(இஸட். ஏ. ஸன்ஹிர்)

பெருக்க மரமும் (baobab tree) பள்ளிவாசலும்

இலங்கையருள் முதலாவது சிவில் சேவை அதிகாரியும் முதலாவது மாவட்ட நீதிபதியுமாகிய புத்தளம், கல்பிட்டியைச் சேர்ந்த பேரறிஞர் சைமன் காசிச்செட்டி முதலியார் அவர்கள் தனது கெசட்டியரில் (1834), புத்தளம் நகரில் ஓலையினால் வேயப்பட்ட களியினாலான சிலநூறு சிறிய வீடுகள் இருப்பதாகவும் இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர் எனவும் கூறுகிறார். அத்துடன் நகரின் மத்தியில் பிரயாணிகளைக் கவரக்கூடிய மரமொன்று இருப்பதாகவும் அது பெருக்கமரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெருக்கமரம் (பப்புரப் புளி, இராட்சதப் புளி, தொதி) (adansonia digitata) பள்ளிவாசல்களை அண்மித்து காணப்பட்டது. கல்பிட்டியிலும் இது இருந்துள்ளது. திகளி கிராமத்தில், பள்ளிவாசல் வளவில் நின்ற ஒரு மரம் 1991 செப்டம்பர் காலப்பகுதியில் வேரோடு சாய்ந்தமை துரதிஷ்டமான நிகழ்வாகும். மன்னாரில் இன்றும் பல மரங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஒட்டகங்களுக்கும் ஆடுகளுக்கும் இவற்றின் இலைகள் உணவாகப் பயன்பட்டன. அரேபியர் மூலம் இவை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். ஆளுநர் ஜேம்ஸ் எமர்ஸன் டெனென்ட் என்பாரும் புத்தளம் பெருக்க மரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 பெருக்க மரம் – மன்னார்

புத்தளம் பழைய கொத்பாப் பள்ளிவளவில் நின்ற பெருக்கமரம் பற்றியும் அதன் அண்மையிலிருந்த பள்ளிவாசல் பற்றியும் சைமன் காசிச்செட்டி குறிப்பிடுகையில் அது, சுமார் 70, 80 அடி உயரமும் 45 அடி சுற்றளவும் கொண்டது எனவும் மலைக்குன்றைப் போல கடும் கரிய நிறத்துடன் தோற்றமளித்ததாகவும் இம்மரம், நிலத்திலிருந்து 8 அடியில் இரண்டாகப் பிரிந்து நேர் உயரமாக வளர்ந்திருந்ததாகவும் சொல்கின்றார். அத்துடன் ஒரு கிளையின் சுற்றளவு 22.5 அடியாகுமெனவும் மற்றையது 26.25 அடி என்றும், பருக்களுக்கு மருந்தாக மக்கள் இதன் இலைகளைப் பயன்படுத்தினர் என்றும் ஐந்து, ஆறு அங்குலம் கொண்ட மயிர் அடர்ந்த பழங்களின், புளிப்புடன் கூடிய இனிப்பான இதன் சுளைகளை மக்கள் சுவைத்தனர் எனவும் காசிச்செட்டி குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசல் பற்றி அவர் குறிப்பிடும்போது, பெருக்கமரத்துக்கு அண்மையில் கடற்கரையையொட்டி அழகான பள்ளிவாசல் ஒன்று உள்ளதாகவும் அதைச் சுற்றி உயரமற்ற மதில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் வாயில் மனாராக்களைப் போன்று சில தூண்களை கொண்டிருப்பதாகவும் இங்கு ஜும்ஆத் தொழுகை நடைபெறுவதக்கவும் கூறுகின்றார். சைமன் காசிச்செட்டி குறிப்பிடும் அந்த அழகிய தர்ஹாவின் புகைப்படம்கூட தற்போது இல்லை.

இன்னும் வரும் …