புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 4
(இஸட். ஏ. ஸன்ஹிர்)
புத்தளம் பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா
அழகிய கட்டிடக் கலையம்சம் பொருந்திய புத்தளம் முஹய்யதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் 21.09.1938 இல் மிக கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது. புத்தளம் சோனகர் தலைவர் (Head Moor man) என்ற ரீதியில் நகரின் இறுதி சோனகர் தலைவரும் ஸாலிஹ் மரைக்கார் அவர்களின் தந்தையுமான சி.அ.க. ஹமீது ஹுசைன் மரைக்கார் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக இதனைத் திறந்துவைத்தார்.

புத்தளம் பிரதேசத்தில் இருந்து மட்டுமன்றி கொழும்பில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் பெரியபள்ளியைக் கண்டுகளிக்க பெருமளவில் மக்கள் வருகைதந்தனர். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் பள்ளிவாசலுக்குள் அன்று அனுமதிக்கப்பட்டனர். அன்று அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அன்றைய தினம் சோறு வழங்குவதற்கென விஷேடமான பை ஒன்று தயாரிக்கப்பட்டது. இப் பை படிகைத் தாள்களால் ஆக்கப்பட்டது. பெரியபள்ளிவாசலின் அழகிய புகைப்படமும் அதற்கு மேல் ‘இலாஹி’ என்ற சொல்லும் அதில் அச்சிடப்பட்டிருந்தன. புத்தளம் முகையதீன் கொத்துபா பள்ளி திறப்பு விழா 21-9-1938 என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. கொழும்பு ராபாட் பிரஸ் லிமிடெட்டில் இப் பைகள் அச்சிடப்பட்டன.
தர்ஹா அமைந்திருந்த இடத்தில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டபோது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வரைபடத்தில் இருந்தவாறான சந்தனக் கூட்டை வைப்பதற்கான கூட்டு மடுவம் கட்டப்படவில்லை. அதேவேளை பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவந்த கூடு எடுக்கும் வைபவமும் எவ்வித பிரச்னைகளும் இன்றி பள்ளி நிருமானத்தின் பின்னர் நிறுத்தப்பட்டது. முழு நகருக்கும் இப்பள்ளிவாசலில் மட்டுமே ஜூம்ஆ தொழுகை நீண்டகாலம் நடத்தப்பட்டது.
இன்னும் வரும் . . .