புத்தளத்தில் முதல் ஆங்கில மகாகுரு செய்யது அஹ்மது அவர்கள்

(அபூஹனீபா நவ்சாத்)

புத்தளம் மக்களால் அன்பாக ‘சீனிமுத்து சேர்’ என அழைக்கப்படும் கண்ணியத்துக்குரிய ஆசான் செய்யது அஹ்மது அவர்கள் 09.07.1923 அன்று நடுத்தர குடும்பமொன்றை சேர்ந்த சேகு முஹம்மது, பல்கீஸ் உம்மா தம்பதியினரின் இரண்டாவது மைந்தனாகப் பிறந்தார்கள். தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் சென். அன்றூஸ் கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ் சென். பற்றிக் கல்லூரியிலும் ஆங்கில மொழிமூலம் பயின்றார்கள்.

புனித ஆசிரியர் தொழிலை புத்தளம் ஸாஹிறாவில் அதன் முதல் அதிபர் கல்தேரா அவர்களின் காலத்தில் ஆரம்பித்தார். 1945 இல் கல்பிட்டியில் முஸ்லிம் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் கிராமசபைத் தலைவர் ஏ.எம். மதார் மரைக்கார் அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் 01.09.1946 இல் இரு மொழிப்பாடசாலை ஒன்றை அங்கு அமைப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு 02.09.1946 இல் உத்தியோகப்பற்றற்ற முஸ்லிம் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஆரம்பிப்பதற்கான ஆசிரியராக புத்தளம் செய்யது அஹ்மது ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அன்னார் புது மாணாக்கரை சேர்வு இடாப்பில் பதிந்து பாடசாலையை ஆரம்பித்துவைத்தார்கள். இந்தவகையில் அப்பாடசாலையின் உத்தியோகப்பற்றற்ற முதலாவது அதிபர் எமது ஆசான் செய்யது அஹ்மது அவர்களே.

1949 காலப்பகுதியில் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆங்கில மொழிப் பாடத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற இவர் புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலை (காள ஸ்கூல்), மாத்தளை ஸாஹிறா கல்லூரி, கொட்டறாமுல்லை, சிலாபம் நஸ்ரியா மகா வித்தியாலயம் போன்ற இடங்களில் ஆசியராகப் பணியாற்றியுள்ளார். இறுதியாக அவர் சேவையாற்றியது புத்தளம் ஸாஹிறா கல்லூரியிலாகும். ஸாஹிறாவிலும் தான் கற்பித்த சில பாடசாலைகளிலும் அதிபராக அல்லது உப அதிபராகக் கடமையற்றியபோதும் பாடசாலையில் நிருவாகம் செய்வதைவிட,  மாணவர்களுக்கு கற்பிப்பதையே நேசித்த மாமனிதர் எமது ஆசானாவார்.

மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, சாரணர் அணி

செய்யது அஹ்மது ஆசான், நிற்போர் இடமிருந்து வலம் முதலாவது

எங்கள் செய்யது அஹ்மது ஆசானின் கற்பித்தல் முறை ஏனைய ஆசிரியர்களை விட வித்தியாசமானது. தனித்துவமிக்கது. ஒரு ஆங்கில வசனத்தை மிகத் தெளிவாக மூன்று முறை மொழிவார்கள். அதனை நாம் கிரகித்துக்கொண்டு வழிமொழிய வேண்டும். தம்மிடம் கற்கும் அனைத்து மாணவர்களும் தான் கற்பிப்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் எப்போதும் மிக உறுதியாக இருப்பார்கள்.

