புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 3

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

பெரியபள்ளி நிருமானம்

1932 கார்த்திகை மாதம் கொத்பாவுக்குப் பின்னர் இ.செ.மு. இபுறாகீம் நெய்னாமரைக்கார் அவர்களால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. மீராலெவ்வை பள்ளிவாசல் அமைந்துள்ள காணியில் (பழைய கொத்துவா பள்ளிக் காணி) பெண்களுக்கென ஒரு பாடசாலை கட்டவேண்டும் என்பது அப்பிரேரணையாகும். S.M.A ஜலால்தீன் மரைக்கார் (Member of Local Board – M.L.B.) இதனை மறுத்து அங்கு புதிய பள்ளிவாசல் கட்டப்படவேண்டுமென முன்மொழிந்தார். பாடசாலை கட்டுவதற்கு ஆதரவு இருந்தபோதும் பள்ளிவாசல் கட்டவேண்டுமென்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Jalaaldeen Maraikar (K.K. Street)

15.12.1933 இல் H.S. இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கட்டிடக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. 01.01.1934 இல் M.A. ஸாலிஹ் அவர்களால், மீரா லெவ்வை பள்ளி வளவில், பழைய கட்டிடத்தை உடைக்காமல் புதிய கட்டிடம் அமைக்கவேண்டுமென்ற பிரேரணை கட்டிடக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 27.08.1934 இல் தர்ஹாவை உடைக்கத்தொடங்கினர். உடைக்கப்பட்ட தர்ஹாவின் கட்டிடப் பொருட்கள் நான்காகப் பிரிக்கப்பட்டு 27.10.1934 இல் விற்பனைக்கு விடப்பட்டன. 88.47, 73.00, 2.25, 70 சதம் என்ற அடிப்படைகளில் மொத்தம் 164.42 சதத்துக்கு அவை அனைத்தும் விற்பனையாகின. ஆனால் அவை சுமார் ரூபா 2000.00 பெறுமென அப்போது மதிப்பிடப்பட்டிருந்தன.

M.A. ஸாலிஹ் (உடையார் இப்ராஹிம் அவர்களின் புதல்வர்)

தர்ஹாவில் தொழுகை நடைபெற்றபோது அதனை முஹியத்தீன் கொத்பா பள்ளிவாசல் எனவும் பெரியபள்ளிவாசல் எனவும் மக்கள் அழைக்கத் தொடங்கினர். தர்ஹா உடைக்கப்பட்ட பின்னர் 1934 தொடக்கம் 1938 வரை கொத்துபா தொழுகை ஐதுரூஸ் பள்ளியில் (புதுப் பள்ளி) இடம்பெற்றது. ஐதுரூஸ் பள்ளியில் கொத்பா இடம்பெற்ற நான்கு வருட காலப்பகுதியில் ஐதுரூஸ் பள்ளி செலவுகள் தர்ஹா பணத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன.

புதிய கட்டிடம் கட்டுவதற்கான மேற்பார்வையும் வரைபடம் அமைப்பதற்கான பொறுப்பும் M.H.M. நைனா மரைக்காரின் தந்தையான ஹனீபா மரைக்காரிடம் (சி.அ.மு.) ஒப்படைக்கப்பட்டது. பள்ளிவாசலின் மாதிரி வரைபடம் Bil moria & De Silva Kariba நிறுவனத்தினால் வரையப்பட்டது. இதற்காக இந் நிறுவனத்தை சேர்ந்த B. பில்மோரியா என்பவருக்கு 17.07.1935 இல் 1600.00 ரூபாய் கொடுக்கப்பட்டது. கேள்விப் பத்திரம் கோரப்பட்டதில் கொழும்பு பிரபல கொந்தரத்துக்காரர் எம்.ஐ. முஹம்மத் என்பாரின் கேள்விப் பத்திரம் 50739.11 சதமாகத் திருத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Hanifa Maraikar

எகிப்திலுள்ள அபுல் அப்பாஸ் அல் முர்ஸி பள்ளிவாசல் கட்டிடக்கலையை ஒத்ததாக புத்தளம் பெரியபள்ளிவாசல் அமைந்துள்ளது. யாழ் வளாகம், பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டபோது அதன் முதலாவது துணைவேந்தரான பேராசிரியர் சு. வித்தியானந்தன் (பிறையன்பன்) அவர்கள் தனது ‘கலையும் பண்பும்’ (1961) என்ற நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கடிகாரம் பொருத்தப்படுமுன்னர் புத்தளம் பெரியபள்ளிவாசலின் அழகிய தோற்றம்

Abu al- Abbas al- Mursi Mosque

இப் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கடிகாரத்தை பள்ளி உப பரிபாலகர் E.S.M. இப்ராஹிம் நெய்னா மரைக்கார் தனது சொந்த செலவில் அமைத்துக்கொடுத்தார். மணிக்கூட்டை வடிவமைத்தவர் மக்கோன சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையை சேர்ந்த தோமஸ் ஆவார்.

 

இன்னும்  வரும் . . .