புத்தளத்தில் கணித புரட்சி செய்தவர் “ஸ்பைடர் மேத்ஸ்” சிவகுமாரன் ஆசிரியர்

(Razmi Saheed)
.
1986 – 1989 வரை கற்பிட்டி அல் அக்ஸாவிலும் பின்னர் 1989 – 1997 வரை புத்தளம் சாஹிராவிலும் பல நூறு மாணவர்களுக்கு கணிதத்தையும், பௌதீகத்தையும் சொல்லிக்கொடுத்த நல்லாசான் இவர். 1998 – 2015 வரை புத்தளம் வடக்கு கோட்ட கல்விப்பணிமனையின் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய இவர், புத்தளத்தின் கணித ஆசிரியர்களை வளப்படுத்தும் பணியில் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு வந்தார். 2017 இல் யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் 2018 முதல் சேவையிலிருந்து ஓய்வு பெறும் 2023-01-27 வரை வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையிலும் கல்விப்பணியாற்றினார்.
.
இவர் புத்தளம் கணித வள மேம்பட்டு அமைப்பை உருவாக்கி, அதனூடாக புத்தளம் கல்வி வலயத்தின் கணித அடைவுமட்ட மேம்பாட்டுக்கு வழிவகுத்த பேராசான். ஒலிம்பியாட் கணிதத்தை மாணவர்களுக்கு ஆர்வமாகப் பயிற்றுவித்த சிவா சேர் அவர்கள், “ஸ்பைடர் மேத்ஸ்” என்ற நூலை ஆக்கி, அதன் மூலம் ஒலிம்பியாட் கணிதத்திற்கும், புத்தளம் கணித வள மேம்பட்டு அமைப்புக்கும் பெருமை சேர்த்த பெருந்தகை ஆவார். ஒலிம்பியாட் கணிதத்தை பயிற்றுவிப்பதில் அதீத ஈடுபாடு காட்டிவந்த சிவா சேர் ஒலிம்பியாட் கணிதத்திற்கான நாடறிந்த வளவாளராவார்.
.
கல்விப்புலத்தில் ஆசிரியர், பகுதித் தலைவர், ஆசிரிய ஆலோசகர், வினாத்தாள் மதிப்பீட்டாளர், பிரதம வினாத்தாள் மதிப்பீட்டாளர், பிரதம பரீட்சை மேற்பார்வையாளர் என பல்வேறு தளங்களில் திறம்படப் பணியாற்றிய இவர் ஒரு பன்முக ஆளுமை என்பது மிகையல்ல. இவரது சேவை ஓய்வு கல்விச் சமூகத்துக்கும், கணித ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாகும்.
.
சிவா சேர் அவர்கள் அன்பு, பணிவு, மனிதம், மனித நேயம், தன்னடக்கம் போன்ற உயர் பண்புகள் மூலம் ஆசிரியர்களின் உள்ளங்களை வளைத்துப்போட்ட, கணித ஆசிரியர்களை வளப்படுத்தும் பணியில் வெற்றிகண்ட ஓர் ஆளுமை.
.
புத்தளம் கல்வி வலயத்தில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலம் கல்விப்பணி புரிந்த வளவாளர் ஆவார். இவரது சேவை ஓய்வு நிரப்பப்பட முடியாத இடைவெளியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சிவா சேரின் வளமான வருங்காலத்திற்காக வாழ்த்துகின்றோம். பிரார்த்திக்கின்றோம்.
.
புத்தளம் பிரதேசத்தில் மூன்று தசாப்தங்களும், யாழ் மண்ணில் ஏழு வருடங்களுமாக 37 வருடங்கள் கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்று செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
.
தகவல் – புத்தளம் கணிதவள மேம்பட்டு அமைப்பு சார்பாக – செயலாளர்
.
WAK