அவர்களுக்கே உரிய பாணியில் ஆங்கிலம் கற்பிக்கும்போது தாம் கொடுக்கும் தண்டனைகளை மாணவர்கள் தாங்கிக்கொண்டு உள உறுதி பெறவேண்டும் என்பதிலும் இறுதிவரை உறுதியாக இருந்தார்கள். அவரின் தண்டனை முறை வித்தியாசமானதும் சுவாரஷ்யம்மிக்கதுமாகும். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவர் கூறிய நகைச்சுவைகள், அவரிடம் கற்ற மாணவர்கள் அனைவரினதும் உள்ளத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்து இன்று வாழ்நாள் முழுதும் ரசித்து சிரிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அவற்றுள் சிலதை அன்பு வாசகப் பெருமக்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன். ஸாஹிறாவில் சுகாதார விழா ஒன்று நடந்த சமயம் பொய்க் கோபத்தோடு அவர்கள் நடந்துகொண்ட நகைச்சுவை இது.

சுகாதார விழாவுக்காக மாணவர்களின் உடற்பயிற்சி ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அப்போது உடற்பயிற்சி, அணிவகுப்பு என்பனவற்றுக்கான பயிற்சி ஆசிரியர் அவர்தான். பாடசாலை மைதானத்தில் ஆசிரியர் மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. அதன்மீது கம்பீரமாக ஏறிநின்று ‘கொமாண்டராக’ பயிற்சிகளை செய்துகாட்டி  உத்தரவிட்டு எம்மை பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். இரு ஆசிரியர்கள் அவருக்கு உதவியாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.

இப்போது முன்புறமாக வளையும் பயிற்சி. “ஸ்டார்டிங் பொசிஷன். பிகினிங் வன்” என்றவுடன் அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் எம்மால் முடியுமானவரை இடுப்பை முன்புறம் வளைத்து பயிற்சி செய்துகொண்டிருந்தோம். ஒரு மாணவன் உடம்பை வளைப்பதற்குப் பதிலாக தலையை மாத்திரம் முன்புறம் வளைத்தான். பயிற்சி முழுதும் அவன் உடம்புக்குப் பதிலாக தலையை மட்டும் முன்புறம், பின்புறம், பக்கவாட்டில் என அசைத்துக்கொண்டிருந்தான். அஹ்மத் சேரின் கடைக்கண் பார்வை அவன்மீது விழுந்தது.

உதவிக்கு நின்ற ஆசிரியரை அழைத்து “இது என்ன விழா?” என்று கேட்டார். அவர் “சுகாதார விழா” என்று பதிலளித்தார். உடனே எங்கள் சேர், “அங்கே பாருங்க. ஒரு ஹொஸ்பிட்டல் கேஸ்… நடப்பதோ சுகாதார விழா. எனவே அந்த கேஸை ஹொஸ்பிட்டலுக்கே அனுப்பிவிடுங்க” என்றார்.

ஒருமுறை, மூன்றாம் வகுப்பு தமிழ்ப்பாட வினாவொன்று. அதில் பகுதி (அ), பகுதி (ஆ) என இரு பிரிவுகள். (அ) வில் கந்தன், அப்பிள்பழம், பருந்தொன்று ஆகிய மூன்று சொற்கள் இருந்தன. (ஆ) பகுதியில் புறாவைத் துரத்தியது, ஓடிவந்தான், கீழே விழுந்தது ஆகிய சொற்கள் இருந்தன. இரு பகுதிகளையும் சரியாகப் பொருத்தவேண்டும். ஒரு மாணவன், அப்பிள்பழம் புறாவைத் துரத்தியது என எழுதிவிட்டான். தமிழ் பாட ஆசிரியர் அவனுக்கு நல்ல தண்டனை கொடுத்தார்.

அடுத்தது ஆங்கிலப் பாடம். எங்கள் ஆசான் வந்தார்கள். எல்லோரும் எழுந்து நின்றோம். தமிழாசிரியரிடம் அடிவாங்கிய மாணவன் அசதியில் தூங்கிவிட்டான். அஹ்மது சேர் அவனிடம் சென்றார். “அப்பிள் பழம், அப்பிள் பழம்” என்று கூப்பிட்டார். மாணவன் எழுந்து மிரண்டு விழித்தான். ‘உங்க வீட்டு தோட்டத்தில் உள்ள அப்பிள் பழங்கள் எல்லாம் சேர்ந்து  புறாக்களை துரத்துதோ?’ என்று பன்மையில் கேட்டார். வகுப்பு சிரிப்பொலியால் அதிர்ந்தது.

