மீலாத் விழாப் போட்டிகள்

புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன… (1935 – 2020)  –  03

இஸட். ஏ. ஸன்ஹிர்  (+94 777 48 49 12   zanhir@gmail.com)

(அல்ஹாஜ் A.N.M. ஷாஜஹான் அவர்கள் எழுதிய புத்தளம் வரலாறும் மரபுகளும், 21.12.1984 இல் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் மீலாத் விழா போட்டிகள் பொறுப்பேற்று நடத்தப்பட்டபோது வெளியிடப்பட்ட மீலாத் ஐம்பதாம் ஆண்டு நினைவு மலரில் பேராசிரியர் M.S.M. அனஸ் அவர்கள் எழுதிய ஆக்கம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு இத்தொடர் கட்டுரை எழுதப்படுகின்றது.)

1935 முதல் புத்தளத்தில் மீலாத் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.ஆரம்பத்தில் கிராஅத், கட்டுரை, இஸ்லாமியகீதம், பேச்சு போன்றவை இடம்பெற்றன. காலப்போக்கில் ஹதீஸ் மனனம், உரையாடல், அறபு எழுத்தணி, இஸ்லாமியக் கதை, கவிதை, விவாதம், அறிவுக்களஞ்சியம், சிறுகதை, அதான் கூறல் போன்றனவும் அறிமுகமாகின. போட்டிகளுக்கு பாடசாலை மட்டத்திலும் தனிப்பட்ட ரீதியிலும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மும்மொழிகளிலும் போட்டிகள் இடம்பெற்றன. அத்துடன் வயதுப்பிரிவுகளும் வயதுக்கட்டுப்பாடற்ற நிகழ்ச்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மூன்று நாட்கள் போட்டிகள் இடம்பெறும். இறுதி நாள் பரிசளிப்பும் விஷேட சொற்பொழிவும் நடைபெறும்.

1939 இல் புத்தளம் முஸ்லிம் அபிவிருத்தி சங்கத்தால் நடத்தப்பட்ட வியாசப் போட்டியில் ஏ.எம்.எஸ். இஸ்மாயில் மரைக்கார், எம். ஜே. முஹம்மது சுலைமான், ஏ.கே. அபூஹனீபா, ஏ.எம்.ஐ. ஷஹீத், யூ.மு. முஹம்மது ஹனிபா, மு.அ. செயினுல் ஆப்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர். எச்.எஸ். இஸ்மாயில், (Proctor S.C. & N.P. Chairman U.D.C.), என்.எஸ். சேகுமீரான் லெவ்வை ஆலிம், சே. செய்தக்காதிப்பிள்ளை (ஆயுர்வேத வைத்தியர்) ஆகியோர் போட்டி வியாசப் பரிசீலனைக் கர்த்தாக்களாக (நடுவர்) செயலாற்றியுள்ளனர். சம பரிசுபெற்ற முன்னைய இருவரினதும் கட்டுரைகள் அடங்கிய வெளியீடு ஒன்றும் அப்போது சங்கத்தால் விநியோகிப்பட்டது.

H.S. Ismail

 

Sehu Meeran Aalim Saahib

 

 

காலப்போக்கில் கல்பிட்டி உட்பட புத்தளம் நகரை சூழவுள்ள கிராமப் பாடசாலைகளும் போட்டிகளில் கலந்துகொள்ளத்தொடங்கின. மாணவர்களுக்கு மட்டுமன்றி நகர, கிராமப்புற மாணவரல்லாதோரும் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் வெளிக்காட்டவும் சிறந்த களமாக மீலாத் மேடை அமைந்தது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானோர் போட்டிகளில் பங்குபற்றினர்.    

ஆரம்ப காலங்களில் புத்தளம் பெரியபள்ளி வாசலின் (முஹியித்தீன் கொத்பா பள்ளி) தலைமையில் அமைக்கப்பட்ட மீலாத் ஷரீப் சொசைட்டி மூலமே மீலாத் விழாக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. எனினும் பள்ளி நிருவாகம் அசிரத்தையாக இருந்த காலப்பகுதிகளில் வேறு தனிப்பட்ட அமைப்புக்கள் இதனைப் பொறுப்பேற்று நடத்தியுள்ளன. இதனால் மீலாத் விழா புத்தளத்தில் இடைவிடாமல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் பள்ளிவாசல்களில் அறிவிப்புக்கள் செய்வதன் மூலம், புத்தளம் பெரிய பள்ளிவாசலில் கூடும் கூட்டத்திலேயே விழா நடத்தும் குழுவினர் தெரிவுசெய்யப்படுவர்.

