புத்தளம் நகரமும் நுளம்புப் பெருக்கமும் – தொடர் 1

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – புத்தளம்] நுளம்பு என்றாலே ஒரு குட்டி பிசாசாக நினைத்துபலரும் பயப்படுகின்றனர். உண்மையில் இது ஒரு குட்டி பிசாசு…

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்  – புத்தளம்]

நுளம்பு

நுளம்பு ஒரு சிறிய உயிரினமாகும். இது பிற உயிரினங்களை தன் வாயினால் குத்தி இரத்தம் குடிக்கின்றது. பல்வேறு உயிரினங்களை இது தாக்கினாலும் கூட அவை யாவற்றையும் விட மனிதனே அதிகளவில் பாதிப்படைகின்றான்.

நுளம்பினால் மனிதன் உளவியல் ரீதியாக தாக்கப்படுகின்றான். நுளம்பு என்றாலே ஒரு குட்டி பிசாசாக நினைத்துபலரும் பயப்படுகின்றனர். உண்மையில் இது ஒரு குட்டி பிசாசுதான். ஏனெனில் ஒருவர் எங்கேயினும் தங்க வேண்டி நேரிட்டால் உணவுத் தேவையை விட கவலைப்படுவது இந்த நுளம்பு தொல்லையை பற்றியே ஆகும்.

நுளம்பானது ஒரு வகை பூச்சி இனமாகும். இவற்றில் பல இனங்களும், பல வர்க்கங்களும் உள்ளன. இவற்றின் வதிவிடம் நீர் நிலைகளில் ஆரம்பமாகிறது.

நுளம்பின் வாழ்க்கை வட்டம் நான்கு கட்டங்களில் அமைகின்றது. அவையாவன முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, நிறையுடலி என்பனவாகும். நிறையுடலி பருவமே முதிர்ந்த நுளம்பாகும்.

இவற்றிலே மூன்று கட்டங்களின் படிமுறைகள் நீரில் நிகழ்கின்றது. ஆனால் முதிர்ந்த நுளம்பு பூமியில் வாழ்கின்றது. பொதுவாக  நுளம்பின் வாழ்க்கை வட்டத்தில் முட்டையானது ஒன்று தொடக்கம் மூன்று நாட்களும், குடம்பியானது ஐந்து தொடக்கம் பத்து நாட்களும், கூட்டுப்புழுவானது நான்கு தொடக்கம் ஏழு நாட்களும் பருவமடைவதற்காக எடுக்கின்றன.

இவற்றில் ஆண், பெண் என இரு வகையான இனங்களைச் சேர்ந்த நுளம்புகள் எம் சூழலில் காணப்படுகின்றன. பெண் நுளம்பே மனிதனைக் கடிக்கும். இது சராசரியாக மூன்று தொடக்கம் நான்கு கிழமைகள் வாழக்கூடியது.

Puttalam dengueஆண் நுளம்புகள் மனிதனை தீண்டுவதில்லை. மாறாக அவைகள் எம் சூழலில் உள்ள தாவரங்களின் சாற்றையும், பூவிலுள்ள தேன் ஆகியவற்றையும் உணவாக உட்கொள்ளுகிறது.

பெண் நுளம்பானது அது முட்டையை விருத்தி செய்யும் பொருட்டு குருதியை உணவாகக் தேடி மனிதனை அல்லது மிருகங்களைக் கடிக்கின்றது. சில வகையான நுளம்புகள் மிருகங்களின் குருதியை விரும்புகின்றது. இவ்வாறாக நுளம்புகள் மிக அதிகமாக மனிதனையோ அல்லது மிருகங்களையோ கடிக்கும் நேரம் இனத்துக்கு இனம் வேறுபடுகின்றது.

