புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 2

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

பள்ளி நிருவாகிகளும் முரண்பாடுகளும்

ஆரம்ப காலங்களில் முஹியத்தீன் தர்ஹா,  கொத்பா பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகம் புத்தளத்தின் புகழ்மிக்க குடும்பத்  தலைவர்களின் கைகளில் இருந்தபோதும் பள்ளிவாசலை சுற்றியிருந்த இந்திய முஸ்லிம் வியாபாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பையும் நாம் மறக்கமுடியாது. அவர்கள் வர்தகர்களாக மட்டுமன்றி மார்க்க அறிஞர்களாகவும் விளங்கினர். பள்ளிப் பராமரிப்புகளில் மட்டுமன்றி பள்ளிக்குத் தேவையான ஹதீப் மோதீன்மார் போன்றோரையும் தமது நாட்டிலிருந்து வரவழைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்துகொடுத்தனர்.

முஹியத்தீன் தர்ஹா, கொத்பா பள்ளிவாசல் என்பனவற்றை புத்தளத்தில் புகழ்பெற்ற குடும்பமான ‘ஊர் மரைக்கார்’ குடும்பம் நிருவகித்து வந்தது. அன்றய ஆங்கில அரசு பள்ளிவாசலின் பிரதான பரிபாலகரை புத்தளத்தில் முதல்வராக மதித்து, சோனகர் தலைவர் (Head Moorman) என்ற பதவியை அவருக்கு வழங்கியது. மஸ்ஜித் வீதியில் அமைந்திருந்த ‘காசிம் பெளஸ்’ என்ற வீட்டைக் கட்டியதும் இக்குடும்பத்தினரே. அதேவேளை புத்தளத்தில் புகழ் பெற்ற மற்றுமொரு குடும்பம் முதலாளி குடும்பமாகும். நோர்த் வீதியில் அவர்களின் வீடுகள் அமைந்திருந்தன. மரைக்கார்கள் என பெயர் சூட்டப்பட்ட இக்குடும்பத்தினர் 1877 முதல் பள்ளி பரிபாலனத்தில் உப பரிபாலகர்களாக இணைந்துகொண்டனர். இக்குடும்பத்தை சேர்ந்த சி.அ.க. ஹமீதுஹுஸைன் மரைக்கார் (சாலி மரைக்காரின் தந்தை) அவர்களை தேசாதிபதி வில்லியம் மனிங் அவர்கள் 1923 இல் உதவி ஹெட் முவர்மேன் ஆக நியமித்து சிறிது காலத்தில் ஹெட் முவர்மேன் ஆக ஆக்கினார். இவரே இறுதி ‘ஹெட் முவர்மேன்’ ஆவார்.

Casim Palace

 

 முதலாளி வீடு 

சி.அ.க. ஹமீதுஹுஸைன் மரைக்கார் (Last head moor man of Puttalam)

1870 களில் தர்ஹாவின் பிரதான டிரஸ்டியாக முஹம்மது அலிமரைக்கார் இருந்துள்ளார். இவர் 06.12.1877 இல் சோனகர் தலைவராக (Head Moor Man) அரசினால் நியமிக்கப்பட்டார். முஹம்மது அலிமரைக்கார் இறந்தபின்னர் அவரின் மகன் உ.சி.ம.மு. முஹம்மது காசிம் மரைக்கார் டிரஸ்டியாக நியமனம் பெற்றார். இவர் 14.09.1917 இல் சோனகர் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதேவேளை 15.08.1877 இல் உப டிரஸ்டியாக நியமிக்கப்பட்டிருந்த இ.செ.மு. முஹம்மது காசிம் மரைக்கார் அதே பதவியில் தொடர்ந்தும் இருந்து வந்தார். இவர்1913 இல் சந்தனக்கூடு எடுப்பது மார்க்கத்துக்கு விரோதமானது என்ற பிரச்சினையை  ஏற்படுத்த, ஊர் இரண்டுபட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. (வழக்கு இல D C 2356). ஏற்றப்பட்ட கொடிமரம் மூன்று வருடங்களாக இறக்கப்படவில்லை. கடைசியில், தர்ஹாவில் சந்தனக்கூடு எடுக்கலாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் கட்சிப் பிரிவினையும் அதிகரித்தது.

