புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 6

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

பெரியபள்ளியை விஸ்தரிப்பதற்கான முயற்சிககளும் முரண்பாடுகளும்

புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் 1938 இல் நிருமாணிக்கப்பட்டபோது அது, ஊரில் ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றுவோரின் தேவையைப் பூர்த்திசெய்ய முற்றிலும் போதுமானதாகவே இருந்தது. சுமார் 2000 பேர் தொழுகையை நிறைவேற்றக்கூடிய வசதி இங்குண்டு. 1980 களின் நடுப்பகுதிவரை புத்தளம் நகரில் பெரியபள்ளிவாசலில் மட்டுமே ஜூம்ஆ இடம்பெற்றது. அது சமூக ஒற்றுமையை எடுத்துக்குக்காட்டுவதாகவும் கருதப்பட்டது. எனினும் காலப்போக்கில் இடம்பெற்ற சனத்தொகை அதிகரிப்பு, நகரின் விரிவாக்கம், மற்றும் பல காரணங்களினால் ஜூம்ஆவைப் பரவலாக்க வேண்டிய தேவை எழுந்தது.

1970 களில் ஜும்ஆ தொழுகைக்காக பள்ளியில் இட நெருக்கடி ஏற்பட்டதை நிவர்த்திக்க S.E.M. அசன்குத்தூஸ் அவர்களில் புதல்வர் A.A. லத்தீப் அவர்களால் 1972 இல் பள்ளியுடன் இணைந்தவகையில் அமைந்துள்ள சுமார் 400 பேர் தொழக்கூடிய கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது அதில் மாடி இருக்கவில்லை. எனினும் அதுவும் இட நெருக்கடிப் பிரச்சினையை தீர்க்கப் போதுமானதாக இருக்கவில்லை.

A.A. லத்தீப்

1980 காலப்பகுதியிலும் புத்தளம் நகரில் ஒரே ஜூம்ஆவே நடைபெற்றது. நகரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றருக்கும் அப்பாலுள்ள தில்லையடியில் இருந்தும் மக்கள் ஜும்ஆத் தொழுகைக்காக முஹயத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கே வந்தனர். அக்காலப் பகுதியில் நகரில் வசித்த முஸ்லிம்களில் 10,000 க்கும் அதிகமானோர் ஜும்ஆவில் கலந்துகொள்ளத் தகுதியிருந்தும் 3000 க்கும் குறைவான மக்களே அதில் கலந்துகொண்டனர். சுமார் 2000 அல்லது அதற்கும் சற்று அதிகமானோரை உள்ளடக்கக்கூடிய பள்ளிவாசலில் ஜும்ஆவின் போது சுமார் 1000 பேர் பள்ளிவாசல் முற்றத்திலும் பாதையிலும் தொழவேண்டிய நிலை ஏற்பட்டது. மணல்குன்று போன்ற நகரின் எல்லைப்புறங்களை நோக்கி மக்கள் தமது வாழ்விடங்களை அமைக்கத் தொடங்கிய காலப்பகுதி அது. நகரின் சனத்தொகை விஸ்தரிப்பும் தூரமும் ஜும்ஆவில் மக்கள் கலந்துகொள்ளாமைக்கு பிரதான காரணிகளாக அமைந்தன.

ஜூம்ஆ தொழுகைக்கென பெரிய பள்ளியை மேலும் விஸ்தரிப்பதற்கான முயற்சிகளில் பள்ளி நிருவாகம் ஈடுபடத்தொடங்கி 27.02.1981 இல் ‘பள்ளி விஸ்தரிப்பு நிதி’ ஒன்றையும் ஆரம்பித்தது. 1983 வரை போதிய நிதி திரட்டப்படவில்லை. 21.091983 இல் தெரிவுசெய்யப்பட்ட ஏழு அங்கத்தவர்களைக் கொண்ட நிருவாகக் குழுவினர், பழைய கொத்துவாப்பள்ளி மைதானத்தில், மஸ்ஜித் வீதியில் பதினோரு கடைகளைக்கட்டி அந்த நிதிமூலம் பள்ளிசெலவுகளுக்கும் விஸ்தரிப்புக்குமான முயற்சிகளில் இறங்கினர். 1974 இல் ஏற்கனவே இங்கு இரு கடைகள் கட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பழைய கொத்துவாப்பள்ளி மைதானத்தில் புதிதாகக் கடைகளைக்கட்டுவதற்கு எதிப்புக்கள் ஏற்பட்டன. சில உலமாக்கள் கடைகளைக் கட்டவேண்டாம் என சமயரீதியான காரணங்களை அதற்கு முன்வைத்தனர். அத்துடன் சமூக, சட்ட ரீதியான காரணங்களுக்காகவும் எதிர்ப்பலைகள் எழும்பின. எனினும் கடைகள் கட்டப்பட்டன. குறிப்பிட்ட கடைகளைக்  கட்டுவதற்கான நிலம் ஏலத்தில் விடப்பட்டது. அதனைப் பெற்றோர் இக்காணியில் தாமே கடைகளைக்கட்டி மீண்டும் பள்ளிக்கு ஒப்படைத்ததுடன் வாடகையும் தருவதற்கு இணங்கினர்.

பெரியபள்ளியுடன் இணைந்தவகையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் மேல்மாடி ஒன்றை அமைத்து பள்ளையை விஸ்தரிப்பதற்கான முயற்சிகளில் பள்ளி நிருவாகம் ஈடுபட்டது. தற்போதைய பள்ளி ஹவுள் அமைந்துள்ள பகுதியை உடைத்து பள்ளியை விரிவாக்கும் சிந்தனைகளும் எழுந்தன. எனினும் இதற்காக சேகரித்த பள்ளியின் நிதிக் கையிருப்பு போதாமலிருந்தது. இதனால் வேறு உதவிகளும் நாடப்பட்டன. S.E.M. அசன்குத்தூஸ் அவர்களில் மகன் டாக்டர் ஜவாத் அவர்கள் கனடாவில் இருந்து தனது சொந்த நிதிமூலம் ரூபா 30,000 த்தை அன்பளிப்பாக வழங்கினார். அவ்வாறே சவூதி அரேபியாவில் தொழில்புரிந்துகொண்டிருந்த அஸீஸ் மரைக்கார் (சேர்விஸ் ரோட்) அவர்கள் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தோரிடம் இருந்து ரூபா 60,000 பணத்தைத் திரட்டி பள்ளிக்குக் கையளித்தார்.

அஸீஸ் மரைக்கார்

இக்காலப்பகுதியில் பெரியபள்ளியை மேலும் விஸ்தரிப்பதா அல்லது ஜூம்ஆவை நகரின் ஏனைய இடங்களுக்கும் பரவலாக்குவதா என்ற கருத்துமோதல்கள் ஏற்படத்தொடங்கின. 1984 இல் இதுபற்றிய சிந்தனை வலுவடைந்தது. பள்ளியை மேலும் விஸ்தரிக்கக் கூடாது மாறாக ஜூம்ஆ பரவலாகப்பட வேண்டும் என்ற கொள்கையில் அன்று புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் (Y.M.G.A.) உறுதியாக இருந்தது. அதற்கான பல முன்னெடுப்புக்களை பட்டதாரிகள் சங்கம் மேற்கொள்ளத்தொடங்கியது.

இன்னும்  வரும் . . .