புத்தளம் பெரியபள்ளி – 05
(இஸட். ஏ. ஸன்ஹிர்)
முஹியத்தீன் தர்ஹா
மீரா உம்மா என்பவர் சந்தனக்கூடு எடுக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் தர்ஹாவுக்காக ஒரு பெரு நிலப்பரப்பை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்நிலத்தில் ஊரவர்கள் முயற்சியால் கடற்கரையோரமாய் முஹியத்தீன் தர்ஹா அமைக்கப்பட்டது. தற்போது பெரிய பள்ளி அமைத்திருக்கும் பகுதியிலேயே அந்த அழகிய தர்ஹா தர்ஹா அமைந்திருந்தது. ஆரம்பத்தில் ஒரு ஸியாரம் (அடக்கஸ்தலம்) அங்கு இருந்துள்ளது. அதனையொட்டியே காலப்போக்கில் தர்ஹா அங்கு கட்டப்பட்டது.
கல்பிட்டி, பள்ளிவாசல்துறை செய்யது ஹாஜா ஷைகு அலாவுத்தீன் ஸியாரம்
இங்கு அடங்கப்பட்டவரின் பெயர் விபரம் தெரியவில்லை. இந்த ஸியாரத்தின் தோற்றம் 13 ஆம் நூற்றாண்டுக்குரியதாக அல்லது அதற்கு சற்று முற்பட்டதாக இருக்கலாம். வருடந்தோறும் பாரசீக நகரில் பிறந்த, குத்பு நாயகம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்ற மகானின் ஞாபகர்த்தமாகப் பல நிகழ்ச்சிகள் இந்த தர்ஹாவில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பிரசித்திபெற்றது சந்தனக் கூடு எடுக்கும் வைபவமாகும்.
பள்ளிவாசல்துறை செய்யது ஹாஜா ஷைகு அலாவுத்தீன்
தர்ஹாவும் பள்ளிவாசலும்
பொதுவாக தர்ஹாக்களில் தொழுகைகள் இடம்பெறுவதில்லை. ஐவேளைத் தொழுகைகள், ஜூம்ஆத் தொழுகை என்பன தற்போது கலாசார மண்டபம் அமைந்துள்ள பகுதியிலிருந்த மீரா மக்காம் பள்ளிவாசலில் இடம்பெற்றன. அப்பள்ளி பழுதடைந்ததன் பின்னர் தர்ஹாவில் தொழுகைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜூம்ஆத் தொழுகை இங்கு இடம்பெற்றுள்ளது. தர்ஹாவை உடைத்து அவ்விடத்தில் தற்போதைய பெரிய பள்ளி கட்டப்பட்ட காலப்பகுதியில் புதுப்பள்ளி என அழைக்கப்படும் ஐதுரூஸ் பள்ளியில் ஜூம்ஆ இடம்பெற்றுள்ளது.
இன்னும் வரும் …