பேச்சாளர்கள்

புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன… (1935 – 2020)  –  03

இஸட். ஏ. ஸன்ஹிர்  (+94 777 48 49 12   zanhir@gmail.com)

(அல்ஹாஜ் A.N.M. ஷாஜஹான் அவர்கள் எழுதிய புத்தளம் வரலாறும் மரபுகளும், 21.12.1984 இல் புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் மீலாத் விழா போட்டிகள் பொறுப்பேற்று நடத்தப்பட்டபோது வெளியிடப்பட்ட மீலாத் ஐம்பதாம் ஆண்டு நினைவு மலரில் பேராசிரியர் M.S.M. அனஸ் அவர்கள் எழுதிய ஆக்கம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு இத்தொடர் கட்டுரை எழுதப்படுகின்றது.)

புத்தளம் நகத்தில் மீலாத் விழா ஆரம்பித்து சுமார் 85 வருடங்களாகின்றன. ஆரம்ப காலங்களிலுருந்தே புத்தளம் மீலாத் மேடைக்கு உள்நாட்டு வெளிநாட்டு விஷேட பேச்சாளர்கள் பலர் வருகைதந்துள்ளனர். மூன்று நாட்கள் இடம்பெறும் விழாவில் முதல் இருநாட்களிலும் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும். மூன்றாம் நாளில் வெற்றிபெற்றோர் நிகழ்ச்சி, பரிசளிப்பு, என்பனவற்றுடன் விஷேட சொற்பொழிவும் இடம்பெறும்.

விழாவுக்கென மீலாத் மேடை அமைந்துள்ள, கொத்தான் முள் நிறைந்த  மைதானம் (கொத்துவா  பள்ளி மைதானம் – கொத்துவா=கொத்பா ), பெரிய பள்ளிவாசலினால் துப்பரவு செய்து, தயார்படுத்தப்படும். மூன்று நாட்களும் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சிகள் ஒலிக்கும். சனநெருக்கம் குறைந்த அக்காலங்களில் நகரின் எப்பகுதியில் இருந்தும் ஒலிபெருக்கி மூலமான நிகழ்ச்சிகளைக் கேட்கக்கக்கூடியதாக இருக்கும். அது ஒரு தனி உணர்வை ஏற்படுத்தக்கூடியது. தொழுகை வேளை தவிர்த்து, காலை ஒன்பது மணி முத ல் இரவு பத்து மணி வரை  நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதி நாள் சொற்பொழிவுகள் நள்ளிரவு வரை தொடர்ந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இறுதி நாள் இடம்பெறும் விஷேட சொற்பொழிவைக் கேட்க ஊரே திரளும். பெண்கள் அயல் வீடுகளிலும் ஒதுக்குப் புறங்களிலும் நின்று சொற்பொழிவைக் கேட்பர். சிறுவர்கள் தமக்கு முன்னால் அமர்ந்திருப்போருக்கு கொத்தான் முற்களினால் குத்தி, விளையாட்டுக்களில் ஈடுபடுவர்.

அறிஞர்களையும் உலமாக்களையும் கொண்ட பிரச்சாரக் கூட்டமே மீலாதின் உச்சக்கட்டமாகும். 1960 களுக்கு முன்னரே உள்நாட்டு வெளிநாட்டு விஷேட பேச்சாளர்கள் பலர் புத்தளம் மீலாத் விழாவுக்கு சிறப்புப் பேச்சாளர்களாக சமுகமளித்துள்ளனர். ரவூப் பாஷா, தமிழ் நாட்டை சேர்ந்த, இலங்கை வானொலி புகழ் மணிமொழி மௌலானா கலீலுர் ரகுமான் (சம்மான்கோட்டை பள்ளிவாசல் பேஷ் இமாம்), தமிழ்நாடு மெளலவி P.K.S. அப்துல் காதர் (காமா ஹஸரத், 07.01.1992 இல் தமிழ்நாடு திருப்புத்தூரில் காலமானார்) போன்றோர் இவர்களுள் பிரதானமானோராவர்.

Manimoli Mawlana M.J. Kaleelur Rahman

புத்தளம் மீலாத் ஷரீப் சொசைட்டியில் தொடர்ச்சியாக எட்டு வருடங்கள் தலைவராக இருந்த அல்ஹாஜ் எம்.எச்.எம். நெய்னாமரைக்கார் M.P. அவர்களின் காலப்பகுதியில் பலவெளிநாட்டுத் தூதுவர்கள் மீலாத் மேடைக்கு வருகைதந்துள்ளனர். பாகிஸ்தான், இந்தோனேஷியா, எகிப்து, இந்தியா போன்ற நாட்டுத் தூதுவர்கள் இதில் அடங்குவர்.