1970 க்குப் பின்னர் கட்டுரை, பேச்சு, விவாத்தத் தலைப்புக்கள் சமூகப் பிரச்சினைகள், கல்வி போன்றன சார்ந்ததாக அமைந்தன. வெற்றியாளர்களுக்கு தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. 1984 இல் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் மீலாத் போட்டி நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்தியது. சங்க உறுப்பினர்களுடன் மற்றும் பலரும் விழாக்குழுவில் அங்கம் வகித்தனர். பட்டதாரிகள் சங்கம் போட்டிகளைப் பொறுப்பேற்று நடத்தியபோது பல புதிய போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சில போட்டிகளுக்கு புள்ளி வழங்கும் நியதிகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. நாட்டார் பாடல்கள், பிரதேசப் பழமொழிகள் சேகரித்தல் போன்றன அறிமுகப்படுத்தப்பட்டன. இஸ்லாமியக் கீதம் நிகழ்ச்சியானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையிலும் சுய இசையமைப்பைக் கொண்டதாக அமையும் வகையிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, புள்ளித்திட்டமும் அமைக்கப்பட்டது. மேலும் இசைத்தட்டுப் பாடல்கள் அப்போது அனுமதிக்கப்படவில்லை.

கட்டுரைப் போட்டித் தலைப்புக்கள், ‘இலங்கை முஸ்லிம் கல்வி வரலாறு’, ‘புத்தளம் பெரியார்கள்’ என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டன. கல்வி வரலாற்றில் சித்தி லெப்பை, ஏ. எம். ஏ. அஸீஸ், டீ. பி. ஜாயா, ஒறாபி பாஷா, சேர் செய்யத் அஹ்மத்கான் ஆகியோரின் பங்களிப்புக்கள் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டன.

எச். எஸ். இஸ்மாயில் (முதலாவது முஸ்லிம் சபாநாயகர்), செய்கு அலாவுதீன் புலவர் (கரைத்தீவு), முதல் முஸ்லிம் உயர் நீதிமன்ற நீதியரசர் அக்பர் (கல்பிட்டி), ஆசாரக்கோவை அப்துல் மஜீத் புலவர் (இவர் வள்ளல் சீதக்காதியின் வழித்தோன்றல் என்று சொல்லப்படுகின்றது, மஜீது மஞ்சரி என்பதும் இவரின் ஆக்கங்களில் ஒன்றாகும். புத்தளம் திகழியில் வாழ்ந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டவர்) ஆகியோர் பற்றி கட்டுரைத் தலைப்புக்கள் கொடுக்கப்பட்டன.

நீதியரசர் அக்பர் – கல்பிட்டி

சிறுகதைப் போட்டியும் புத்தளம் மண் வாசனையுடனான கதைகள் எழுதும் வகையில் நடத்தப்பட்டது. வழமையாக போட்டி நிகழ்ச்சிகளை மதிப்பிட மூன்று நடுவர்கள் இருப்பர். அதற்கும் மேலதிகமாக ஜுரி முறையும் 1984 நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இக்காலப்பகுதியில் வெளியூர் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பிராந்திய ரீதியில் போட்டிகள் நடத்தப்பட்டதுடன் புத்தளம் நகர பிரதான விழாவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உணவும் தங்குமிட வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. புத்தளத்தில் நடைபெற்ற போட்டியில் பாடசாலை ரீதியில் கடையாமோட்டை முஸ்லிம் வித்தியாலயம் முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

1984 இல் கடையாமோட்டையிலும் மீலாத் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்பிரதேச போட்டியாளர்கள் இதை கலந்துகொண்டனர். கடையாமோட்டை ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் இடம்பெற்ற போட்டிகள் புத்தளம் விழாவுக்கான தேர்வுப் போட்டியாக இருந்தபோதும் அது ஒரு முழு அளவிலான மீலாத் எழுச்சி விழாவாக அங்கு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இப்போட்டியை கடையாமோட்டை பள்ளி நிருவாகிகள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து நடத்தினர். 1984 இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். போட்டிகள் காலை முதல் மாலை ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் வரை நடந்தேறின. வெற்றிபெற்றோருக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

