மீலாத் பிரசுரங்கள்

புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன… (1935 – 2020)  –  03

இஸட். ஏ. ஸன்ஹிர்  (+94 777 48 49 12   zanhir@gmail.com)

(அல்ஹாஜ் A.N.M. ஷாஜஹான் அவர்கள் எழுதிய புத்தளம் வரலாறும் மரபுகளும், 21.12.1984 இல் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் மீலாத் விழா போட்டிகள் பொறுப்பேற்று நடத்தப்பட்டபோது வெளியிடப்பட்ட மீலாத் ஐம்பதாம் ஆண்டு நினைவு மலரில் பேராசிரியர் M.S.M. அனஸ் அவர்கள் எழுதிய ஆக்கம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு இத்தொடர் கட்டுரை எழுதப்படுகின்றது.)

1930 களில் மீலாத் விழாவை முன்னிட்டு சிறு பிரசுரங்கள் அக்காலங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில தமிழ் நாட்டில் எழுதப்பட்டவையாகும். புத்தளம் நகர செல்வந்தர்கள், பிரமுகர்கள், சங்கங்கள் மூலம் இவை விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு.

  1. திருவருள் தூது – 1933 (ஹிஜ்ரி 1352) பக்கங்கள் 30 +

எழுதியவர்: மெளலானா முஹம்மது ஹபீபுற்றஹ்மான் கான்சாஹிப் ஷெர்வானீ, சென்னை ஹிபாஜத்துல் இஸ்லாம் சங்கத்தால் மொழிபெயர்த்து அச்சிடப்பட்டது. புத்தளம் மு.நா.க. ஹமீது குசைன் மரைக்காயர் (Head Moor Man) அவர்களால் விநியோகிக்கப்பட்டது. ஏகத்துவத்தின் தூது, சமாதானத் தூது, கல்வி சம்பந்தமான தூது, சமத்துவம் சகோதரத்துவத்தின் தூது, பாத்தியதைகளை அடைவதன் சம்பந்தமாயுள்ள தூது, நியதியின் தூது, தக்வாவின் தூது, பரிசுத்தத்தின் தூது போன்ற தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ளன.

 

  1. நன்னபிகள் கோமான் – எஸ். புருஹானுதீன் 1933

 

  1. நபிகள் நாயக சங்கீர்த்தனம் – 1935, 13 பக்கங்கள் விலை சதம் 25

(புத்தளம் ஜனாப் யூசுப் ஆலிம்சாகிப் அவர்கள் குமாரர் முஹம்மது அப்துஸ்ஸலாம் ஹாஜியார் அவர்களால் அனுராதபுரம் அன்வர் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்றது) விலை சதம் 25, (முதலாம் பாகம் வெளியாகிவிட்டது. இரண்டாம் பாகம் சுருக்கில் வெளிவரும்)

இதில் பதங்களும் விருத்தங்களும் வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன.

 

4. இஸ்லாமிய இறுதி நபியின் இணையில்லா வெற்றி, பரிசு பெற்ற கட்டுரை – 11.05.1936, விளம்பரங்கள் உட்பட 30 பக்கங்கள், கட்டுரை 11 பக்கங்கள் 

(கலகெதர மாணவர் N.M.A. றவூப் அவர்கள் எழுதியது. (இவர் ரவூப் ஹஸீர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தந்தை ஆவார்) கொழும்பு புதுக்கடை பெரி ஸ்டிரீட், அலிய்யா மாணவ பிரசுர சபையாரால் வெளியிடப்பட்டது, புத்தளம் ஜனாப் M.H.M. ஹமீத் ஹுசைன் அன் கம்பெனி அவர்களால் விநியோகிக்கப்பட்டது. 

 

  1. சற்குணநபி – மெளலவி அஹ்மத் சயீத் சாஹிப் (ஆசிரியர் – ஸைபுல் இஸ்லாம்) – 1936

 

  1. ஜனநாயக ஆட்சி ஸ்தாபகர் மெளலவி அஹ்மத் சயீத் சாஹிப் – 1937

 

  1. உலக நபி – 1938 6 பக்கம்

ஜனாப் ஏ.ஏ.எம். முகம்மது ஸித்தீக் அவர்களாளியற்றப்பட்டது. மகா கனம் காதி ஹெட் மொர்மன் சி.அ.க. ஹமீது ஹுஸைன் மரைக்காயர் அவர்களின் முயற்சியால் அச்சிட்டு, புத்தளம் மவுலாமகாம் பள்ளியில் றபீஉல் அவ்வல் 1357ல் நடைபெற்ற மீலாதுர் றஸூல் (ஸல்) ஜனன விழாவின்போது விநியோகிக்கப்பெற்றது.