ஒருநாள் எங்கள் அஹ்மது சேர் ஒரு மாணவனிடம் அழகான சடை பூனைக்குட்டி ஒன்றை கேட்டார். சிலநாட்கள் ஆகியும் கொண்டுவரவில்லை. மாணவன் மறந்துவிட்டான். பிறகு மீண்டும் “எங்கே பூனைக்குட்டி” என்றார். அவன் மீன் மார்க்கட் சென்று அங்கு நின்ற, கண்களில் பீழையோடிய  சின்னஞ்சிறு மெலிந்த பூனைக்குட்டி ஒன்றைப் பிடித்துகொண்டுபோய் அவரில்லாத சமயம் பார்த்து வீட்டில் கொடுத்துவிட்டு வந்துவிட்டான். இச்செயலுக்காக அவன் இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டான்.

பின்னர் ஒருநாள் வகுப்புக்கு வந்த அவர் அம்மாணவனின் பெயரைக்கூறி, “இங்க வாங்க” என்றார். அவன் சென்றான். அவர், “நான் உங்கட்ட கேட்டது அழகான சடை பூனைக்குட்டி. நீங்க வேற ஒரு பிராணியை கொண்டுவந்து தந்திருக்கிறீங்க. அது வீடெல்லாம் அசிங்கப்படுத்தி இருக்கு. ஸ்கூல் விட்டதும் நேராக வீட்டுக்கு வந்து, அது போட்ட அசிங்கமெல்லாம் க்ளீன் பண்ணிட்டு, அத தூக்கிவந்த இடத்துலே கொண்டுபோய் விட்டுடுங்க” என்றார். அவரின் கட்டளைக்கு அடிபணிவதைத் தவிர வேறு வழி அக்குறும்புக்கார மாணவனுக்கு தெரியவில்லை.

சாதாரண சமயங்களில் மாணவர்களை வா, போ என்று அன்பாக அழைக்கும் அவர், மாணவர்கள் பிழை விடும்போது மாத்திரம் “இங்க வாங்க” என்பார். அவரது ஸ்டைல் அப்படி. ஒருமுறை இல்ல விளையாட்டுப் போட்டியில் எங்கள் ஆசிரியர் அறிவிப்பாளராக இருந்தார். அணிவகுப்பு நடந்தது. எங்கள் இல்லம் ‘ஜின்னா’. உயரமான ஒரு மாணவன்தான் எமது அணித்  தலைவன். அவன் இல்லக் கொடியை பிடித்தவாறு முன்னால் நின்றான். அணிநடை ஆரம்பமானது. ஒலிபெருக்கியில் எமது ஆசிரியரின் குரல் “லெப்ட் டேர்ன்” எனக் கம்பீரமாக ஒலித்தது. மற்றைய இரு இல்லங்களும் இடப்பக்கம் திரும்பி அணிகளை சீர்செய்து நடக்கத்தொடங்கின. எமது தலைவன் கொடியைப் பிடித்தவாறு நேராக சென்றுகொண்டிருந்தான். நாம் பின்னாலிருந்து கூச்சலிட்டும் அவனுக்கு விளங்கவில்லை.

எங்கள் ஆசிரியரும் பலமுறை “ஜின்னா ஹவுஸ் லெப்ட் டேர்ன்” என்று பெயர் குறிப்பிட்டு கூவிக்கொண்டிருந்தார். மற்ற இரு இல்லங்களும் அணிநடை முடியும் எல்லையை நெருங்கிவிட்டன. எங்கள் தலைவனோ நேராக நெடுந்தூரம் நடந்துவிட்டான். திறந்துகிடந்த மரக்கறி தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டான். அணிவகுப்பு சீர்குலைந்தது.

