புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 1

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

முஹையத்தீன் தர்ஹாவும்  மீராலெவ்வை பள்ளியும்

புத்தளம் நகர பள்ளிவாயல்களில் மிகவும் பழமையானவை முஹையத்தீன் தர்ஹா, மீராலெவ்வை பள்ளி, பாரியப்பா பள்ளி போன்றனவாகும். 1494 ஆம் ஆண்டில் (ஹிஜ்ரி 913) ஒரு வன்னியனாரின் மகள் மீரா உம்மா என்பார், முஹையத்தீன் ஆண்டவர் தர்ஹாவுக்காக ஒரு பெரு நிலத்தை அன்பளிப்பு செய்தார். மேற்கே கடலும் வடக்கே முதலாம் குறுக்குத் தெருவும் (பழைய மீன்கடைத் தெரு) கிழக்கே கங்காணிக்குளமும் தெற்கே கங்காணிக் குளத்திலிருந்து கடலுக்கு நீர் வழிந்தோடும் ‘இரேகு அடி’ கால்வாயும் இதன் எல்லைகளாகும். அதில் தர்ஹா கட்டப்பட்டதுடன் (தற்போது பெரியபள்ளி அமைந்துள்ள பகுதி) கிழக்குப் புறத்தில் (தற்போதைய மஸ்ஜித் வீதியில் கலாசார நிலையம், மீலாத் மேடை போன்றன அமைந்துள்ள நிலப்பரப்பு)) கொத்பா ஓதுவதற்காக பள்ளிவாசல் ஒன்றும் கட்டி, அதற்கு ‘மீராலெவ்வை பள்ளி’ என்று பெயரிட்டனர். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் பஞ்சா எடுக்கப்பட்டது. 1900 காலப்பகுதியில் இருந்தே தர்ஹாவுக்கு சொந்தமான நிலம் படிப்படியாக பறிபோனது.

பழைய கொத்பா பள்ளிவளவில்  (கலாசார நிலைய  வளவு) ஆரம்பத்தில் ஒரு பள்ளி இருந்து, அது பழுதடைந்தபின்னர் கட்டப்பட்டதே மீராலெவ்வை பள்ளிவாசல் என்ற கருத்தும் உண்டு. இதனை மீராமக்காம் பள்ளிவாசல் என அழைத்ததாகவும் கூறுவர். மீரா உம்மா என்பவர் வழங்கிய காணியில் கட்டப்பட்டதனால் இப்பெயர் வழங்கப்படலாயிற்று. ஐவேளை தொழுகைகள் நடைபெற்ற இப்பள்ளிதான் முதலாவது கொத்பா பள்ளியுமாகும். அக்கால வழக்கப்படி இப்பள்ளி மைதானத்தில் ஜனாஸாக்களும் அடக்கம்  செய்யப்பட்டன.  சிறிது காலத்தின் பின்னர் மீராலெவ்வை பள்ளிவாசல்  பழுதடைய அதனை செப்பனிடும் பணிக்காக தர்ஹாவில் (தற்போது பெரியபள்ளி அமைந்துள்ள பகுதி) ஜும்ஆ நடத்தப்பட்டது. 

தர்ஹாவில் அடக்கப்பட்டவரின் விபரம் தெரியவில்லை.  இந்த முஹையத்தீன் தர்ஹாவின் பரிணமிப்பே இன்றைய புத்தளம் முஹையத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் (பெரியபள்ளிவாசல்) ஆகும். கல்பிட்டி கல்விமான் சைமன் காசிச்செட்டி அவர்கள்  இந்த தர்ஹாவைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘கடற்கரையையொட்டி அழகான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அதை சுற்றி உயரமற்ற மதில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வாயில் மனாராக்களைப் போன்று சில தூண்களை கொண்டிருக்கின்றது. இங்கு ஜும்ஆத் தொழுகை நடைபெறுகின்றது’.  சைமன் காசிச்செட்டி குறிப்பிடும் தர்ஹாவின் புகைப்படம் தற்போது எங்கும் இல்லை.

பழைய கொத்பா பள்ளிவளவில் அரேபியரின் செல்வாக்குக்கு உட்பட்ட பெருக்கமரம் (பப்புரப் புளி, இராட்சதப் புளி, தொதி) (Bao – Bub) (Adansonia digitata) ஒன்று இருந்துள்ளது. இம்மரம் சைமன் சைமன் காசிச்செட்டி (1834), டெனென்ட் (1848) போன்ற வரலாற்றாசிரியர்களாலும் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்பிட்டியிலும் இது இருந்துள்ளது. திகளி பள்ளிவாசல் வளவில் நின்ற ஒரு மரம் அண்மையிலேயே சரிந்துவீழ்ந்தது. மன்னாரில் இன்றும் பல மரங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஒட்டகங்களும் ஆடுகளுக்கும் இவற்றின் இலைகள் உணவாகப் பயன்பட்டன. அரேபியர் மூலம் இவை இல்ங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

புத்தளத்தில் நின்ற மரம் சுமார் 70 அடி உயரமும் 45 அடி சுற்றளவும் கொண்டதாகும். கிணறு தோண்டும்போது வேர்கள் பழுதடைய இது இறந்துவிட்டது. மலைக்குன்றைப் போல கடும் கரிய நிறத்துடன் தோற்றமளித்த இம்மரம் நிலத்திலிருந்து 8 அடியில் இரண்டாகப் பிரிந்து நேர் உயரமாக வளர்ந்திருந்தது. ஒரு கிளையின் சுற்றளவு 22.5 அடியாகும். மற்றையது 26.25 அடியாகும். பருக்களுக்கு மருந்தாக மக்கள் இதன் இலைகளைப் பயன்படுத்தினர். ஐந்து,ஆறு அங்குலம் கொண்ட மயிர் அடர்ந்த பழங்களின் புளிப்புடன் கூடிய இனிப்பான இதன் சுளைகளை மக்கள் சுவைத்தனர்.

1720 ஆணி மாதம் நான்காம் திகதி கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம நரேந்திர சிங்கன் நாவற்காடு செல்லும் வழியில் முஸ்லிம்கள் அவனுக்கு செய்த சங்கைக்கு நன்றிக்கடனாக அவனது ஆளுகையின் கீழுள்ள கொடி, இரு வெண் சாமரைகள், பதினெட்டு வெள்ளிக்கு குஞ்சங்கள், ஓர் ஊது குழல் என்பனவற்றுடன் மேலும் பல அரச சின்னங்களையும் இந்த தர்ஹாவுக்கு அன்பளிப்புச்செய்தான். புத்தளத்தில் எடுக்கப்பட்ட சந்தனக்கூட்டின்போது இவற்றை ஊர்வலமாக அப்போது எடுத்துச் சென்றனர். இந்த அன்பளிப்புக்களில் ஒருசில மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.

இன்னும்  வரும் . . .