கூடு ஹராம் என்று சொன்ன டிரஸ்டி 26.01.1921 இல் காலஞ்சென்றார். அவரின் மகன் சேகு இஸ்மாயில் மரைக்கார் உப டிரஸ்டியாக நியமிக்கப்பட்டார்.  அக்கால புத்தளம் முஸ்லிம் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த புரக்டர் W.A. முத்துக்குமாரின் அலுவலகத்தில் இவ்விரு டிரஸ்டிகளும் 10.02.1921 இல் ஓர் உடன்பாட்டுக்கு வந்தனர். அதாவது, அக்காலத்தில் இருந்த கட்டிடத்தை உடைத்து புதிய கட்டிடமும் கூடு வைப்பதற்கு ஒரு இடமும் (கூட்டு மடுவம்) அமைப்பதற்கு இணங்கினர். ஒப்பந்தம் ஒன்றும் எழுதப்பட்டது. எனினும் இருவரும் அதில் கையொப்பமிடவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னர் 04.03.1924 இல் கையொப்பம் இடப்பட்டது.

Muthukumar Chairman (1933 – 39)

03.05.1926 இல் சேகு இஸ்மாயில் மரைக்கார் மரணிக்க, அவரின் சகோதரர் இ.செ.மு. இபுறாகீம் நெய்னாமரைக்கார் உப டிரஸ்டியாக நியமிக்கப்பட்டார். டிரஸ்டிகள் ஊராரை கவனிப்பதில்லை என்ற கருத்து எப்போதும் இருந்துவந்தது. 1927 இல் புத்தளம் நகர மக்கள் சிலர் இந்த நம்பிக்கையாளர்களுக்கு எதிராக அரசுக்கு மனுதாக்கல் செய்தனர். உதவி மாகாண அதிபர் இதனைக் கருத்தில் எடுத்து, அதனை விசாரித்து, பிரச்சினையைத் தீர்த்துவைக்க குழு ஒன்றை நியமித்தார். N.H.M. அப்துல்காதர், H.M. மாக்கான் மரைக்கார், T.B. ஜாயா, M.T. அக்பர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர். இவர்கள் புத்தளம் வாசிகசாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ESM Ibrahim Naina Maraikar

விசாரணைகளின்போது, டிரஸ்டி உ.சி.ம.மு. முஹம்மது காசிம் மரைக்கார் வசம் 14,438.55 சதமும் உப டிரஸ்டி இ.செ.மு. இபுறாகீம் நெய்னாமரைக்கார் வசம் 17,844.49 சதமும் இருப்பது தெரியவந்தது. தர்ஹாவை உடைக்கக்கூடாது எனவும் உ.சி.ம.மு. முஹம்மது காசிம் மரைக்கார் தனது சொந்தப் பணத்தில் ரூபா 5000.00 செலவில் தர்ஹாவை புனரமைப்பு செய்யவேண்டுமெனவும் இரு டிரஸ்டிகளிடமுள்ள 32,283.04 சதத்துடன் தேவையான மிகுதிப் பணத்தினை ஊராரிடம் வசூலித்து கொத்துபா பள்ளிக் காணியில் பள்ளிவாசல் கட்டவேண்டுமெனவும் அங்கு முடிவாகியது. 29.06.1928 இல் உ.சி.ம.மு. முஹம்மது காசிம் மரைக்கார் காலஞ்சென்றார். அப்போது இளைஞராயிருந்த அவரது மகன் M.C.M. செல்லமரைக்காரை ட்ரஸ்டியாக நியமிப்பதில் பிரச்சினைகளும் வந்தன.

உ.சி.ம.மு. முஹம்மது காசிம் மரைக்கார்

M.C.M. செல்லமரைக்கார்

இவ்வாறான சூழலில் கொடியேற்ற காலமும் வந்தது. உப டிரஸ்டி இ.செ.மு. இபுறாகீம் நெய்னாமரைக்கார், கொடிமரமொன்று இருக்கும்போதே, 15.09.1928 இல் ஒரு விண்ணாங்குத் தடியால் கொடியை ஏற்றி அதற்கு காவலாளிகளையும் நியமித்தார். அதற்கு மறுதினம் (16.09.1928) டிரஸ்ட் M.C.M. செல்லமரைக்கார் வழமையான கொடிமரத்தை ஏற்றினார். 17.09.1928 அன்று புரக்டர் W.A. முத்துக்குமார் வீட்டில் புரக்டர் H.S. இஸ்மாயில் அவர்களால் மற்றுமொரு உடன்படிக்கை (இல 87) செய்யப்பட்டது. முதலில் சந்தனக்கூடு எடுக்கவேண்டுமெனவும் பின்னர் பள்ளிவாயல் கட்டவேண்டுமெனவும் முடிவாகியது.

இன்னும்  வரும் . . .