(இஸட். ஏ. ஸன்ஹிர்)

புத்தளம் நகரின் ஆரம்பகாலப் பள்ளிவாசல்கள் சில

 

ஆரம்ப காலங்களில் எமது பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் களிமண்ணினால் கட்டப்பட்டு தென்னை ஓலையினால் வேயப்பட்டன. வீடுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டன. புத்தளத்தில் மிகப்பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று பாரியப்பா பள்ளியாகும். முன்பு அங்கு ஸியாரம் ஒன்று அமைந்திருந்தது. பள்ளி விஸ்தரிப்பின் போது ஸியாரம் பள்ளியுடன் இணைக்கப்பட்டு கட்டப்பட்டது. இப்பள்ளியைக் கட்டுவதற்கு சபாநாயகர் H.S. இஸ்மாயில் அளப்பரிய பங்களிப்பை செய்தார். மீரா லெவ்வைப் பள்ளிவாசலுக்கு முன்னரே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. உப்பு, நெற்செய்கை போன்ற வாழ்வாதார முயற்சிகள் இப்பகுதியில் இடம்பெற்றமை இதற்குக் காரணங்களாக இருக்கலாம். புத்தளம் முஹியத்தீன் தர்ஹாவில் இடம்பெற்ற சந்தனக்கூடு தூக்கும் வைபவத்தின் இரண்டாம் நாளன்று அக்கூடு பாரியப்பா பள்ளிவரை எடுத்துச் செல்லப்படும்.

கரைத்தீவுப் புலவர் வரகவி செய்கு அலாவுதீன், 1900 களின் ஆரம்பத்தில், தனது புத்தளம் மாநகர் சந்தனக் கூட்டு சிந்துவில்
‘அப்புறம் போகையில் உப்பளம் தோணுது
சங்கைக் குகந்திடும் பாரியப்பா பள்ளி
சந்தோஷமா யொரு பாத்திஹா ஓதியே….’ என்று பாடுகிறார்.

பாரியப்பா பள்ளி 1980/90 களில்

பாரியப்பா பள்ளி 2004

முஹியத்தீன் தர்ஹாவைக் கட்டுவதற்காக மீரா உம்மா அன்பளிப்பு செய்த காணிக்கு வடக்கே ‘மவ்லா’ அல்லது மவ்லா உம்மா என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் 1880 களில் மவ்லாமக்காம் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இங்கு 1993 காலப்பகுதிவரை ஸியாரம் ஒன்றும் பெரிய சலவைக் கல்லிலான மீஸான் (ஸியாரத்துக்கான அடையாளக் கல்) ஒன்றும் இருந்தது. இது இப்பள்ளிக்கு காணியை அன்பளிப்பு செய்தவருடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அண்மைக்காலம் வரை காணப்பட்ட அந்த அடையாளக் கல் இன்றில்லை.

பழைய பள்ளிவாசல் இருந்த இடத்தில், புத்தளம் நகரக் கடைகளில் அன்று தொழில் புரிந்தோரின் முயற்சியினால் கட்டப்பட்ட சிறிய அளவிலான பள்ளிவாசல் பின்னர் 1925 இல் S.A.K. ஹமீது ஹுசைன் மரைக்காரினால் விஸ்தரிக்கப்பட்டது. தற்போதைய பள்ளிவாசல் 2004 காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். மீரா உம்மா அன்பளிப்பு செய்த காணியில் மீராமக்காம் பள்ளிவாசலும் மெளலா உம்மா  அன்பளிப்பு செய்த காணியில் மெளலாமக்காம் பள்ளிவாசலும் அமைக்கப்பட்டன.  

 

மவ்லாமக்காம் பள்ளி 1980/90 களில்

(இப்புகைப்படம் எடுக்கப்பட்டபோது இடதுபுறம் ஸியாரம் அமைந்திருந்தது)

புத்தளம் நகரின் பழைய பள்ளிகளில் மற்றுமொன்று ஜேபி லேனில் அமைந்துள்ள ‘யாஹுசைன்’ (ஜாவுசன்) பள்ளியாகும். கர்பலா யுத்தத்தினை நினைவு கூறும் வகையில், ஆரம்ப காலங்களில், முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் இங்கு ‘பஞ்சா எடுத்தல்’ என்ற ஒரு கலாசார வைபவம் இடம்பெற்றுள்ளது. இன்று அப்பள்ளிவாசல் இல்லை. எனினும் அவ்விடத்தில் புதிய பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு 19.08.2011 அன்று புத்தளத்தின் 31 வது பள்ளிவாசலாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் வீதியில் அமைந்துள்ள புதுப்பள்ளி எனப்படும் ஐதுரூஸ் பள்ளி 1885 இல் (ஹிஜ்ரி 1302) இல் கட்டப்பட்டதாகும். தற்போதைய பெரிய பள்ளி கட்டப்பட்ட காலப்பகுதியில் இப்பள்ளியிலேயே ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது. பெரியபள்ளி கட்டப்படுவதற்கு முன்னரே இப்பள்ளி கல்லினால் கட்டப்பட்டு  திறந்துவைக்கப்பட்டமையினால் ‘புதுப்பள்ளி’ என பொதுமக்கள் இதனை அழைத்திருக்கலாம். 

புதுப்பள்ளி எனப்படும் ஐதுரூஸ் பள்ளி – 2004

1894 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட பள்ளியே ‘மஸ்ஜிதுல் கறார்’ ஆகும். கங்காணிக்குளம் அமைந்திருந்த பகுதியில் இப்பள்ளி கட்டப்பட்டதால் “கங்காணிக்குளம் பள்ளி” என ஊரார் அழைத்தனர். சீனா மீனா என அழைக்கப்பட்ட சீனா மீராசாஹிப் இப்பள்ளிவாசலைக் கட்டியுள்ளார்.  அப்போது அப்பள்ளியின் அருகிலிருந்த ஓலைக் கொட்டிலில் குர்ஆன் மத்ரஸா ஒன்றும் நடைபெற்று வந்துள்ளது. தற்போதைய கங்காணிக்குளம் பள்ளிவாசலுக்கு எதிர்புறமாக, வீதிக்கு மறுபக்கம், தற்போதைய வாகனத் தரிப்பிடம் உள்ள பகுதியில் அன்று அப்பள்ளிவாசல் அமைந்திருந்தது.

மஸ்ஜிதுல் கறார் (கங்காணிக்குளம் பள்ளி) 1980/90 களில்

இன்னும் வரும் …