan