(இஸட். ஏ. ஸன்ஹிர்)

காணி அன்பளிப்பு

புத்தளம் பெரியபள்ளி, மெளலாமக்காம் பள்ளி ஆகியவற்றுக்கான காணிகள் வன்னியர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட பெண்களால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. மீரா உம்மா என்பவரால் பெரியபள்ளி அமைந்துள்ள காணி உட்பட பெருமளவு நிலமும் அவரின் சகோதரியாகக் கருதப்படும் மீரா நாச்சியா என்பவரால் மெளலாமக்காம் பள்ளி அமைந்துள்ள காணி உட்பட பெரிய நிலப்பரப்பொன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

மெளலாமக்காம் பள்ளி – 1980 களில்

சிங்கள மன்னர்களால் செப்புப் பட்டயங்கள் அளித்து, வன்னியர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட மீரா உம்மா என்ற பெண்மணி 1494 ஆம் ஆண்டளவில் முஹையத்தீன் ஆண்டவர் தர்ஹாவுக்காக இரண்டு ஏக்கருக்கும் அதிகமான, ஒரு பெரு நிலத்தை அன்பளிப்பு செய்தார். வடக்கே முதலாம் குறுக்குத் தெருவும் தெற்கே கங்காணிக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திலிருந்து கடலுக்கு நீர் வழிந்தோடும் ரேகடிக் கால்வாயும், மேற்கே கடல்நீரேரியும் கிழக்கே கங்காணிக்குளம் அமைந்திருந்த நிலப்பரப்பும் (தற்போதைய இப்னு பதூதா மண்டபம் அமைந்துள்ள பகுதியிலிருந்து போல்ஸ் வீதி வரை) மீரா உம்மா அன்பளிப்பு செய்த காணியாகும். இக் காணியில் கடற்கரையோரமாய், தற்போது பெரிய பள்ளி அமைந்துள்ள இடத்தில் அன்னாரின் எண்ணப்படி முஹையத்தீன் தர்ஹா அமைக்கப்பட்டது.

புத்தளம் முகையதீன் தர்ஹா, M.A. சாலிஹு – 1946 (கையேட்டிலிருந்து)

 

புத்தளத்தின் ஆரம்ப கால பள்ளிவாசல்களுள் ஒன்றாகக் கருதப்படும் மீராமக்காம் பள்ளி (மீராலெவ்வை பள்ளி), தற்போது மஸ்ஜித் வீதியில் முஸ்லிம் கலாசார நிலையம்,  மீலாத் மேடை போன்றன இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது. இப்பள்ளியிலேயே அன்று ஐவேளைத் தொழுகைகளும் ஜூம்ஆவும் இடம்பெற்றன. இப்பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னரே இங்கு இன்னுமொரு பள்ளிவாசல் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மீலாத் மேடை – April 17th, 2004 

மீராமக்காம் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. பொதுவாக பள்ளிவாசலுக்கு அண்மையில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் நடைமுறை இருந்துவந்துள்ளது. மீராலெவ்வை பள்ளி பழுதடைந்ததன் பின்னர் அதனை அப்படியே கைவிட்டு, முஹையத்தீன் தர்ஹாவில் தொழுகைகள் இடம்பெற்றன. பின்னர் தர்ஹா இடிக்கப்பட்டு அவ்விடத்தில் தற்போதைய பெரியபள்ளி கட்டப்பட்டது.

இன்னும் வரும் …