புத்தளம் பாத்திமாவின் ஆரம்பகால அதிபர் எஸ்.ஏ.ஏ. ஹைரியா

அதிபர் ஹைரியா அவர்கள் 21.01.1938ல் புத்தளத்தில் நடுத்தர குடும்பமொன்றில் மர்ஹும்களான செய்னுலாப்தீன் பாத்திமுத்து என்று அழைக்கப்படும் உம்மு சுலைஹா…

(அபூஹனிபா நவ்சாத்)

எமது நகரில், ஆரம்ப காலத்தில் பாத்திமா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று பெரும் பதவி வகித்த, வகிக்கின்ற பெண்மணிகள், குடும்பத் தலைவிகள், வெளியூர் பெண்மணிகள், ஓய்வு நிலையில் இருக்கும், ஓய்வு நிலைக்கு வந்து கொண்டிருக்கும் அனைவரதும் முதுபெரும் ஆசிரியையும் சாந்தமும் அமைதியும் தன்னகத்தே என்றும் அமையப்பெற்றவருமான அதிபர் எஸ்.ஏ.ஏ. ஹைரியா அவர்களின் தகவல்கள் சிலதைப் பெற்று எழுதக் கிடைத்தமைக்காக வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

அதிபர் ஹைரியா அவர்கள் 21.01.1938ல் புத்தளத்தில் நடுத்தர குடும்பமொன்றில் மர்ஹும்களான செய்னுலாப்தீன் பாத்திமுத்து என்று அழைக்கப்படும் உம்மு சுலைஹா தம்பதிகளுக்கு நான்காவது மகளாக பிறந்தார்கள். புத்தளம் அரசினர் பெண்கள் பாடசாலையில் ஆரம்ப கல்வியை முடித்த அவர்கள் புத்தளம் சென் மேரிஸில் தனது உயர் கல்வியை பூர்த்தி செய்து தாம் ஆரம்ப கல்வியைக் கற்ற பெண்கள் அரசினர் பாடசாலையிலே 1959.05.04ல் ஆசிரியர் சேவையை ஆரம்பித்தார்கள்.

அதிலும் புத்தளம் நகரில் பெண்கள் கல்வி கற்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவிய அந்தக் காலத்தில் எம்மண்ணில் பிறந்த நான்கு நங்கையர்கள் பலத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உள உறுதியுடன் கல்வி பயின்று ஆசிரியர் பணியில் களம் இறங்கினார்கள்.

மர்ஹுமா ராலியா உம்மா 11.06.1958ம் ஆண்டில் முதல் நியமனம், இந்த ஆக்கத்தின் நாயகி எஸ். ஏ. ஏ. ஹைரியா முதல் நியமனம் 04.05.1959, மர்ஹுமா உம்முல் ஹிஸாம் முதல் நியமனம் 02.11.1959, மர்ஹுமா எம். சி. சித்தி பழீலா முதல் நியமனம் 01.08.1960 ஆகிய இந்த நால்வரும் பெண்களை பூட்டி வைத்த அந்த கால புத்தளத்தின் மடமையின் கதவை உடைத்து கல்வியின் அவசியத்தை வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த நங்கையர்களுக்கு உணர்த்தியவர்களாவார்கள்.

இதில் மர்ஹுமா ராழியா உம்மா அவர்கள் புத்தள நகரின் முதல் பயிற்றப்பட்ட பெண் ஆசிரியை ஆவார்கள். மேலும் இந்த பெருந்தகைகள் நால்வரும் நம்மூரின் ஆசிரிய சேவையின் ஆரம்ப தாய்மார்களாவர்கள்.

‘ஹைரியா ஆசிரியை அனைவரிடமும் கனிவாக பழகுவார்கள். கோபம் வராது. நாங்கள் அனைவரும் அவர்களை மிகவும் விரும்புகிறோம்’ என்ற நல்லெண்ணம் அவர்களிடம் கல்வி கற்ற துறைசார் நிபுணர்கள், ஆசிரியைகள், குடும்பத் தலைவிகள் என்று இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரின் இதயங்களிலும் நிலைத்து நிற்பதை ஆதாரபூர்வமாக அறியக்கூடியதாக உள்ளது.

1960ல் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து பாத்திமா மகா வித்தியாலயத்திற்கு மாற்றலாகி வந்து நான்கு தடவைகள் அங்கு அதிபராகவும் கடமையாற்றினார்கள். அவர்களுடைய காலப்பகுதியில் பாத்திமா மகா வித்தியாலயத்திற்கான சில கட்டிடங்களும், வாசிகசாலையும் உருவாகின. புத்தளம் மாவட்டத்தில் மீலாத் விழாக்களில் வெற்றியீட்டிய பாத்திமா மாணவிகளை திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய இடங்களுக்கு கூட்டிச் சென்று அங்கு நடந்த மீலாத் போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றச் செய்தார்கள்.

