புத்தளத்தில் அதிவேகமாக பரவி வரும் தொற்று நோய்

ஊரில் அதிவேகமாக பரவி வரும் தொற்று நோய் ஒன்றை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்கிறேன். Crystal Meth எனப்படும் “ஐஸ்” போதைப் பாவனை…

Shahri Rahmath Rizvi – Medical Student (University of Colombo)
.
எமது ஊரில் அதிவேகமாக பரவி வரும் தொற்று நோய் ஒன்றை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்கிறேன். Crystal Meth எனப்படும் “ஐஸ்” போதைப் பாவனை இன்று புத்தளத்தின் ஒவ்வொரு மூலையிலும் வேர் ஊன்றியிருக்கும் ஒருவகைப் புற்றுநோய் என்பது அனைவரும் அறிந்ததே.
.
11, 12 வயது பாலரைக் கூட விட்டுவைக்காத இக்கொடிய பதார்த்தம் உடலினுள் சென்று எவ்வளவு பாரிய சிதைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. எந்த ஒரு போதை மருந்தை உட்கொள்கையிலும்- பரிசோதித்துப் பார்த்தல், வழமையாக்கிக் கொள்ளுதல், உயர் அபாய பாவனை மற்றும் அடிமையாதல் எனும் நான்கு படிகளைக் கூறலாம். எவ்வாறாயினும் ஐஸ் உட்கொண்ட ஒருவர் அதற்கு அடிமையாகி சீரழிவதற்கு அதிக காலம் எடுக்காது. காகிதத்துண்டின் முனையில் தீயைக் காட்டுவது போல தான், முழுதாக பொசுக்கும் வரையில் விடாது. இதற்கு காரணம் போதை மருந்துகளில் மிகவும் ஆபத்தானது இந்த ஐஸ். மிகச் சிறிய அளவு உட்கொண்டாலும் போதை தலைக்கேறி ஒருவித மாய மயக்க நிலைக்கு நபரை இழுத்துச்செல்லும்.
.
மூளையில் இருந்து விடுவிக்கப்படும் ஹார்மோன்கள் சில, சமநிலை குழைக்கப்பட்டு கட்டுக்கடங்காமல் விடுவிக்கப் படுவதால் ஐஸ் பாவனையாளர்கள் சதாவும் Hyperexcited நிலையில் இருப்பார்கள்; உடல் நடுங்கிய நிலையில், சுயமாக சிந்திக்க, செயல்பட முடியாமல், ஆரோக்கியமாக சாப்பிட்டு, தூங்க முடியாமல், சுய கட்டுப்பாட்டை இழந்தவர்களாக காணப்படுவார்கள். சுருக்கமாக சைகோசிஸ் நிலையில் இருப்பார்கள். தொடர்ச்சியான sex driveஇன் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை கொள்ளை கடத்தல் குற்றங்களுக்கு மிக இலகுவாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
.
ஒரு கிராமின் விலை ரூபாய் 20 ஆயிரம் எனப்படும் போது அதற்கு அடிமையாகி இதுக்கும் ஒருவன் எவ்வழியிலாவது அதைப் பெற்றுக்கொள்ளத் தானே முனைவான்? சாதாரணமாக வாழவே முடியாதவர்களாக இருக்கும்போது, கல்வியில் தேறுவதற்கும் குடும்ப கஷ்டங்களை கடமைகளை உணர்வதற்கும் தொழில் புரிந்து சமூகத்தில் சிறப்பதற்கும் எவ்வாறு முடியும்?
.
தனது பிள்ளைகள் சீரழியும் போது பல கனவுகளுடன் அவர்களை பெற்று வளர்த்த பெற்றோர்கள் ஒருபக்கம் கண்ணீர் சிந்த, இவர்களால் கொலையுண்டவரின், களவாடப்பட்டவர்களின், அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் சிதைந்திருக்க, ஐஸ் விற்பவன்,விநியோகிப்பவன் மட்டும் சொகுசாக வாழ்வான். உயர்ரக காரில் வலம் வருவான். குடும்பத்துடன் வெளிநாட்டுற்கு சுற்றுலா செல்வான். தான் பணம் திண்பதற்காக ஏழைத்தாய்மாரின் இரத்தத்தை குடிப்பான்.
.
வருந்திப் படித்து, அலைந்து தொழில் தேடி, பிறரை வருத்தாமல் கௌரவமாய் வாழ்பவர்களின் வாழ்வில் இருக்கும் நிறைவும் மகிழ்வும் அவனுக்கு வந்துவிடவா போகிறது! இந்த களைகளை அகற்ற வழியேதும் இல்லையா?
.
WAK