புத்தளம் பாத்திமாவின் புதிய அதிபராக கல்லூரியின் பழைய மாணவி பதவியேற்பு

புத்தளம் பாத்திமா கல்லூரியின் 26ஆவது அதிபராக பழைய மாணவியான திருமதி சரீனா பர்வீன் அஜ்மல் அவர்கள் நேற்று முன்தினம் (30-03-2023) உத்தியோகபூர்வமாக அதிபர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
.
புத்தளம் வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்கா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் விடைபெறும் அதிபர் திருமதி ரஜியா, பாடசாலை அபிவிருத்திக்குழு இடைக்கால செயலாளர் ஆசிரியர் மதீன், அயற்பாடசாலைகளின் அதிபர் திரு ஜவாத், அதிபர் நஜீம், அதிபர் சிராஜுதீன், அதிபர் ரம்சீன், அதிபர் திரு மனாஸ் ஆகியோருடன் ஓய்வு நிலை உதவி அதிபர் திரு நிஜாம், ​ முகாமைத்துவக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
.
இந்நிகழ்வின் போது பாடசாலைக்கு கருத்தரங்கிற்காக வருகைத் தந்திருந்த கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு எம்.ஐ.எம்.நவ்பர்தீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
.
17-11-2016 முதல் புத்தளம் பாத்திமா கல்லூரியில் நிதி மற்றும் நிருவாகத்துக்கான பிரதி அதிபராகக் கடமையாற்றிய திருமதி சரீனா பர்வீன் அஜ்மல், 2004 ஆம் ஆண்டு கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சமூகக் கல்வி ஆசிரியராக தனது பணியினை ஆரம்பித்து, புத்தளம் வெட்டாளை முஸ்லிம் வித்தியாலயத்தில் 9 வருடங்கள் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
.
இவர் தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்பித்தலுக்கான டிப்ளோமாக் கற்கைநெறியினை நிறைவு செய்ததோடு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிக் கற்கை நெறியினையும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வித்துறையில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறியினையும் நிறைவுசெய்துள்ளார். தற்போது தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவத்தில் முதுமானிக் கற்கைநெறியில் 2022/2023( Masters of Educational in Management – NVQ 10) கற்றுக் கொண்டிருக்கின்றார்.
.
2016இல் இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று கடந்த 6 வருடங்களாக புத்தளம் பாத்திமா கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய திருமதி சரீனா பர்வீன், அப்துல் லதீப்-றஹ்மத் ஆகியோரின் மூன்றாவது புதல்வி ஆவார்.
.
(FBMV-Media)
.
WAK