ஹைரியா ஆசிரியை அவர்கள் கலை பாடங்கள் அனைத்தையும் கற்பிக்கக் கூடியவராக இருந்தார்கள். கடினத் தன்மையற்ற என்று சார்ந்த குணமுடைய ஆசிரியை அவர்களிடம் கல்வி கற்ற அனைத்து மாணவிகளும் நேசித்தனர். இவர்களது ஓய்வு நிலை 1990ல் ஆகும்.

எங்கள் சிறு பராயத்தில் ஹைரியா ஆசிரியையின் வீட்டுக்கு முன்னாள்தான் நாங்களும் வாழ்ந்தோம். இதை எழுதும் போது ஹைரியா மிஸ்ஸின் தாயார் பற்றி சற்று குறிப்பிட மனம் விளைகிறது.

அக்காலத்தில் எங்களது ஏரியாவில் வாழ்ந்த பெண்மணிகளில் ஹைரியா மிஸ்ஸின் தாயாரான பாத்திமுத்து என்ற இந்த மூதாட்டி உடல் பலமும் மன பலமும் மிக்கவராக திகழ்ந்தார்கள். காதில் அக்கால ஆபரணமான ‘அலிகுத்து’ நகையை அணிந்து கம்பீராமாக இருப்பார்கள்.

இந்த மூதாட்டிக்கு ஹைரியா மிஸ்ஸையும் சேர்த்து 8 பிள்ளைகள். இம்மூதாட்டி தனது 4வது மகளான ஹைரியா மிஸ்ஸை கூப்பிடும் போது மாத்திரம் தனது காதுகளில் உள்ள அலிகுத்து ஆபரணத்தை மெல்லிய ஓசையுடன் கலைநயமாக அழகாக ஆட்டிய வண்ணம் ‘அன்சுத்துல் ஹைரியா’ என்ற ஹைரியா ஆசிரியையின் முழுப்பெயரை வாய் நிறைந்து மொழிவார்கள்.

அக்காலத்தில் அருகில் வாழ்ந்த நண்பன் ஒருவனுடன் இந்த நிகழ்வை நாங்கள் பலமுறை சுவாரஸ்யமாக வியந்திருக்கிறோம்.

ஆம்! நிச்சயமாக ஹைரியா ஆசிரியையின் கல்வித் தகைமைக்காக அந்தக் காலத்தில் அவர்களது தாயின் பரிபாஷை கண்ணியமே இதுவாகும். மேலும் பெண் கல்வியின் ஆரம்ப காலமான அன்றைய நாட்களில் மேற்குறிப்பிட்ட ஆரம்ப ஆசிரியைகளான நான்கு ஆசிரிய பெருந்தகைகளுக்கும் பெரும் கண்ணியமும் வரவேற்பும் கிடைத்தது.

ஹைரியா ஆசிரியையின் கணவர் மர்ஹும் பாரூக் அவர்களாவார். இவ்விருவருக்கும் சியானா, ஆசாத், மர்ஹுமா சப்ரானா, ஆகிய மூன்று மக்கள். மர்ஹும்களான அப்துல் வாஹித், முன்னைய நாள் நகர சபை உறுப்பினர் மர்ஹும் ஹபீல் ஆகிய இருவரும் இவர்களது சகோதரர்களாவார். மர்ஹும்களான ஜென்னத், ராபியத், பாஹியா, பசீரா ஆகியோரும் ஜுனைகாவும் இவர்களது சகோதரிகளாவர்.

இறுதியாக, மேற்குறிப்பிட்ட இந்த நான்கு ஆசிரிய அன்னையர்களுக்கு அடுத்த வரிசையில் வைத்து கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்களான செய்னுல் அரபா ஆசிரியை, ஆசிரியை பின்தாரி ஸாபார், திருமதி பாக்கியராஜா, திருமதி ஜெகன் நாதன், ஆசிரியை பிலோமினா, ஆசிரியை வினிதா, ஆசிரியை வினிபிரிடா, ஆசிரியை சவரியானா போன்றோரையும் இதே வரிசையில் உள்ள அனைவரையும் இன்னும் ஓய்வு நிலையில் இருக்கும், ஓய்வு நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இம்மண்ணின் ஆசிரியைகள் அனைவரையும் சங்கையுடன் கௌரவிக்கின்றோம்.

WAK