Moulamakam Mosque, Puttalam

 

 

  1. திரு நபி சரிதையின் நறுமலர் உரைகள் – 10.05.1938 பக்கங்கள் 28 +

முகவுரை நூலின் முகவுரை முஸ்லிம் அபிவிருத்திச் சங்க போஷகர் சேகு அலி அசன் குத்தூஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. ‘திரு நபி அவர்களின் அவதார மகிமை’ என்ற கட்டுரையை புத்தளம் மாணவர், ஜனாப் A.K. அபூஹனிபா எழுதியுள்ளார். ‘அருமறை அகுமது நபி’ என்ற கட்டுரையை கனம் மு. அசன் நெயினாப்பிள்ளை எழுதியுள்ளார். புத்தளம்,கரைத்தீவுப் புலவர் வரகவி செய்கு அலாவுதீனின் பாடல் ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A.K. Aboohanifa

 

Asan Neina Pillai

 

 

 

  1. திருநபி (ஸல்) அவதார திவ்விய சரிதை – 03.05.1939 விளம்பரங்கள் உட்பட 20 பக்கங்கள், கட்டுரை 16 பக்கங்கள்

பிரசுரித்து வெளியிட்டு விநியோகம், புத்தளம் முஸ்லிம் அபிவிருத்தி சங்கம். மெய்கண்டான் பிறெஸ், 68, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு.

முகவுரை பிரதம சபைத் தலைவர் எம்.எம்.எச். ஹமீது ஹுசைன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. முன்னுரையை ஏ.எஸ்.எம். இஸ்மாயில் மரைக்கார் எழுதியுள்ளார். சம பரிசு பெற்ற இரு வியாசங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தளம் ஜனாப் எம்.ஜே. சுலைமான், புத்தளம் ஜனாப் ஏ.எஸ்.எம். இஸ்மாயில் மரைக்கார் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் சலாபம் புளிச்சாக்குளம், அருட்கவி, ஆசிரியர் ஜனாப் எம்.எம். லெப்பை அவர்களின் கவிதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

 

  1. தாரணியின் பூரண ரட்சகர் – 1939 (ஹிஜ்ரி 1358) , 10 பக்கங்கள்

(சலாபம்) புளிச்சாக்குளம், அருட்கவி, ஆசிரியர் ஜனாப் எம்.எம். லெப்பை அவர்களின் கட்டுரை கவிதை என்பன இதில் இடம்பெற்றுள்ளன.

விநியோக வள்ளல்கள்: ஜனாப்கள் கு.ந. அப்துல் மஜீது & பிரதர். (சிலோன், உடப்பு) பிரபல வர்த்தகர்கள். கோபாலபட்டணம், இந்தியா.   மெய்கண்டான் பிறெஸ், 68, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு.

கல்பிட்டி நா.அப்துல் அஜீஸ் அவர்கள் மெளலவி அஹ்மத் ஸயீத் சாஹிபுடைய இரண்டு நூல்களை விநியோகித்துள்ளார். சிறு பிரசுரங்கள் சில புத்தளம் மீலாத் ஷரீப் சொசைட்டி மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

M.M. Lebbai Teacher Pulichakulam

 

 

மீலாத் விழா ‘எழுச்சி மலர்’ – 1949

மீலாத் விழாவை முன்னிட்டு 1949 இல் எழுச்சி மலர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது,  புத்தளம் முஸ்லிம் அபிவிருத்தி சங்க ஆயுட்கால செயலாளர் என்.அப்பாஸ் மரைக்கார் அவர்களின் முயற்சியாலும் பொருளுதவியாலும் அச்சிட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. எனினும் அதன் கையழுத்து மூலப்பிரதியில் முகவுரையில் அப்பாஸ் மரைக்கார் பின்வருமாறு எழுதியுள்ளார்.

N. Abbas Maraikar

“…………………….. உயர் ஞான குருவாம் சத்திய வேத நபி முஹம்மது முஸ்தபா ரசூல் (ஸல்) அவர்களின் ஜனனதினம் …… ஆதலின் இத்தினத்தை முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வருவரும் சிறப்பாகக் கொண்டாடும் கடமை வாய்ந்தவர்களாக இருக்கிறோம். இப்புனித தினத்தில் அவர்களின் குணாதிசங்களையும் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய நல்லுபதேசங்களையும் கிரியாம்சங்களில் செய்துகாட்டிய நடை உடை பாவனை நற்செயல்களையும் நம்மால் இயன்ற அளவில் வாசித்தும் கேட்டும் உணரக்கூடிய வழிகளைச் செய்வித்த முஸ்லிம்களாகிய நாமனைவரும் கடமைப்பட்டுள்ளோம்”.

A.M.M. Hanifa

 

Abdul ofoor Noori

இந்த மீலாத் எழுச்சி மலரில் புத்தளத்தை சேர்ந்த ஏ.எம். ஹனிபா “உலகோரை உய்விக்க வந்த உத்தமர்” என்ற தலைப்பிலும் என்.டி. அப்துல் கபூர் (நூரி) “மீலாது ஷரீபும் இஸ்லாமும்” என்ற தலைப்பிலும் எம்.ஜே.எம். சம்சுதீன் “தற்காலக்  கல்வியும் மார்க்கமும்” என்ற தலைப்பிலும் ஆக்கங்களை எழுதியுள்ளனர்.

1984 இல் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் சமூகத்தில் சிலரின் ஒத்துழைப்புடன் மீலாத் விழாவைப் பொறுப்பேற்று நடத்தியது. அதன்போது மீலாத் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

 

இன்னும் வரும் …

குறிப்பு: மீலாத் விழாவுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்கள், மெளலூது கிதாபுகள், அரபுத்தமிழ் புத்தகங்கள் இருப்பின் தயவுசெய்து அறியத்தரவும்

Zanhir +94 777 48 49 12 (zanhir@gmail.com)