புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன- 01 (1935 – 2020)
புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன… (1935 – 2020) – 01
இஸட். ஏ. ஸன்ஹிர் (+94 777 48 49 12 zanhir@gmail.com)
(அல்ஹாஜ் A.N.M. ஷாஜஹான் அவர்கள் எழுதிய புத்தளம் வரலாறும் மரபுகளும், 21.12.1984 இல் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் மீலாத் விழா போட்டிகள் பொறுப்பேற்று நடத்தப்பட்டபொது வெளியிடப்பட்ட மீலாத் ஐம்பதாம் ஆண்டு நினைவு மலரில் பேராசிரியர் M.S.M. அனஸ் அவர்கள் எழுதிய ஆக்கம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு இத்தொடர் கட்டுரை எழுதப்படுகின்றது.)
.
அறிமுகம்
முஸ்லிம்களின் வேத நூலான அல் குர்ஆனில் மூஸா (மோசஸ்), ஈஸா (ஜீசஸ்) ஆகியோர் உட்பட இருபத்தி ஐந்து நபிமார்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். இவ்வரிசையில் இறுதித்தூதராக வந்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். அவருக்கு அறபு மொழியில் அருளப்பட்ட வேத நூலே குர்ஆன் ஆகும். தவ்ராத் வேதம் மூசா நபிக்கு ஹிப்ரு (அபராணி) மொழியில் வழங்கப்பட்டது. ஸபூர் வேதம் தாவூத் (டேவிட்) நபிக்கு யூனானி என்னும் கிரேக்க மொழியிலும் இன்ஜீல் வேதம் ஈஸா (இயேசு) நபிக்கு சுர்யானி மொழியிலும் வழங்கப்பட்டது. மேற்கூறப்பட்ட நான்கு இறை வேதங்களையும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். இறைதூதர் முஹம்மது அவர்கள் பிறந்த தினமே ‘மீலாத் நபி’ என அழைக்கப்படுகின்றது. ‘மீலாத்’ என்ற அரபு சொல்லுக்கு ‘பிறப்பு’ என்பது பொருள்படும்.
இஸ்லாமிய மாதங்களின் தொடரில் “ரபீவுல் அவ்வல்” மாதம், மூன்றாவது மாதமாகும். இம்மாதத்தில் பிறை பன்னிரண்டு அன்று நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள். புத்தளம் மக்கள் தமது பேச்சுவழக்கில் இம்மாதங்களை வேறு பெயர் கொண்டு அழைத்தனர். அந்தவகையில் ரபீவுல் அவ்வல் மாதத்தினை ‘மெளலூத்து மாதம்’ (மெளலீது – மீலாத்) என்பர். முஸ்லிம்கள் தமது சமய நடவடிக்கைகளுக்காக சந்திர ஆண்டைப் பின்பற்றுகின்றனர். (மேலதிக விபரங்களுக்கு http://puttalamonline.com/2020-04-12/puttalam-historical-notes/142223/ )
இலங்கை, இந்திய முஸ்லிம்களிடையே ஒரு காலத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் மிக புகழ்பெற்றதாயிருந்தது. இம்மாதம் நெருங்கி வரும்போதே வீடுகளைத் துப்பரவு செய்யத் தொடங்குவர். சிலர் வெள்ளையடிப்பர். பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் பச்சை நிறத்தில் வெள்ளைப்பிறை கொடியேற்றுவர். முகம்மது நபியின் வரலாறு, புகழ் பாடக்கூடிய ‘சுப்ஹான மெளலீது’ என்ற புகழ்மாலை, பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் ஓதப்படும். இறுதியில் விஷேடமாகத் தயாரிக்கப்படும் தேங்காய் சோறு (மெளலீது சோறு, நெய்ச்சோறு) பகிர்ந்தளிக்கப்படும்.
புத்தளத்தில் மீலாத் மெளலீதும் தேங்காய்ச் சோறும்
மெளலீது மாதம் என்றாலே புத்தளம் களைகட்டும். வீதி எங்கும் சாம்பிராணி, சந்தனக்குச்சி (ஊதுபத்தி) வாசம் வீசும். வீதிகள் சோடனைத் தாள்களால் (பட்டத்தாள் – பொலித்தீன் அல்ல) பந்தல் போட்டு அலங்கரிக்கப்படும். இடைக்கிடையே ‘பூந்தாங்குடை’ எனப்படும் அலங்காரக் கம்பங்கள் நாட்டப்பட்டிருக்கும். அதில் பிரகாசமான விளக்குகளும் பொருத்தப்பட்டிருக்கும். மீன் மார்க்கெட், ஹமீத் ஹுசைன் கம்பெனி சுற்று வட்டம் உட்பட்ட மஸ்ஜித் வீதி, முதலாளி வீடு சூழவுள்ள பகுதிகள்,போன்றன பிரதானமாக சோடிக்கப்படும் இடங்களாகும். பிற்காலங்களில் போல்ஸ் வீதி போன்றனவும் சோடிக்கப்பட்டன.
