புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 8
(இஸட். ஏ. ஸன்ஹிர்)
YMGA யினால் பாத்திமா கல்லூரியில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டம்
17.02.1984 வெள்ளி மாலை 4.00 மணிக்கு புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் (YMGA) ஒழுங்குசெய்யப்பட்டு, பாத்திமா மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றில் உலமாக்கள், நகர எல்லைக்குள் இருந்த 14 பள்ளிவாசல்களின் நிருவாகிகள், கல்விமான்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு ஜூம்ஆ பரவலாக்கம் தொடர்பாக பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

Y.M.G.A. தலைவர் பேராசிரியர் M.S.M அனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்துக்கு, காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் A.M. சேகுமதார், வட்டாரக் கல்வி அதிகாரி A.N.M. ஷாஜஹான், மெளலவி M.I.M. அபூஸாலிஹு, கிராமோதய சபை தலைவர் S.A.C.S. ஹுசைன், சன்மார்க்க விடயங்களில் முன்னின்றுழைக்கும் A.C.S. அஹமது (பள்ளிமாமா), ஆசிரியர் N.P. ஓருபே போன்றோர் சமூகமளித்து கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்ட ஆரம்பத்தில் ஜூம்ஆ பரவலாக்கப்படல் வேண்டும் என வக்ப் சபைக்கு YMGA யினால் அனுப்பிவைக்கப்பட்ட மகஜர் உப செயலாளர் ரவூப் நிஸ்தார் அவர்களால் வாசித்துக்காட்டப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய, YMGA தலைவர் M.S.M. அனஸ் அவர்கள், “ஜூம்ஆ பரவலாக்கல் என்பது பிரிவினை அல்ல. மாறாக பெரியபள்ளி நிருவாகத்தின் கீழ் பொருத்தமான இடங்களில் ஜூம்ஆ பரவலாக்கம் இடம்பெறலாம்” என சுட்டிக்காட்டினார். மேலும், “பெரியபள்ளியில் இது தொடர்பாக இடம்பெற்ற கூட்டமொன்றில், புத்தளத்தில் இயங்கும் பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகளும் நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர். அதில் பல ஜூம்ஆக்களின் அவசியம் வலியுறுத்தப்பட்டபோதும் பள்ளி நிருவாகம் அதனைப் பொருட்படுத்தாமல் மாடிக் கட்டிடத்தை அமைக்க முயல்வது கவலைக்குரியது” என்றும் தெரிவித்தார். “பள்ளியில் எடுக்கப்பட்ட ஏகோபித்த முடிவினை நிருவாகம் நிராகரிப்பது தவறு” என A.N.M. ஷாஜஹான் அவர்களும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மஸ்ஜிதுல் ஹைராத் நம்பிக்கை சபை உறுப்பினர் S.A.C.S. ஹுசைன் அவர்கள், பெரியபள்ளி நம்பிக்கை சபை ஏதேச்சாதிகாரமாக செயற்படுவதாகக் குறிப்பிட்டார். இதே கருத்தினை மெளலவி அபூஸாலிப் அவர்களும் வலியுறுத்தியதுடன் பல ஜூம்ஆக்களின் தேவைகுறித்தும் விளக்கமளித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட A.C.S. அஹ்மது அவர்கள், “நகர விஸ்தரிப்புக்கேற்ப ஜூம்ஆக்கள் பரவலாக்கப்படல்வேண்டும்” என்ற கருத்தினை முன்வைத்தார். மெளலவி சேகுமதார் அவர்கள் பேசும்போது, “ஜூம்ஆ விஸ்தரிப்புக்கு என சேகரிக்கப்பட்ட நிதியை பள்ளி நிருவாகம் தனது சுய விருப்பில் செலவழிக்க கூடாது” எனவும் “புதிதாக எங்கு ஜூம்ஆ தொடங்கப்படுகின்றதோ அங்கு அது செலவழிக்கப்பட வேண்டும்” என்றும் “அதன் மூலம் அப்பள்ளியை மேலும் வசதிமிக்கதாக மாற்றலாம்” எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் “இதனை செய்யமுடியாவிட்டால் நிருவாகிகள் விலகிக்கொள்வதே சிறந்தது” என்றும் தெரிவித்தார்.





இக் கூட்டத்தின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பொருத்தமான இடங்களில் புதிய ஜூம்ஆக்கள் தொடங்கப்படல் வேண்டும்.
2. இதற்கென ஒரு விஷேட குழு ஒன்று அமைக்கப்படல் வேண்டும் . அது பெரிய பள்ளிக்கு ஆலோசனைகளை வழங்கவேண்டும்.
3. புத்தளம் பெரிய பள்ளியானது சமயக் கடமைகளை நிறைவேற்றுவதுடன் இஸ்லாமிய கலாசார சமூக நடவடிக்கைகளில் பங்குகொள்ளும் விதத்தில் புத்தளம் பிரதேசத்திலேயே முதன்மை பள்ளியாக அதன் நிருவாக விடயங்களும் மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
இறுதியில் மெளலவி அபூஸாலிப் அவர்களின் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் மாலை 6.00 மணியளவில் நிறைவுபெற்றது.
இன்னும் வரும் . . .