புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 7

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

ஜூம்ஆ பரவலாக்கமும்  புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கமும் (YMGA)

1980 இல் தொடங்கப்பட்ட புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் (Y.M.G.A) சுமார் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக புத்தளத்தில் பல சமூகப்பணிகளை முன்னெடுத்தது. அவற்றுள் புத்தளம் நகரில் ஜூம்ஆவைப் பரவலாக்கும் முயற்சியும் ஒன்றாகும். 1984 இல் ஜூம்ஆவின் போது பள்ளியில் ஏற்படும் இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்கு, பள்ளியுடன் இணைந்த வகையில் A. A. லத்தீப் அவர்களால் கட்டப்பட்ட கட்டிடத்தில் மாடியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளை பெரிய பள்ளி நிருவாகம் அப்போது எடுத்தது. இதற்கு இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் அதற்குப் பதிலாக புத்தளம் நகரின் எல்லைப்புறங்களை நோக்கி ஜூம்ஆ பரவலாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அதனை சமூகமயப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது.
புதிய கட்டிடம் அமைக்க வேண்டாம் ஜூம்ஆ பரவலாக்கப்படவேண்டும்  என்பதற்கு முன்வைக்கப்பட்ட நியாயங்கள்:

 

1. பெரியபள்ளி நகரின் மத்தியில் இல்லாமல் தெற்கு மூலையில் அமைந்துள்ளமை. (அக்காலப் பகுதியில் பெரியபள்ளியில் ஒலிபெருக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஜும்ஆ பிரசங்கம், சிறப்பு பயான்கள், நோன்பு காலங்களில் சமூகமளிக்கும் காரிகளின் இனிய ஓசை போன்றன சமூகத்துக்கு குறிப்பாகப் பெண்களுக்கு சென்றடையவில்லை)

 

2. பெருகிவரும் சனத்தொகை. (அன்றைய நகர எல்லைக்குள் முஸ்லிம் சனத்தொகை சுமார் 17,000)

 

3. சுமார் மூன்று மைல்களுக்கு அப்பாலும் பரந்து விரிந்து செல்லும் எல்லைப்புறக் குடியேற்றங்களும் கிராமங்களும். (தில்லையடி, மணல்குன்று,வெட்டாளை போன்றன)

 

3. புதிய குடியற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய ஜூம்ஆப் பள்ளிகளின் அவசியம்.

 

4. நகரின்அன்றைய சனத்தொகையில் ஜூம்ஆ கடமையாக்கப்பட்ட சுமார் 10,000 பேரில் 3,000 பேர் கூட பெரியபள்ளி ஜூம்ஆவுக்கு கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள். (சாதாரண நோய்கள், ஓரளவு வயது முதிர்வு, சிறுவர்கள் பங்குபற்றுவதில்லை ஆகவே அவர்களுக்கு பயிற்சியளிப்பதன் அவசியம் போன்றன உட்பட ஏனையவை)

 

5. பெருந்திரளான மக்கள் பள்ளியின் முற்றவெளியிலும் பாதையோரத்திலும் வெயிலிலும் மழையிலும் நின்று தொழும் நிலை.

 

6. கலவர காலங்களில் குடியிருப்பாளர்களுக்கான பாதுகாப்பு. (பல பள்ளிகளில் ஜூம் ஆ நடக்கும்போது நேர மாற்றங்களை செய்யலாம்)

 

7. ஏற்கனவே புதிய மண்டபமொன்று கட்டப்பட்டதால் பெரியபள்ளி தனது கட்டிடக்கலையம்சத்தை இழந்து நிற்கின்றது. அதில் மாடியொன்றை அமைத்து அதனை மேலும் சீர்குலைக்காமல் பாதுகாக்கவேண்டிய அவசியம்.

 

8. நம் முன்னோர் நமக்கு வழங்கிய சொத்தின் பழமை, அழகு, வனப்பு, தோற்றம், கம்பீரம், கலாசார, பாரம்பரிய, முதுசத்தை பாதுகாக்கவேண்டிய கடமை (இக்காலப் பகுதியில் பெரியபள்ளியின் அழகு முற்றம் (Courtyard) ஜும்ஆ தொழுவதற்கென சீமெந்துகளால் மூடப்பட்டது. மேலும் தற்போதைய ஹவுள் உடைக்கப்பட்டு பள்ளி விஸ்தரிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்களும் நிலவின)

பள்ளியை மேலும் விஸ்தரிக்காமல் ஜும்ஆ பரவலாக்கப்படவேண்டும் என்பதில் புத்தளம் ஜம்இய்யத்துல் உலமாவும் ஆதரவளித்தது.  இக் கருத்தை சமூகமயமாக்குவதற்கும் உலமாக்கள், நகரின் முக்கியஸ்தர்கள் போன்றோரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் (YMGA) பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டது. பள்ளி நிருவாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தனிப்பட்டரீதியிலும் குழுமுறையிலும் சந்திப்புக்கள் இடம்பெற்றன. துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நூர் பள்ளியில் மற்றுமொரு ஜூம்ஆவைத் தொடங்குவதற்குத் தேவையான காணியைப் பெற்றுக்கொடுத்தல், போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற முயற்சிகளிலும் சங்கம் ஈடுபட்டது.

பெரிய பள்ளியில் மட்டும் ஜூம் ஆ நடைபெறுவது சமூக ஒற்றுமையை காட்டுவதாகக் கருதப்பட்டாலும் ஜூம்ஆ பரவலாக்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் (Y.M.G.A.) வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

இன்னும்  வரும் . . .