அச்சமயம் எங்கள் ஆசிரியர் அங்கிருந்த நிருவாகக் குழு உறுப்பினர்கள் எவருமே  எதிர்பாராவண்ணம் ஒலிவாங்கியைப் பிடித்தவாறே கதிரையை விட்டெழுந்து மேசை மீது தாவி ஏறி “ஜின்னா ஹவுஸ் லெப்ட் டே …… ன்” என்று முழங்கினார்.

அவரது கர்ஜனைக்கு அதிர்ந்துபோன கொடி பிடித்து முன்னால் போன எமது அணித் தலைவன், தான் மிதித்துக்கொண்டிருந்த வெண்டிக்காய் செடிகளில் இருந்து கால்களை உதறியவண்ணம் நினைவுக்கு வந்தான். இவ்வாறு நாம் அவருடன் வாழ்ந்த காலம் இடம்பெற்ற சம்பவங்களை இப்போது நினைத்தாலும் பசுமையாக உள்ளது. எம் அனைவருக்கும் அவை என்றும் பசுமையானவையே.

நாம் அவரிடம் ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்துடன் சரித்திரமும் கற்றோம். நெப்போலியனின் வரலாற்றை அடுத்தநாள் அனைவரும் கூறவேண்டும் என்பது எமது மதிப்புக்குரிய ஆசானின் கட்டளை. வகுப்பு மாணவர்களுள் அரைவாசிப்பேருக்கு ‘பிரான்சின் மன்னன் மறந்துபோனான்”.  இப்ப என்ன செய்வது… மதியூகமும் குறும்பும் நிறைந்த மானவனொருவன் எங்களை இதிலிருந்து காப்பாற்றுவதாகவும் ஆனால் தனக்கு எல்லோரும் சேர்ந்து ஐம்பது சதம் சேர்த்துத் தரவேண்டும் என்றும் கூறினான். ஒருவாறு 35 சதம் சேர்த்து அவனிடம் கொடுத்தோம்.

சரித்திரப்பாடம் தொடங்கியது. ஆசிரியர், எல்லா மாணவர்களையும் தன்னை சுற்றி நிற்குமாறு கூறினார். அவர் மத்தியில் கதிரையில் அமர்ந்தார். ஒருவனை விழித்து நெப்போலியன் சரித்திரத்தை கூறுமாறு உத்தரவிட்டார். அந்த மாணவன் சரித்திரத்தை கூறிக்கொண்டுபோய் ஓரிடத்தில் தடுமாறினான். அதேநேரம் நமது குறும்புக்கார மாணவன் நின்ற நிலையிலேயே மயக்கம்போட்டு முகம்குப்புற தரையில் விழுந்தான்.

இக்காட்சியைக் கண்ட எமது அஹ்மது ஆசிரியர் பதறியடித்து, அவரும் தரையில் உட்கார்ந்து தண்ணீர் கொண்டுவரச்செய்து முகத்தில் தெளித்து அப்போலி நடிகனை தனது மடியில் கிடத்தினார். குறும்புக்கார மாணவனோ நடிகர் திலகத்தை மிஞ்சிய நாடகம் போட்டான்.

“தம்பி என்னப்பா நடந்தது?.” “தல சுத்திட்டு சேர். காலைல சாப்பிடல சேர்”. டேய் மொசல் குட்டி” ! இது அவர் எனக்கு வைத்த செல்லப் பெயர். “பாய்ந்து போய் இவனுக்கு கெண்டீனில் பண், வடை, கோப்பி எல்லாம் வாங்கிட்டு ஓடிவா”. நானும் அவர்களின் கட்டளைப்படி முயல்போல பாய்ந்து வேகமாக சென்று அனைத்தையும் வாங்கிவந்தேன். “தம்பி இந்த பண்ணை சாப்பிட்டு கோப்பியை குடி”. “வாணாம் சேர்” பாசாங்கு செய்துகொண்டிருந்த மாணவன், ஆசிரியர் எம்மை பார்க்கும் சமயம்பார்த்து, அவன் என்னை நோக்கி, கோப்பியை அவனது வாயில் ஊற்றுமாறு சைகை செய்தான்.

