புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 5

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

நிருவாக மாற்றங்கள்

புத்தளம் நகரில் ஆரம்பம் முதலே ஒரேயொரு ஜூம்ஆவே நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் பழைய கொத்பா பள்ளி வளவில் (மீலாத் விழா நடைபெறும் இடம்) மீரா லெவ்வை பள்ளிவாசலில் ஜூம்ஆ நடத்தப்பட்டது. அது பழுதடைய புதிய பள்ளிவாசல் கட்டுவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. தேசிய மட்டத்துக்கு இப்பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. தற்போதைய பெரியபள்ளி வளவில் அமைந்திருந்த தர்ஹாவிலும் சிலகாலம் ஜூம்ஆ நடைபெற்றுள்ளது. தற்போதைய பெரியபள்ளி கட்டப்பட்ட காலப்பகுதியில் தற்காலிகமாக 1934 தொடக்கம் 1938 வரை கொத்துபா தொழுகை ஐதுரூஸ் பள்ளியில் (புதுப் பள்ளி) இடம்பெற்றது. எனினும் ஒரேயொரு பள்ளியிலேயே ஜூம்ஆ நடக்கும் வழமை புத்தளம் நகரில் இருந்துவந்தது.

தர்ஹா, பள்ளி என்பவற்றின் பரிபாலனம் ஆரம்பம் முதல் ஊர் மரைக்கார் குடும்பத்தினரிடம் இருந்துள்ளது. பள்ளி பரிபாலகரே புத்தளம் சோனக தலைவராக (Head Moor Man) அரசினால் நியமிக்கப்பட்டார். 1877 முதல் முதலாளி குடும்பத்தினர் உப ட்ரெஸ்டியாக பரிபாலகர்களாக இணைந்துகொண்டனர். 1934 இல் உப பரிபாலகர் இப்ராஹிம் நெய்னா மரைக்கார் காலஞ்செல்ல மீண்டும் ஊர் மரைக்கார் எம். சீ. எம். முஹம்மது நெய்னா மரைக்கார் (செல்லமரைக்கார்) ஏக பரிபாலகரானார். இவர் 21.05.1962 இல் காலஞ்சென்றார். அத்துடன் பள்ளி நிருவாகத்திலும் மாற்றம் ஏற்பட்டது. ஊர் ஜமாஅத்தின் கைகளுக்கு நிருவாகம் மாறியது.

எம். சீ. எம். முஹம்மது நெய்னா மரைக்கார் (செல்லமரைக்கார்)

01.06.1962 இல் புத்தளம் பெரியபள்ளியில் கூடிய ஊர் ஜமாஅத்தினர் இலங்கையின் முதல் முஸ்லிம் சபாநாயகர் H.S. இஸ்மாயில் அவர்களை பெரியபள்ளியின் டிரஸ்டியாகத் தெரிவுசெய்தனர். பின்னர் அவருக்கு உதவியாக ஓர் ஆலோசனை சபையும் அமைக்கப்பட்டு இயங்கியது. 01.05.1972 இல் ஜமாஅத்தினர் முதன் முதல் பள்ளியில் பதியப்பட்டனர்.சுமார் பத்து வருடங்கள் டிரஸ்டியாக இருந்த H.S. இஸ்மாயில் தனது வைத்து மூப்பு என்பனவற்றைன் காரணமாக அப்பதவியில் இருந்து நீங்கிக்கொண்டார். 01.03.1973 இல் மூவர் கொண்ட குழுவினர் பள்ளியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக நியமனம்பெற்றனர். 12.12.1980 இல் இது நான்காக அதிகரித்தது. 07.031982 இல் இத்தொகை ஐந்தாகவும் 21.09.1983 இல் ஏழாகவும் அதிகரித்தது.

சபாநாயகர் H.S. இஸ்மாயில்

ட்ரெஸ்டிகள் வரிசை

1. அப்துல் அஸீஸ் மரைக்கார் (Head Moorman)
2. மாப்பிள்ளை மரைக்கார்
3. அகுமது நெய்னா மரைக்கார் (Head Moorman) 01.02.1803
4. கருத்தத் தம்பி
5. தம்பிப்பிள்ளை
6. காதர் சாஹிபு மரைக்கார்
7. சேக்காதிப்பிள்ளை அம்பலகாரனார்
8. சேகு மீராலெவ்வை
9. A. முகம்மது நெய்னா – 25.06.1845
10. முகம்மது அலிமரைக்கார் (உப ட்ரெஸ்டி) மறைவு – 26.01.1921
11. இ.செ.மு. காசிம் மரைக்கார் 15.08.1877
12. உ.சி.ம.மு. முகம்மது காசிம் மரைக்கார் – (Head Moorman) 14.09.1917
(பத்தாவது ட்ரெஸ்டியின் மகன்)
13. சேகு இஸ்மாயில் மரைக்கார் (மறைவு – 03.05.1926)
14. இ.செ.மு. முகம்மது அலிமரைக்கார்
15. இ.செ.மு. இப்ராகிம் நெய்னா மரைக்கார் (உப ட்ரெஸ்டி) மறைவு – 12.10.1939
(பதின்மூன்றாவது ட்ரெஸ்டியின் மகன்)
16. உ.சி.ம.மு. முகம்மது காசிம் மரைக்கார் மறைவு – 29.06.1928
17. M.C.M. செல்லமரைக்கார் 21.09.1928 (உப ட்ரெஸ்டி). மறைவு 21.05.1962
18. H.S. இஸ்மாயில் (சபாநாயகர்) 01.06.1962

கதீப்மார்கள்
1. முகம்மது அப்துல்லா லெப்பை – மறைவு 30.11.1928 வெள்ளி
2. ஸகரிய்யா லெப்பை – நியமனம் 21.12.1928

இன்னும்  வரும் . . .