புதையல் – 11 நெடுங்குளம் -01
புத்தளம் நகரின் பிரதான தாய்க்குளம். நெடும்குளம் என்று கூறுவதில் தவறு இல்லை தொன்றுதொட்டு இக்குளத்தின் ……..
நெடுங்குளம்
புத்தளம் நகரின் பிரதான தாய்க்குளம். நெடும்குளம் என்று கூறுவதில் தவறு இல்லை தொன்றுதொட்டு இக்குளத்தின் மூலமே நகர மக்கள் தமது நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இது புராதன குளமாகும். இதன் புராதன பெயர் “திஸ்ஸவேவ” என்பதாக “ப்க்ரேன் மோடர்” என்பவர் குறிப்பிடுகின்றார். அநூராதபுரத்தில் உள்ள திஸ்ஸ வேவ என்ற பெயர் எப்படியோ திசைமாறி இக் குளத்திற்கு குறிப்பிடபட்டிருக்க கூடும். புத்தளம் பிரதேசத்திலுள்ள பண்டைய பெயர்கள் யாவும் தமிழ் மொழியிலேயே அமைந்திருப்பதை காணும் போது இக்குளத்துக்கு “திஸ்ஸவேவ” என்ற சிங்கள மொழிச் சொல் வழங்கியிருக்க முடியாது என்பதை ஊகிக்க இடமேற்படுகிறது. எனவே முன்னைய காலத்திலிருந்து நெடுங்குளம் என்ற பெயரே வழங்கி வந்திருக்க முடியும் என்ற முடிவுக்கு வரலாம்.
முன்னைய சிங்கள அரசர்களின் ஆட்சியின் போது ஆங்காங்கே சிற்றரசுகள் இருந்தமையினால் இப்பகுதியில் ஆதிக்கம் செய்ய குறுநில மன்னன் ஒருவனாலேயே இராஜகாரிய வழமைப்படி இக்குளம் அமைக் கப்பட்டிருக்கக் கூடும்.
1895 ஆம் ஆண்டளவில் இக்குளத்திற்கு மீஒயாவின் ஒரு பகுதியாகிய வட்டக் கண்டல் ஆற்றிலிருந்து நீரைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதெனத் தெரிகிறது. ஆயினும் துரதிஷ்டவசமாக இத் திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. இத்திட்டத்திற்கு முன்னோடியாக நம் முன்னோர்களால் வட்டக்கண்டல் ஆற்றிலிருந்து இக்குளதிற்கு நீர் கொண்டு வந்திருக்கும் முறை ஆதாரமாக அமைத்திருந்தமை குறிப்பிடப்பட்டதக்கது.
வட்டகண்டல் ஆற்றிலிருந்து வெட்டப்பட்டுள்ள “நொத்தாரிஸ் அளை” என வழங்கப்படும் கால்வாய் முன்னோடித்திட்டத்தின் முதற்படியாகும். இக் கால்வாய் மூலம் நெடுங்குளம் வரையும் அமைந்துள்ள ஆறேழு நீர் நிலைகளையும் இணைத்து நெடுங்குளத்துக்கு நீர் கொண்டுவருவதே முன்னோர்கள் கையாண்ட முறையாகும். இதன் பிரகாரம் விலுக்கைக்குளம்,உடையார்வெளிக்குளம், சலங்கைக்குளம், பாவட்டமடு, ஆவணம், ஓட்டுவெளிக்குளம், நவன்டான்மடு, வட்டுகாய்வெளிக்குளம் முதலியவை இத்திட்டத்தால் பயன் அடைந்தன.
நாளடைவில் அநுராதபுர வீதியில் அமைந்துள்ள பெரியவில், சின்னவில் என்ற இரு வில்களிலிருந்தும் நெடுங்குளத்தை அடையும் நீர் போதியதாக இருந்தமையால் புராதன வட்டக்கண்டல் – நெடுங்குளம் இணைப்பு பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.
தற்போது மேற்குறித்த வில்களிலிருந்து குளத்துக்கு வரும் நீர் புகையிரதப்பாதை திறக்கபட்ட காரணத்தால் தடைபட்டு வேறுமார்க்கமாக அந்நீர் கடலை அடைகிறது.