புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன… (1935 – 2020)  –  02

இஸட். ஏ. ஸன்ஹிர்  (+94 777 48 49 12   zanhir@gmail.com)

(அல்ஹாஜ் A.N.M. ஷாஜஹான் அவர்கள் எழுதிய புத்தளம் வரலாறும் மரபுகளும், 21.12.1984 இல் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் மீலாத் விழா போட்டிகள் பொறுப்பேற்று நடத்தப்பட்டபோது வெளியிடப்பட்ட மீலாத் ஐம்பதாம் ஆண்டு நினைவு மலரில் பேராசிரியர் M.S.M. அனஸ் அவர்கள் எழுதிய ஆக்கம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு இத்தொடர் கட்டுரை எழுதப்படுகின்றது.)

மீலாத் விழா

மீலாத் விழா என்பது மார்க்கக் கடமைகளுள் ஒன்று அல்ல. எனினும் “ரங்கீலா ரசூல்” என்ற, நபிகளை அவதூறு செய்து எழுதப்பட்ட நூலின் எதிரொலியாகத் தோற்றம் பெற்றதே மீலாத் விழாவாகும். நம் முன்னோர் நமது நபிபெருமானார் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் ஒரு முறையாக, வரைமுறைகளுடன் இவ்விழாவைக் கொண்டாடினர். இதனை இன்றைய தேவைக்கேற்ப ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதில் தப்பேதுமிருப்பதாகத் தெரியவில்லை. காலத்தின் கட்டாயமும் கூட.

மீலாத் நபி காலப்பகுதியில் குறிப்பாகப் பிறை பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் நாட்களில் புத்தளம் நகரில் மீலாத் விழாப் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதித்தினம் பரிசளிப்பு வைபவத்துடன் சிறப்புப் பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவும் இடம்பெறும். கடந்த காலங்களில் உள்ளூர், வெளிநாட்டுப் பேச்சாளர்கள் பலர் புத்தளம் நகருக்கும் கல்பிட்டிக்கும் வருகை தந்துள்ளனர். 1930 களிலும் பின்னரும் புத்தளம் மீலாத் ஷரீப் சொசைட்டியாலும் தனிப்பட்டரீதியிலும் மீலாத் காலங்களில் கையேடுகளும் சிறப்பு மலர்களும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

புத்தளத்தில் மீலாத் விழாவின் ஆரம்பம்

புத்தளம் நகரில் மீலாத் விழா 1935 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே சிறிய அளவில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சபாநாயகர் அல்ஹாஜ் எச்.எஸ். இஸ்மாயில் அவர்களின் முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. மௌலாமக்காம் பள்ளியில் புத்தளத்தின் அன்றைய சோனகர் தலைவர் (Head Moor man) சி.அ.க. ஹமீது ஹுஸைன் மரைக்கார் அவர்களின் தலைமையில் மீலாத் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.  கையேடுகளும் விநியோகிக்கப்பட்டன. பள்ளிவாசல்களில் மெளலீது வைபவங்கள் நடைபெற்றன.

H.S. Ismail Speaker Puttalam

 

Moulamakam Mosque, Puttalam

 

Moulamakam Mosque, Puttalam.

காயல்பட்டண வர்த்தகர், அபூபக்கர் அவர்களின் சில ஆலோசனைகளையும் கருத்துக்கொண்டு 1935 இல் மீலாத், ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விழாவாக மாறியது. முதலாவது கூட்டம் ஹமீது ஹுஸைன் மரைக்காரின் இல்லத்தில் (Salama villa – Salama villa north, Salama villa south) நடைபெற்றது. புத்தளத்தில் மீலாத் விழாவை ஆரம்பித்ததன் காரணமாக நகரில் செல்வந்தர்களுக்கும் பிரமுகர்களுக்கும் இடையில் நீண்டகாலம் நிலவிவந்த வேற்றுமையைத் தீர்க்கக்கூடியதாக இருந்தது. மேலும் புத்தளம் பெரியபள்ளிவாசலைக் கட்டுவதற்கான வாய்ப்பாகவும் இது  அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது. புத்தளத்தில் செல்வந்தர்களும் பிரமுகர்களும் சேர்ந்தே அன்று மீலாத் விழாவை நடத்தினர்.

Salama Villa South

 

Hameethu Husain Maraikar Head Moorman Puttalam

 

Salih Maraikar (Son of Hameethu Husain Maraikar)

 

Salama Villa North

 

Ali Maraikar (Ali Inas’ Appa)

 

M.H.M. Naina Maraikar M.P.

மீலாத் ஷரீப் சொசைட்டியின் நீண்டகால செயலாளராக இருந்த P.M. மஹ்மூத் (பாயிஸா டிரேடிங்) அவர்கள் 1980 களில் ஒருமுறை பின்வருமாறு குறிப்பிட்டார். “அல்லாஹ்வின் கிருபையினாலும் றஸூலுல்லாஹ்வின் பரகத்தினாலும் மீலாத் ஷரீப் காரணமாக ஏற்பட்ட ஒற்றுமையாலேயே பெரியபள்ளி கட்டப்பட்டதென என் கல்புக்குப்படுகிறது” (கல்பு – உள்ளம்) 

P.M. Mahmood Faiza Trading Co.