நுளம்புகள் இரத்தம் குடித்த பின் அவற்றின் முட்டைகள் விருத்தியாகும் வரை அதற்கு தகுதியான இடங்களில் இளைப்பாறும். சில நுளம்புகள் வீட்டினுள்ளும் இன்னும் சில சூழலில் காணப்படும் மரப்பொந்துகளிலும், மரங்களிலும் வேறு சில வடிகான்களிலும் ஏனைய இடங்களிலும்  இளைப்பாறுகின்றன.

நுளம்புகளுக்கு பொருத்தமான சூழ்நிலை கிடைத்துவிட்டால் அவைகள் பெருமளவில் முட்டைகளை இட்டு சந்ததிகளை உருவாக்குகின்றன. குறிப்பாக ஒரு பெண் நுளம்பு சாதகமான சூழ்நிலையில் கோடிக்கணக்கான நுளம்புகளை அடுத்தடுத்து வரும் சந்ததியில் இனவிருத்தி செய்யும் திறனைக் கொண்டது. பெண் நுளம்பானது அதன் வாழ்க்கையில் நான்கு தொடக்கம் ஆறு தடவைகள் முட்டையிடும்.

இந்த நுளம்பினங்கள் பல வகைகளில் காணப்படுகின்றன. இவை சூரியனிலிருந்தோ, சந்திரனிலிருந்தோ அல்லது வேற்றுக் கிரகங்களிலிருந்தோ எம்மை தாக்கும் ஏவுகணையல்ல.

மாறாக நாம் வாழும் சுற்றுப்புற சூழலிலிருந்து உருவாகுவனையே ஆகும். நுளம்புகள் உருவாவதற்கும், வளர்வதற்கும் நாம் தான் காரணம் என்று கூறினால் அதனை யாராலும் மறுக்க முடியாது. ஆம், இவை உருவாவதற்கும், பரவுவதற்கும் நாம் தான் காரணக் கர்த்தாவாக இருக்கின்றோம்.

இன்றைய நவீன உலகில் மிகக் கொடியதும் மனிதனுக்குத் தொல்லைத் தரும் பூச்சி இனமுமாக நுளம்பே முதலிடம் வகிப்பதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

நுளம்புகள் பணக்காரர்கள், ஏழைகள், சிறியோர்கள், பெரியோர்கள் என்று பேதம் பார்ப்பதில்லை. இது அனைவரது இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கிறது. மனித குருதி அதற்கு உணவாக அமைகிறது.

அதேநேரம் மனிதனுக்கு அவனது உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. இவ்வாறாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நுளம்பினால் பல நோய்கள் உருவாவதற்கும், எம் மத்தியில் வேகமாக பரவியும் வருகின்றமைக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாக அமைகிறோம்.

ஒரு மனிதர் எங்கேனும் ஒரு நாள் ஒரு இரவு இருக்க நேரிட்டால் அனைத்து தேவையையும் விட அவருக்கு நினைவில் இருப்பது நுளம்பு தொல்லையைப் பற்றிய கவலையே! மேலும் இன்று இரவை எவ்வாறு கழிப்பது? இந்த நுளம்புத் தொல்லையால் நித்திரை செய்வது எப்படி? இதிலிருந்து என்னை எப்படி பாதுகாத்துக் கொள்வது? போன்ற வினாக்கள் அவனுள் எழும். சுருங்கக் கூறின் நுளம்பைப் பற்றி நினையாதோர் எவரும் இல்லை.

நுளம்பொன்றின் உடற்கூறு அமைப்பானது தலைப்பகுதி, கால்களையும் சிறகுகளையும் கொண்ட மத்திய பகுதி, அடிவயிற்றுப்பகுதி  என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.அதனிடையே பல உடல் உறுப்புக்கள் இணைந்துள்ளன.மேற்குறிப்பிட்டவாறான உடற்பகுதிகளைக் கொண்டமைந்த நுளம்பே மனிதர்களை அதிகமாக தாக்கி வருகின்றது.

[நுளம்பு வருவான்…]

WAK