வீடுகளில் வெசாக் கூடுகளை ஒத்த கூடுகள் தொங்கவிடப்படும். அதில் ‘திரு நபி ஜனன விழா’ போன்ற வாசகங்கள் அட்டையில் வெட்டி மேலே பட்டுக்கடதாசியால் ஒட்டி விடுவார்கள். இரவில் மெழுகுவர்த்தி ஒளியில் அது ஒளிர்ந்துகொண்டிருக்கும். மெளலீது சோறு பங்கிடப்படும் இடங்கள் விஷேடமாக சோடிக்கப்படும். இந்நாட்களில் மக்கள் பைத்துக்கள் ஓதி ஊர்வலமாகவருவர். ஆங்காங்கே பானங்களும் தீன்பண்டங்களும் அவர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் ஊரின் ஒற்றுமையைப் பேணக்கூடியதாக இருந்ததாக 1933 இல் தொடங்கப்பட்ட முஸ்லிம் அபிவிருத்தி சங்க செயலாளர் என்.அப்பாஸ் மரைக்கார் 1980 களில் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். (மேலதிக விபரங்களுக்கு http://puttalamonline.com/2020-10-05/puttalam-uncategorized/143747/ )
ஆரம்பகாலங்களில் புத்தளம் நகரில் மெளலீது வைபவம் இலங்கையில் எங்குமில்லாத வகையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. சிலர் மெளலீது கந்தூரி, களரி நடத்துவதற்கு பெரிய மண்டபம் அமைத்து வீடுகட்டும் அளவிற்கு இங்கு இது முக்கியத்துவம் பெற்றிருந்தது.
நகரின் முதலாளி வீட்டிலும் மரைக்கார்மார்களின் வீடுகளிலும் இடம்பெற்ற கந்தூரி வைபவங்கள் பிரசித்தமானவையாகும். மரைக்கார் குடும்பம், முதலாளி குடும்பம் என்பன வேறுபட்ட இரு குடும்பங்களாகும். செட்டித் தெரு Casim Palace, மரைக்கார் குடும்பத்துக்குரியது. இது இன்று இல்லை. North Road, பழைய வீடுகள் (Crescent lodge, Salama Villa South, Salama Villa North) முதலாளி குடும்பங்களுக்கு உரியன.

பொதுவாக இம்மாதத்தில் எல்லா வீடுகளிலும் மெளலீது ஓதுவர். சிலர் வீடுகளிலும் பொது இடங்களிலும் மெளலீது ஓதி, தேங்காய் சோறு (மெளலீது சோறு, நெய்ச்சோறு) பங்கிடுவர். கிராமங்களிலும் இந்த வழக்கம் இருந்துவந்துள்ளது. மெளலீது சோறு களரி என்பன கொடுப்பதற்காகவே பாத்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. புத்தளத்தில் இ.செ.மு. (E.S.M.) எனப்படும் முதலாளி வீட்டு மெளலீது புகழ்பெற்றதாகும். நகர மக்களுக்கு மட்டுமன்றி அயல் கிராமத்தவர்களுக்கும் இரவும் பகலும் கந்தூரி சாப்பாடு வழங்கப்படும். இதற்காக ஆடுகள் மட்டுமே அறுக்கப்படும். இந்தியாவில் இருந்து அதற்காகக் கப்பலில் ஆடுகள் கொண்டுவரப்படும். மன்னாரில் இருந்தும் ஆடுகள் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவரப்படுவதுமுண்டு.

முதலாளி வீடு, North Road, Puttalam (Crescent lodge)
http://puttalamonline.com/suwadikudams/esm-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae/
பழைய மேலும் புகைப்படங்களுக்கு மேலே Click பண்ணவும்
முதலாளி வீட்டு (Crescent lodge) மெளலீது களரிக்காகப் பயன்படுத்தப்பட்ட சகல விதமான பீங்கான் கோப்பைகளும் இங்கிலாந்தில் இருந்து விஷேடமாக தருவிக்கப்பட்டவையாகும். அதில் ஒவ்வொன்றிலும் இ.செ.மு. என்ற விலாசம் பொறிக்கப்பட்டிருந்தது. சஹன்கள், பீங்கான்கள் (காப்பிளான்கள்) , கோப்பைகள், சிறிய பெரிய தட்டைப் பீங்கான்கள், பீரிசுகள், நீர் வைக்கும் கோப்பைகள் (போஸ் கோப்பை), நீர் அள்ளும் சிறிய கோப்பைகள் என எல்லாப் பாத்திரங்களிலும் பெயர் பொறிக்கப்பட்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. தேவையான அளவை விட அதிகமாகவே அவை இருந்தன. உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களிலும் விலாசம் பொறிக்கப்பட்டிருந்தது. புத்தளம் நகரில் சஹன் முறையில் சேர்ந்து சாப்பிடும் மரபு இன்றும் இல்லை. எனவே தனித்தனியே சாப்பிடுவதற்குத் தேவையான வகையில் பாத்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