1984 இல் மீலாத் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. புத்தளம் மீலாத் ஷரீப் வரலாறு, பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் எழுதிய பள்ளிகளும் அதன் பணிகளும் போன்ற கட்டுரைகளுடன் வேறு சில கட்டுரைகளும் அதில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேசப் பழமொழிகள் சேகரிப்பு போட்டியின் மூலம் பெறப்பட்ட பழமொழிகளின் தொகுப்பும் கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்களின் நீண்ட முன்னுரையுடன் பதிவிடப்பட்டது.

திருக்குர்ஆன் 1400 வது ஆண்டு நிறைவு விழா 1968 இல் புத்தளத்தில் கொண்டாடப்பட்டபோது அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை துப்பரவு செய்து வர்ணம் பூசுவதற்கான நடவடிக்கையும் மீலாத் விழாவை முன்னிட்டு சங்கம் மேற்கொண்டது. அதற்கான பொறுப்புக்கள் அல்ஹாஜ் எச். எச். எம். அமானுல்லாஹ் (பெரியபள்ளி நம்பிக்கையாளர் சபைத் தலைவர்), ஏ.ஆர். எம். ராசிக் போன்றோரின் பொறுப்பில் அமைக்கப்பட்ட விஷேட குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் அதனை மிக சிறப்பாக செய்து முடித்தனர்.

இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் (YMGA) நடத்திய மீலாத் விழாவின்போது ஆரம்பகால மீலாத் ஷரீப் கமிட்டி அங்கத்தவரான P.M. மஹ்மூத் (Faiza Trading Co.) அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். அத்துடன் மற்றுமொரு ஆரம்பகால அங்கத்தவராக M.H.M. நெய்னா மரைக்கார் M.P. அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

1984 மீலாத் மேடை – பின்னால் இருப்பவர்
தொடர்ச்சியாக எட்டு வருடங்கள் தலைவராக இருந்த
M.H.M. நைனாமரைக்கார் M.P.

 

1984 மீலாத் மேடை – மீலாத் ஷரீப் சொசைட்டியின் நீண்டகால செயலாளராக இருந்த P.M. மஹ்மூத் (பாயிஸா டிரேடிங்) அவர்கள்

மீலாத் போட்டிகளின் முக்கிய எல்லா நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய அனைவருக்கும் வெள்ளிக் கிண்ணங்கள் பரிசளிக்கப்பட்டன. அத்துடன் வெற்றிபெற்ற பாடசாலைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த கேடயங்கள் கூடுதல் முறை பெற்ற பாடசாலைகளுக்கு சொந்தமாக்கப்பட்டு, புதிய கேடயங்கள் வழங்கப்பட்டன. இதன் போது கடையாமோட்டை முஸ்லிம் வித்தியாலயம் முதலாம் இடத்தைத் தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. பரிசளிப்பின் போது இலவசமாகக் கிடைக்கப்பெற்ற புதிய குர்ஆன் பிரதிகள் கிராமப் புறங்களை சென்றடைவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.

1989 ஆம் ஆண்டு புத்தளம் மீலாத் ஷரீப் சோசைட்டியினால் நடத்தப்பட்ட மீலாத் விழா போட்டிகளில் அகில இலங்கை ரீதியிலான போட்டிகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வமயம் போட்டிக்குழு தலைவராக A.K. ஜெகுபர் அவர்களும் கெளரவ செயலாளராக M.L. ஹாஜாசஹாப்தீன் அவர்களும் இருந்தனர். புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபராக M.R.P. மொல்லிகொட கடமையாற்றிய காலம் அது. 