1933 இல் தாபிக்கப்பட்ட ‘முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம்’ (  http://puttalamonline.com/2020-10-05/puttalam-uncategorized/143747/  ) புத்தளத்தில் மீலாத் விழா நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்துவதில் ஆரம்ப காலங்களில் பெரும்பங்காற்றியுள்ளது. P.M. மஹ்மூத், என். அப்பாஸ் மரைக்கார் போன்றோர் இதற்கு முன்னின்றுள்ளனர். எஸ்.ஏ. அசன்குத்தூஸ் (பெரியார்) , எம்.ஐ.எம். ஜெஹுபர் (அச்சகம்), எ. அசன்நெய்னா மரைக்கார், பி.அ. சுல்தான் முஹம்மது, ஏ.கே. அபூஹனீபா போன்ற முஸ்லிம் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் இதற்குப் பங்காற்றியோருள் குறிப்பிடத்தக்கோராவர்.

N. Abbas Maraikar

 

S. Asan Kudoos (பெரியார்)

 

M.I.M. Jawfer Press

 

Aboobakkar Asan Neina Maraikar

 

பி.அ. சுல்தான் முஹம்மது

 

A.K. Aboo Hanifa (Principal) http://puttalamonline.com/2020-09-21/puttalam-star-person/143481/

 

முஸ்லிம் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தவிர S.A.K. ஹமீது ஹுசைன் மரைக்கார் (சாலிஹ் மரைக்காரின் தந்தை), S.A.M. ஹனீபா மரைக்கார் (M.P.நைனா மரைக்காரின் தந்தை), S.A.S. அப்துல் காதர் (Chairman), M.N.H. ஹமீது ஹுசைன் மரைக்கார் (H.S. இஸ்மாயில் தந்தை), K.E.சேகு முகம்மது, E.S.A.M.பலுலூன் மரைக்கார் (சின்ன முதலாளி) போன்றோரும் இங்கு குறிப்பித்தக்கோராவர். நகரின் செல்வந்தர்களும் பிரமுகர்களும் இவ்வரிசையில் இடம்பெற்றுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

Hanifa Maraikar (Father of Naina Maraikar, M.P.)

 

Chairman Cader

 

M.N.H. Hameed Husain Maraikar (Father of H.S. Ismail)

 

Faluloon Maraikar (Sinna Muthalali)

 

 

மீலாத் மேடை

தற்போது பெரியபள்ளிக்கு சொந்தமான முஸ்லிம் கலாசாரக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள காணியில் அமைந்துள்ள மீலாத் மேடை, ஆரம்பத்தில் 1935 காலப்பகுதியில் கட்டப்பட்டதாகும். அதற்கு முன்னர் பாத்திமா கல்லூரி வளவில் மீலாத் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்துள்ளன. பழைய கொத்துவா பள்ளி அமைந்திருந்த நிலத்தில் 1935 இல் கட்டப்பட்டுள்ள மீலாத் மேடையிலேயே மீலாத் விழா போட்டி நிகழ்ச்சிகள், பரிசளிப்பு, சொற்பொழிவுகள் என்பன நடைபெறுவது மரபு. எனினும் மழைக்காலம், கலவரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்ட காலப்பகுதிகளில் பாத்திமா கல்லூரியில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர மஸ்ஜித் வீதி தண்ணீர்தாங்கி மைதானம், வெட்டுக்குளம் வீதி, ஹுதா பள்ளி மைதானம் போன்ற இடங்களிலும் மீலாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

 

 

புத்தளம் பிரதேச மாணவர்களின் எழுத்து,பேச்சு, பாடல், ஆக்கத்திறமைகளை வெளிக்கொணருவதில் மீலாத் மேடை பெரும் பங்காற்றியுள்ளமையை அனைவரும் ஏற்றுக்கொள்வர். இன்று நம்மத்தியில் வாழும், வாழ்ந்து மறைந்த பேச்சாளர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வளர்த்துவிட்ட பெருமை மீலாத் மேடைக்கு உண்டு. தம் பிள்ளைகள் மீலாத் மேடையில் ஏறவேண்டும் என்பதற்காகவும்  அவர்களின் நிகழ்ச்சிகளுக்கான ஆக்கங்களை  எழுதிப் பெற்று, பயிற்சியளிப்பதற்காகவும் பெற்றோர் எடுக்கும் சிரத்தை அலாதியானது. மீலாத் மேடையில் ஏறியதையும் அங்கு சோடிக்கப்பட்டிருந்த சோடனைத்தாள்கள் காற்றுக்கு அசைந்து எழுப்பிய ஒலியையும் நீங்கள் இலகுவில் மறந்திருக்கமாட்டீர்கள்.

புகைப்படங்கள் தகவல்கள் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

இன்னும் வரும் …

குறிப்பு: மீலாத் விழாவுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்கள், மெளலூது கிதாபுகள், அரபுத்தமிழ் புத்தகங்கள் இருப்பின் தயவுசெய்து அறியத்தரவும்

Zanhir +94 777 48 49 12 (zanhir@gmail.com)