முதலாளியின் உத்தரவின் பிரகாரம் ஊரை சாப்பிட அழைக்கும் நடைமுறை ஒன்றும் இருந்தது. பள்ளி முஅத்தின் ஒருவர் வீடு வீடாகச் சென்று, ” இந்த வளவுக்குள் இருக்கும் அனைவரையும் முதலாளி அவர்கள் ஸலாம் சொல்லி மெளலூதுக்கு அழைக்கிறார்” என்று வேண்டிக்கொள்வார். மெளலீது ஓதும் லெப்பை உலமாக்கள் உட்பட அனைவருக்கும் பணம் சன்மானமாக வழங்கப்படும். ஓதும் இடத்துக்கு மேலாக வெண்ணிற சீலை கட்டி சுற்றிவர வர்ண சீலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதில் பணமுடிப்புக்கள், சுவையான தீன் பண்டங்கள், பரிசுப்பொருட்கள் போன்றன கட்டி தொங்கவிடப்படும். மெளலீது முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று ஓதி இறுதியில் குதூகலமாகக் குதித்துக் குதித்து அவற்றைப் பிய்த்துப் பிடுங்கி எடுப்பர். (தலை பாத்திஹா ஓதுவதிலும் இந்த நடைமுறை இருந்தது)
மெளலீது ஓதி முடிந்த பின்னர் சாப்பாடு கொண்டுவரும் வரை பதம் பாடுவர். இதில் போட்டியும் இடம்பெறும். புலவர்கள் கலந்துகொண்டு தாம் இயற்றிப்பாடுவதும் உண்டு. அனைவருக்கும் சாப்பாடு வைத்த பின்னர் பொறுப்பான ஒருவர் ‘பிஸ்மி’ (ஆரம்பம்) சொல்ல அனைவரும் சாப்பிட ஆரம்பிப்பர். அதே போன்று அனைவரும் சாப்பிட்டு முடிந்து துஆப் பிரார்த்தனை இடம்பெற்ற பின்னரே அனைவரும் ஒன்றாக எழுந்து செல்வர். அதில் ஒரு ஒழுக்க நடைமுறை பின்பற்றப்பட்டது.
புத்தளம் நகரில் இ.செ.மு. முதலாளி வீட்டில் மட்டுமன்றி ஊர் மரைக்கார், அப்பாஸ் மரைக்கார், மஜீது மரைக்கார், ஜலாலுதீன் மரைக்கார், சி.அ. க. ஹமீது ஹுசைன் மரைக்கார், போன்றோரின் வீடுகளிலும் நடந்த மெளலீதுகள் குறிப்பிடக்கூடியவை. பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப வீடுகளில் இதனை மேற்கொள்வர். இத்தகைய வைபவங்கள் ஊரார்,உற்றார், உறவினர்கள் ஒன்று சேர்வதற்கும் புத்துணர்வு ஏற்படுவதற்கும் மனமுரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு அன்புகொள்வதற்கும் பேருதவி புரிந்தன.







ரபீவுல் அவ்வல் மாதம் தொடங்கும்போது, பொது இடங்களிலும் சந்திகளிலும் கூட மெளலீது ஓதி பிறை பன்னிரண்டு அன்று சோறு சமைத்து பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் வழக்கம் இருந்தது. புத்தளம் நகரை சூழவுள்ள கிராமங்களிலும் மெளலீது, கந்தூரி நடைமுறைகள் இருந்தன. பன்னிரெண்டாம் கந்தூரி என் ஊரவர் இதனை அழைப்பர். கந்தூரி கொடுப்பதற்கு ‘நாரிசா’ என்ற சொல் இங்கு புழக்கத்தில் இருந்தது. பூலாச்சேனை பன்னிரெண்டாம் கந்தூரி நுரைச்சோலை பகுதியில் சிறப்புற்று விளங்கியது. . மெளலீது சோறு என்றாலே அதற்கென தனி மனமும் சுவையும் உண்டு என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான வறுமை நிலையும், பின்னர் ஏற்பட்ட மார்க்க ரீதியான கருத்துக்களும் இவ்வைபவங்கள் அருகி மறையக் காரணமாயின.
நிற்போர் இடமிருந்து வலம் இரண்டாவது கிராம விதனை அபூதாஹிர் (அப்பச்சா ஆசிரியர் மாமா – கோட் உடுத்தியிருப்பவர்), மூன்றாவது முஹம்மது இப்ராஹிம் லெப்பை (பள்ளி லெப்பை, கட்டுரை ஆசிரியரின் தந்தை வழி அப்பா)
புகைப்படங்கள் தகவல்கள் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
இன்னும் வரும் …
குறிப்பு: மீலாத் விழாவுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்கள், மெளலூது கிதாபுகள், அரபுத்தமிழ் புத்தகங்கள் இருப்பின் தயவுசெய்து அறியத்தரவும்
Zanhir +94 777 48 49 12 (zanhir@gmail.com)