Al Haj M.H.M. Naina Maraikar, M.P.

1960 முதல் 1980 கள் வரை புத்தளம் மீலாத் விழாவில் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டோரில்,  ஜாமிஆ நளீமியா உருவாக்கத்துக்குப் பங்களித்தோருள் ஒருவரான மசூத் ஆலிம் சாஹிப், ஜாமிஆ நளீமியா தாபக அதிபர் மெளலவி யூ.எம். தாசீன்( நத்வி, அல் அஸ்ஹரி), ஜாமியா நளீமியா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி, முஸ்லிம் காங்கிரஸ் தாபகர் எம்.எச்.எம். அஷ்ரப், தினகரன் கியாஸ், அன்பு முகையதீன், ஈழமேகம் பாக்கீர்த்தம்பி, மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழ் துறைப் பேராசிரியர் எம்.எம். உவைஸ் (பாணந்துறை) போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர்.

Mashood Aalim Sahib

Moulavi U.M. Thasin

 

Dr. M.A.M. Shukri

 

M.H.M. Ashraf

 

Thinakaran Kiyas

Elameham Pakkeer Thambi

Prof. M.M. Uwais

மேலும், சிங்களமொழிப் பேச்சாளர் அதிபர் ஷாஹுல் ஹமீத் (பாணந்துறை), கலாநிதி கே.எம்.எச். காலிதீன், எச்.எம்.பீ. மொஹிதீன், அப்துல் வதூத் மெளலவி (மாவனல்லை), மீரான் மெளலவி (ஹபுகஸ்தலாவை), மெளலவி எஸ்.எல்.எம். ஹசன் (அல் அஸ்ஹரி) (கிண்ணியா), கல்பிட்டி அல் அக்ஸா பழையமாணவர் ஸுபைர்தீன் (எதுங்கஹகொட்டுவ), அப்துர் ரஹ்மான் பஹ்ஜி (வெலிகம), மெளலவி இமாம் (திக்வல்ல), மெளலவி சுலைமான் லெப்பை (தல்கஸ்பிட்டி), S.L.M. றவுபூன் (சிலாபம்), M.S. சுபைர் (கிண்ணியா), கம்பளைதாசன்(கொழும்பு), ராவுத்தர் நெய்னார் முஹம்மது (அனுராதபுரம்) போன்றோரும்  1980, 90 களில் இங்கு வருகை தந்துள்ளனர்.

சஹாப்தீன் காக்காவை முக்கியஸ்தராகக்கொண்ட புறக்கோட்டை மீலாத் கொமிட்டி ஆரம்பகாலங்களில் ஒவ்வொரு வருடமும் தமிழ் நாட்டிலிருந்து பிரபல பேச்சாளர்கள் பேராசிரியர்கள் போன்றோரை மீலாத் விழாவுக்கு அழைத்துவந்தது. அவர்களில் பெரும்பாலானோர் புத்தளத்துக்கும் வருகை தந்துள்ளனர். பீரங்கிப் பேச்சாளர் எம்.எம். பீர்முஹம்மது (எம்.எல்.ஏ.), செய்யது முஹம்மது மிஸ்பாஹி, சொற்கொண்டல் கஸ்ஸாலி, திருப்பூர் மொஹிதீன் (எம்.எல்.ஏ.), மணிக்குரல் ஆசிரியர் மெளலானா எம்.எம். பீர்முஹம்மது, அப்துல்லாஹ் அடியார், பாக்கியாத் ஸாலிஹாத் விரிவுரையாளர் சபீர் அலி, ஷம்சுல் ஹுதா பாகவி, தமிழ் நாடு முஸ்லிம் லீக் தலைவரான காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் (எம்.எல்.ஏ.), திண்டுக்கல் அரபுக் கல்லூரி அதிபர் மெளலானா ஷேக் தாவூத் ஆலிம், காயல்பட்டணம் மவ்லவி ஐதுரூஸ் (பாகவி, முப்தி) போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கோராவர். இவர்கள் 1990 கள் வரை புத்தளம் மீலாத் மேடைக்கு சமூகமளித்தோராவர்.

