(இஸட். ஏ. ஸன்ஹிர்)

அறிமுகம்

இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்வோரோ அல்லது அதனைத் தெரிந்துகொள்ள விரும்புவோரோ புத்தளம் பிரதேசத்தைத் தவிர்த்து, அப்பால் நகர முடியாது. இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சத்தின் பிரகாரம், விஜயன் இலங்கையில் வந்திறங்கிய தம்பபண்ணி, புத்தளத்திலேயே அமைந்துள்ளது. விஜயனின் வருகைக்கு முன்னரே அரேபியர், உரோமர், பாரசீகர், பீனிசியர் போன்றோர் இப்பிரதேசத்துக்கு வந்துபோயுள்ளனர். மொரோக்கோவைச் சேர்ந்த புகழ்பெற்ற யாத்திரிகர் இபுனு பதூதா 1345 இல் இலங்கையில் வந்திறங்கிய இடமும் புத்தளமேயாகும். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுடனும் புத்தளம் ஆரம்பம்முதலே தொடர்புறுகின்றது. இப் பிரதேசம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே அரேபிய பாரசீக தொடர்புகளைக் கொண்டிருந்தது. 16 ஆம் நூற்றாண்டுகளில் கேரள, தமிழ்நாட்டு முஸ்லிம்களின் தொடர்புகள் இங்கு வலுவடைகின்றன.

இபுனு பதூதா பயணப் பாதை

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் பள்ளிவாசல்கள் பிரதான பங்கேற்கின்றன.முஸ்லிம் சமுகத்தின் மத்திய நிலையமாக பள்ளிவாசல்கள் விளங்குகின்றன. முஸ்லிம்கள் எங்கு குடியமர்கின்றனரோ, அன்றே அங்கு பள்ளிவாசல்களும் தோற்றம்பெற்றன. வெள்ளிக்கிழமை ஜூம்ஆ உட்பட ஐவேளைத் தொழுகைகளும் பள்ளிவாசல்களில் நடைபெறுவது அதற்கான முழுமுதற் காரணியாகும். முன்னைய  காலங்களில் குர்ஆன் கற்பிப்பதற்கு மட்டுமன்றி எண், எழுத்து போன்ற ஆரம்பக் கல்விக்கான வழிகாட்டல்களும் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றன. இப்பள்ளிக்கூடங்கள் ‘மக்தப்’ அல்லது ‘குத்தாப்’ என அழைக்கப்பட்டன. சமூக விவகாரங்கள் பள்ளிவாசல்களில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு அமுலாக்கப்பட்டன. மத்ரஸாக்களில் உயர்கல்வி போதிக்கப்பட்டது.

 

இலங்கையின் வடமேற்குக் கரையில் சுமார் 1500 சதுர கி.மீ. கொண்டமைந்துள்ள புத்தளம் மாவட்டம் இலங்கையின் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். 1845 இல் வடமேல் மாகாணம் உருவாக்கப்பட்டபோது புத்தளம், சிலாபம், தெமலஹத்பற்று (ராஜவன்னிப்பற்று, குமாரவன்னிப்பற்று) என்பன இதில் உள்ளடக்கப்பட்டன. புத்தளம் இம்மாவட்டத்தின் தலைநகரமாக்கப்பட்டது. தமிழ்ப்பற்றில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் பரவலாக சிதறி வாழ்ந்துவந்தனர். 01.01.1888 முதல் புத்தளம் (தெமலஹத்பத்து உட்பட), சிலாபம் என்பன இரு தனியான நிருவாக, வருமான மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 01.10.1953 இல் புத்தளம், சிலாபம் என்பன புத்தளம் மாவட்டம் என்ற பெயரில் இணைக்கப்பட்டன. 1921 இல் புத்தளம் மாவட்டத்தில் 34.7 சதவீத முஸ்லிம்களும் சிலாபம் மாவட்டத்தில் 4.04 சதவீத முஸ்லிம்களும் வசித்து வந்தனர். இக்காலப்பகுதியில் புத்தளம் நகரசபை எல்லைக்குள் 61 சதவீத முஸ்லிம்கள் (4211 பேர்) வாழ்ந்தனர்.

Puttalam district – 1908

புத்தளம் கடல்நீரேரியை அண்மித்த சற்று மேடான பகுதியில் புத்தளம் நகர முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதுடன் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்கு சற்று முன்னர் இது நடைபெற்றிருக்கலாம். புத்தளம் மக்களால் ‘பெரியபள்ளி’ என அழைக்கப்படும் தற்போதைய புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ மஸ்ஜித் கட்டப்படுவதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டமைக்கு சான்றுகள் உள்ளன.

 

தற்போதைய புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் கலையம்சங்கள் பொருந்திய ஓர் அழகிய கட்டிடமாகும். 1938 இல் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டாலும் கூட, அதற்கு முன்னரே இவ்விடத்தில் ஓர் அழகிய கண்கவர் தர்ஹா ஒன்று இருந்தது. இது ‘முஹியத்தீன் தர்ஹா’ என அழைக்கப்பட்டது. நல்லடியார்களின் அடக்கஸ்தலங்களுடன் இணைந்தவகையில் தர்ஹாக்கள் அமைக்கப்பட்டன.  பொதுவாக இதில் தொழுகை நடைபெறுவதில்லை. அன்றைய புத்தளம் முஸ்லிம்கள் தமது கலாசார செயற்பாடுகளின் ஓர் அம்சமாக இந்த முஹியத்தீன் தர்ஹாவில் ‘சந்தனக்கூடு எடுக்கும் வைபவத்தை பிரபலமாக நடத்தினர். இங்கு வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. பிற்காலத்தில் இந்த தர்ஹாவில் தொழுகைகளும் நடைபெற்றன.

இன்னும் வரும் …