புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 10 (இறுதிப் பகுதி)
(இஸட். ஏ. ஸன்ஹிர்)
ஜூம்ஆ பரவலாக்கப்பட்டது
புத்தளம் நகரில் ஜூம்ஆ பரவலாக்கப்படல்வேண்டும் என்பதில் பட்டதாரிகள் சங்கத்துடன் (YMGA) இணைந்து ஒத்துழைத்த ஒருவர் A.M. செய்குமதார் ஹஸரத் அவர்களாவார். மற்றுமொரு ஜூம்ஆ ஆரம்பிக்கப்படலாம் என்ற வக்பு சபையின் அனுமதியைத் தொடர்ந்து அவர் ஐதுரூஸ் பள்ளியில் (புதுப் பள்ளி) ஜூம்ஆ ஒன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் இறங்கினார். அங்கு 11.08.1985 வெள்ளிக்கிழமையன்று புத்தளம் நகரில் இரண்டாவது ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது. அன்றய தினம் A.N.M. ஐதுரூஸ் மரைக்கார் ஆசிரியர் அவர்கள் ஜூம்ஆவுக்கான பாங்கு சொன்னதுடன் கொத்பாவுக்கான மஹ்ஷரையும் ஓதினார். முதல் குத்பா பிரசங்கம் சேகு மீரான் ஆலிம் சாஹிப் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
A.M. செய்குமதார் ஹஸரத்
A.N.M. ஐதுரூஸ் மரைக்கார்

புத்தளம் நகர குடியிருப்பு விரிவடைந்து செல்வதனால் எல்லைப்புறப் பகுதிகளில் ஜூம்ஆ நடைபெறவேண்டும் என்பதில் பட்டதாரிகள் சங்கம் உறுதியாக இருந்தது. நூர் பள்ளியில் (மஸ்ஜிதுன் நூர்) ஜும்ஆவை தொடங்குவதற்கான முயற்சியை அது தொடர்ந்தும் மேற்கொண்டது. சிறிய பள்ளியாக இருந்த அதனை விஸ்தரிப்பதற்கும் தேவையான காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அது முயற்சிகளை மேற்கொண்டது. இம்முன்னெடுப்புக்களின் பயனாக எம்.ஐ.எம். இப்ராஹிம் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் 24.11.1977 இல் ஆரம்பிக்கப்பட்ட நூர் பள்ளியில் 30.01.1987 இல் ஜூம்ஆ தொடங்கப்பட்டது. எஸ். ஏ. எம். தாஹிர், எஸ்.எச் பாரூக், அப்துல் ஹக் போன்றோர் பள்ளிக்கான காணியை பெற்றுக்கொள்ள முன்னின்று உழைத்ததுடன் தாஹிர் அவர்கள் நூர் பள்ளியில் ஜூம்ஆ தொடங்குவதற்கு முக்கிய காரண கர்த்தாக்களுள் ஒருவராக இருந்தார்.
எஸ். ஏ. எம். தாஹிர்
இதேகாலப்பகுதியில் மணல்குன்று பள்ளியிலும் (மஸ்ஜிதுல் ஸலாம்) ஜூம்ஆ தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அங்கு முதலாவது கொத்பா M.I.A.S.A. யஹ்யா (காசிமி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
புத்தளம் நகரசபையின் பதிவுகளின்படி தற்போது நகர எல்லைக்குள் உள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 32 ஆகும். ஆனால் புத்தளம் பெரியபள்ளிவாசலின் தகவல்களின் பிரகாரம் நகரசபை எல்லைக்குள் 45 பள்ளிவாசல்கள் இருப்பதாக தெரியவருகின்றது. அவற்றுள் ஜூம்ஆ பள்ளிவாசல்கள் 25. புத்தளம் நகர ஜம்மிய்யதுல் உலமாவின் தரவுகளின் அடிப்படையில் நகரசபை எல்லைக்குள் முஸ்லிம் கலாசார அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட, பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல்களும் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் முகாம் பள்ளிவாசல்களும் உட்பட மொத்தம் 52 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுள் ஜூம்ஆ பள்ளிவாசல்கள் 23 ஆகும்.
தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் ஒன்றுகூடல் தொடர்பான பல கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதித்து வருகின்றது. அதற்கேற்ப முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் ஜூம்ஆ நடத்தப்படுவது தொடர்பாக பல விதிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது. இன்றைய கொரோனா தொற்று அசாதாரண சூழலில் அனைவரும் ஜூம்ஆவில் கலந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் புத்தளம் நகர எல்லைக்குள் புதிதாக 23 பள்ளிகளில் ஜூம்ஆ தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. மேலும், நாடு முடக்கப்படும் காலப்பகுதியில் (Locked down) எந்த ஒரு பள்ளிவாசலிலும் ஜூம்ஆ நடைபெறுவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தவகையில் கடந்த சுமார் ஒருமாத காலப்பகுதிக்கும் மேலாக இலங்கையின் எந்தவொரு பள்ளியிலும் ஜூம்ஆ நடைபெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புத்தளம் நகர சபை எல்லைக்குள் தற்போதுள்ள ஜூம்ஆ பள்ளிவாசல்கள்
1. முஹியத்தீன் ஜூம்ஆ மஸ்ஜித் (பெரிய பள்ளி)
2. ஐதுரூஸ் ஜூம்ஆ மஸ்ஜித் (புதுப் பள்ளி)
3. நாகூர் ஜூம்ஆ மஸ்ஜித்
4. மஸ்ஜிதுல் ஹுசைன் (ஜாவுஸன் பள்ளி)
5. மஸ்ஜிதுல் பகா (வெட்டுக்குளம் பள்ளி)
6. மஸ்ஜிதுல் ஹுதா
7. மஸ்ஜிதுல் ஹஸனாத்
8. ஜமாஅதுல் முஸ்லிமீன் மஸ்ஜித் (ஜிஹாத் பள்ளி)
9. மஸ்ஜிதுன் நூர்
10. மஸ்ஜிதுல் உஸ்மான்
11. மஸ்ஜிதுஸ் ஸலாம் (மணல்குன்று)
12. மலே மஸ்ஜித் (செம்மாந்திடல்)
13. மஸ்ஜிதுல் பலாஹ் (கடையாகுளம்)
14. மஸ்ஜிதுல் அல் அக்ஸா (தம்பபண்ணி A முகாம்)
15. மஸ்ஜிதுல் பாரிஸ் (தம்பபண்ணி A முகாம்)
16. முல்லைநகர் மஸ்ஜித்
17. தில்லையடி முஹியத்தீன் ஜூம்ஆ மஸ்ஜித்
18. மஸ்ஜிதுல் முஜாஹிதீன் (நிந்தனி)
19. மஸ்ஜிதுல் அல் மினா (நிந்தனி)
20. மஸ்ஜிதுல் அல் அக்ஸா (சதாமியாபுரம், தில்லையடி)
21. மஸ்ஜிதுல் ஹஸனாத் (அல் ஜித்தா, தில்லையடி)
22. மஸ்ஜிதுல் தாயிப் (தில்லையடி)
23. மஸ்ஜிதுல் ஹிதாயா (தில்லையடி)
உசாத்துணை:
1. புத்தளம் முகையதீன் தர்ஹா – M.A. சாலிஹு (1946)
2. புத்தளம் வரலாறும் மரபுகளும் – A.N.M. ஷாஜஹான் (1992)
3. புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ மஸ்ஜித் வைரவிழா மலர் (1999)
4. சங்கமும் சமூகமும் YMGA புத்தளம் (1995)
5.டயரிக் குறிப்புக்கள் 1. A.M.M. ஹனிபா 2. A.N.M. ஷாஜஹான்
நிறைவுற்றது