1993 ஆம் ஆண்டு புத்தளம் அஹதியா சன்மார்க்க போதனா பீடம் மீலாத் விழாவைப் பொறுப்பேற்று சில வருடங்கள் நடத்தியது. A.M.M. ஹனீபா (அதிபர்), மஹ்பூப் மரைக்கார், M.H.M. சலீம் மரைக்கார் (ஆசிரியர்), M.U.M. சனூன், ஹிஷாம் ஹுசைன், போன்றோர் இதில் பிரதான பங்கேற்றனர். அஹதியாவின் முதலாவது மீலாத் நிகழ்ச்சிகள் தற்போதைய இப்னு பதூதா மஹால் (I.B.M.) மண்டபத்துக்கு முன்னாலிருந்த திடலில் நடத்தப்பட்டது. அவ்வமயம் தற்போதைய பள்ளிவாசல், கங்காணிக்குளம் வீதியின் (K.K. வீதி) மறுபுறம் அமைந்திருந்தது. அடுத்துவந்த காலப்பகுதிகளில் மீலாத் மேடையில் (மஸ்ஜித் வீதி) நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

1993 – 96 காலப்பகுதியில் பருவ வயதையடைந்த பெண்பிள்ளைகளுக்காக பேச்சு, விவாதம், அறிவுக்களஞ்சியம், ஓரங்க நாடகம், ஊடுருவல் உட்பட சகல  நிகழ்ச்சிகளும் புத்தளம் ஸாஹிறா கல்லூரி காதர் மண்டபத்தில்  தனியாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அஹதியா சன்மார்க்க வகுப்பு ஆசிரியைகள் முன்னின்று இப்போட்டி நிகழ்ச்சிகளை நடத்தினர்.

 


2008 இல் புத்தளம் மாவட்ட முஸ்லீம் லீக் வாலிப முன்னணியினால் மீலாத் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் J.Z.A. நமாஸ், M.H.M.சலீம் மரைக்கார், S.I. ஹமீட் மரைக்கார்(சமூர்த்தி அதிகாரி), A.W.M. சகீன்(மக்கள் வங்கி), M.S. அபூசாலிப் (P.H.I.), சீமான் நியாஸ் (தில்லையடி),  K. அஸ்மி (கமர்தீன் ஆசிரியர் மகன்), M.T.M. நசீர் (மக்கள் வங்கி) M.S.M. நாளிர் (CTB) போன்றோர் இதனை முன்னின்று நடத்தினர். இக்காலப்பகுதியில் ஞாபகார்த்த பேக் ஒன்றும் விநியோகிக்கப்பட்டது.

அஹதியா சன்மார்க்க போதனா பீடம், புத்தளம் மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனம் போன்றவை மீலாத் விழாவை நடத்திய காலப்பகுதிகளில் ஓரங்க நாடகம், பக்கீர் பைத்து, சமயோசித பேச்சு, குறுக்கெழுத்துப்போட்டி, அறிவுப் பூங்கா, சமூகச் சித்திரம் – ஊடுருவல், போன்ற நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஓரங்க நாடகம் A.M.M. ஹனீபா ஆசிரியரினால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலாவது நிகழ்ச்சியில் அந்தகக் கலைஞர் சலீம்கான் பங்கேற்று அனைவரினதும் அபிமானத்திப் பெற்றார். ‘சமூகச் சித்திரம் – ஊடுருவல்’ என்ற நிகழ்ச்சி நமாஸ் ஆசிரியரால் மீலாத் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கலாபூஷணம் ஓவியர் S.S.M. ரபீக் ஆசிரியர் குறுக்கெழுத்துப் போட்டியை தயாரித்து நடத்தினார். அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியைத் நீண்டகாலமாக கலாபூஷணம் A.N.M.  ஷாஜஹான் அவர்கள் தொடர்ச்சியாகத் தயாரித்து நடத்தினார்கள்.

 

Al Haj A.N.M. Shajahan, ( M.S.M. நாளிர், பரிசு பெறுபவர் Raslan)

 

Bishrul Hafi (Chairman)

 

H.M. Kamardeen (Teacher)

 

அப்பாஸ் விதானை

 

புகைப்படங்கள், ஆவணங்கள், தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்

இன்னும் வரும் …

குறிப்பு: மீலாத் விழாவுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்கள், மெளலூது கிதாபுகள், அரபுத்தமிழ் புத்தகங்கள் இருப்பின் தயவுசெய்து அறியத்தரவும்

Zanhir +94 777 48 49 12 (zanhir@gmail.com)