மீலாத் விழாவை முன்னிட்டு புத்தளத்துக்கு வரும் விருந்தினர்களை புத்தளம் நகர பிரமுகர்கள் தமது வீட்டுக்கு வரவழைத்து உபசரிப்பது ஒரு மரபாக இருந்தது. அந்தவகையில் H.M. சாலிமரைக்கார், M.H.M. நெய்னாமரைக்கார், மஹ்மூத் ஹஸரத், ஷாபி ஹாஜியார், பெரியபள்ளி நம்பிக்கையாளர்களாக இருந்த அமானுல்லா ஹாஜியார், நபீல் ஹாஜியார் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவார்.

 

 

 

Shafi Hajiyar

Amanulla Hajiar

Nafeel Hajiyar

புத்தளம் பிரதேசத்தவர்களும்கூட 1960 களிலும் பின்னரும் புத்தளம் நகரிலும்  கரைத்தீவு, பள்ளிவாசல்துறை, நுரைச்சோலை, புழுதிவயல், கொத்தாந்தீவு, முதலைப்பாளி, புளிச்சாக்குளம், கடையாமோட்டை போன்ற கிராமங்களிலும் நடைபெற்ற மீலாத் விழாக்களில் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர். சேகுமீரான் ஆலிம் சாஹிப், பேராசிரியர் M.S.M. அனஸ், K.V.L. அப்துல் ஹமீது லெப்பை, அபூசாலிப் ஆலிம், அப்துல் ஹமீத் பஹ்ஜி (மதவாக்குளம்), அப்துல் சத்தார் பஹ்ஜி (கங்காணிக்குளம் பள்ளிவாசல் பேஷ் இமாம், மதவாக்குளம்), கலாபூஷணம் ஜவாத் மரைக்கார், நெய்னா முஹம்மது( நெய்னா புஹாரி, பெருக்குவாட்டான்), புஹாரி ஹஸரத் (ஜாமிஆ நளீமியா தாபக உப அதிபர்), மெளலவி அப்துல் முனாப் (அப்துல்லாஹ்), அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். இவர்களில் பெரும்பாலானோர் மஸ்ஜித் வீதி தண்ணீர்தாங்கி மைதானம், வெட்டுக்குளம் வீதி, ஹுதா பள்ளி மைதானம் போன்ற இடங்களில் நடைபெற்ற மீலாத் நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர்.

Sehu Meeran Aalim Saahib

 

Prof. M.S.M. Anas

 

K.V.L. Hasarath

 

Aboo salif aalim sahib

 

Jawad Maraikar

 

Buhari Maulavi (Jamiah Naleemiah)

 

Abdullah Mahmood Aalim

 

 

 

 

கல்பிட்டியில் மீலாத் விழா

இற்றைக்கு 62 ஆண்டுகளுக்கு முன்னர் 12.12.1952 வெள்ளியன்று கல்பிட்டியில் இடம்பெற்ற மீலாத் விழாவில் தமிழ்நாட்டையும் இலங்கையையும் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் பலர் கலந்துகொண்டமை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இவ்விழாவிற்கு அன்பர் பூபதிதாஸர் தலைமை வகித்தார்.  இதில் சிறப்புப் பேச்சாளராக இஸ்லாமிய தத்துவ வித்தகரும் ‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியருமான அல்ஹாஜ் பா. தாவூத்ஷா  கலந்துகொண்டார். பா. தாவூத்ஷா எழுத்தாளர்; சீர்திருத்தவாதி; சிறந்த சொற்பொழிவாளர்; கம்பராமாயண சொற்பொழிவு ஆற்றியதால் “இராமாயண சாயபு” என அழைக்கப்பட்டவர்; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றவர்). தாருல் இஸ்லாம் உதவி ஆசிரியர் அப்துல் ஜப்பார், தினபதி எஸ்.டி. சிவநாயகம், ஏ.எம். சம்சுதீன், மரியாம்பிள்ளை ஆசிரியர் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து சொற்பொழிவாற்றினர்.

அல்ஹாஜ் பா. தாவூத்ஷா

 

 

புகைப்படங்கள், ஆவணங்கள், தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள். ஜவாத் மரைக்கார், ரஹ்மத்துல்லாஹ் ஆசிரியர், அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோருக்கு விஷேட நன்றிகள்

இன்னும் வரும் …

குறிப்பு: மீலாத் விழாவுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்கள், மெளலூது கிதாபுகள், அரபுத்தமிழ் புத்தகங்கள் இருப்பின் தயவுசெய்து அறியத்தரவும்

Zanhir +94 777 48 49 12 (zanhir@gmail.com)