புத்தளத்தில் முதல் முறையாக ஏலம் முறையிலான கால்பந்தாட்ட போட்டி

புத்தளத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட ஏலம் முறையிலான கால்பந்தாட்ட போட்டி தொடரில் புத்தளம் ரேகேன் அணி…

(ரூஸி சனூன்  புத்தளம்)
 .
புத்தளத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட ஏலம் முறையிலான கால்பந்தாட்ட  போட்டி தொடரில் புத்தளம் ரேகேன் அணி சம்பியனாகவும் புத்தளம், க்ளீன் புத்தளம் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
 .
22 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்காக நடாத்தப்பட்ட, “புத்தளம் பீ.என்.சி.எல். நியூ போன் சாம்பியன் லீக்” எனும் இந்த போட்டி தொடரினை புத்தளம் பீ.என்.சி.எல். தலைவர் எம்.ஏ.எம். அப்துல்லாஹ் மற்றும் அதன் அங்கத்தவர்கள், சஹீரியன்ஸ் 17 அமைப்பினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
 .
இந்த போட்டியின் அறிமுக நிகழ்வுகள் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றபோது புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக், லீக் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.
 .
சகல போட்டிகளும் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் அண்மையில் பகல் இரவு ஆட்டங்களாக இடம்பெற்றன. புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகியன இந்த தொடருக்கு உறுதுணையாக அமைந்திருந்தது.
 .
இப்போட்டிகளில் இஷாம் மரைக்கார், தஸ்லீம், ஷாபி, ஹிஸ்னுள், சதாம், யமீன், முலப்பர் ஆகிய ஏழு உரிமையாளர்களும் 84 வீரர்களும் பங்கு கொண்டார்கள்.
 .
இந்த போட்டி முதலில் ஏலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வீரர்கள் 84 பேரும் 12 வீதம் படி ஒவ்வொரு உரிமையாளரின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டு அதன் மூலம்  பீ.என்.சி.எல். குழுமத்திற்கு கிடைக்கப்பெற்ற மொத்த பணம் 406,000 ரூபாய் ஆகும். இதில் வீரர்கள் பலர் அதிக விலையில் சென்றார்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே வீரர்களான நப்ரி,ஜஹீர், சிப்கான்,பத்லான் மற்றும் ரியாசத் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.
 .
இந்த போட்டியில் ரெகேன், க்ளீன் புத்தளம், கொக்ரெய்ன் எப்.சி, லகூன் சிட்டி எப்.சி., முபாரக் எப்.சி., புத்தளத்தான் எப்.சி., அல் அஷ்ரக் எப்.சி. ஆகிய 07 அணிகள் பங்கேற்றன.
 .
இத்தொடரின் மூன்றாம் நான்காம் இடத்தினை முறையே கொக்ரெய்ன் எப்.சி. அணியும், லகூன் சிட்டி எப்.சி. அணியும் பெற்றுக்கொண்டன. போட்டிக்கு நடுவர்களாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நடுவர்களான எம். ஜமால் மற்றும் எம்.எஸ்.எம். ஜிப்ரிஆகியோர் பணியாற்றினார்கள்.
 .
சிறந்த ஆட்ட நாயகனாக ரேகேன் அணியின்  கோல் காப்பாளர் நிப்றாசும், அதிகூடிய கோல்களை பெற்ற அசாமும், சிறந்த கோல் காப்பாளராக மிஸ்ராபும் தெரிவு செய்யப்பட்டனர். அதிகூடிய விலையில் சென்ற 16 வீரர்களுக்கும் பண பரிசு வழங்கப்பட்டது.
 .
குறிப்பு : சாம்பியன் ரேகேன் அணி சிவப்பு நிற அங்கி.
                இரண்டாம் இடம் க்ளீன் புத்தளம் அணி அங்கி.
WAK
 .