சரித்திரப்பாடம் ‘சக்ஸஸ்’ ஆக முடிந்தது. ஆசிரியர் அவர்கள் வகுப்பிலிருந்து விடைபெறும்போது எங்கள் அனைவரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “இந்த மாணவன் கீழே விழுந்தானே, இவனுக்கு இரண்டு பக்கமும் நின்ற மாணவர்கள் யார்?. இருவரும் முன்னால் வாருங்கள். ஏன் விழுமுன் இவனைப் பிடிக்கவில்லை” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். மெலிந்த இரு நோஞ்சான் மாணவர்கள் முன்னால் வந்தார்கள். நமது ஆசிரியர் “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறிவிட்டு “அவன் இங்கால விழுந்திருந்தா, இவங்க உடைஞ்சிருப்பாங்க. அங்கால விழுந்திருந்தா அவங்க தெறித்திருப்பாங்க” என்றார். வகுப்பில் சிரிப்பொலி அதிர்ந்தது. ஆக, மற்றைய அனைத்து ஆசிரியர்களையும் விட அன்னாரின் ‘மெத்தெட் ஒப் டீச்சிங்’ வேறுபட்டு இருந்தது. இதயபூர்வமாகக் கற்பித்தார்கள்.

எமது ஆசான் ஒரு வேட்டைப் பிரியரும் கூட. தனது வீட்டுக்கு மாணவர்களை வரவழைத்து இலவசமாக ஆங்கிலம் கற்பித்த ஆசான் அவர். எம்மைவிட்டும் மறைந்த, தற்போது ஓய்வுநிலையில் இருக்கும் பெரும்பாலான அரச ஊழியர்களும் அக்காலப்பகுதியில் கற்றபலரும் அவரின் மாணாக்கர்களாவர்.  ஓய்வுக்குரிய வயதைத் தாண்டிய முதுமையிலும் தனது  இறுதிவரை அவர் ஸாஹிறாவில் ஆங்கிலம் போதித்தார்.

11.11.1979 இல் அன்னார் இறைவனடி சேர்ந்தபோது அவர்களது ஜனாஸாவுக்கு வந்த மாணவர் பெரு வெள்ளம், அவரது கற்பித்தல் முறையை, தண்டித்தலை, அந்த தண்டனைக்குள் ஒளிந்து மறைந்திருந்த ஒவ்வொரு மாணவனிலும் அவர் வைத்திருந்த உளப்பூர்வமான உளவியலுடன் கூடிய அன்பை உணர்ந்துகொண்டு அவர்களுக்காக இறைஞ்சியதை காணக்கூடியதாக இருந்தது.

சுற்றாடலை நேசிக்கும் அவர்களுடைய இளைய மகன் ஸியாத், தனது தந்தையாரைப்பற்றி குறிப்பிடும்போது, “எனது தந்தை காலமானபோது எனக்கு பதினோரு வயது. வீட்டில் ஆங்கிலம் கற்கும் சமயம் ஆங்கிலத்தில்தான் உரையாடவேண்டும். தமிழில் கதைத்தால் அவர் தரும் ‘பொக்கட் மணியிலிருந்து’ 25 சதம் பொது உண்டியலில் போட உத்தரவிட்டிருந்தார்கள்” என்பதை நினைவுபடுத்தினார்.

அஹ்மது சேரின் மனைவி மர்ஹூமா சித்தி லைலா ஆவார். சித்தி பரீதா ஆசிரியை , காமில், ரபீக், நிசார், அஷ்ரப், ரியால், நவாஸ், ஸியாத் என அவர்களுக்கு எட்டு மக்கள். வல்ல அல்லாஹ் புத்தளம் நகரின் கண்ணியத்துக்குரிய முதல் ஆங்கில மகா குருவான எங்கள் செய்யது அஹ்மது சேரை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

/Zan