புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன – 06 (இறுதிப்பகுதி)
புத்தளம் மீலாத் விழாவுக்கு 85 வருடங்களாகின்றன… (1935 – 2020) – 06
இஸட். ஏ. ஸன்ஹிர் (+94 777 48 49 12 zanhir@gmail.com)
புத்தளத்தில் தேசிய மீலாத்
றஸூலுல்லாஹ்வின் பிறந்த தினத்தை நினைவுகூரும் ‘மீலாத் நபி’ நிகழ்வுகள் இலங்கையில் அரசின் வைபவங்களில் ஒன்றாக, ‘தேசிய மீலாத் விழாவாக’ நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 16.05.1981 இல் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு அல்ஹாஜ் எம்.எச். முஹம்மது அவர்களின் பொறுப்பின்கீழ் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அது வக்பு பிரிவு, சமய கலாசார பிரிவு என்பனவற்றைக்கொண்ட விரிவான செயற்பாட்டுடன் இயங்கத் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் இத்திணைக்களத்தினால் இலங்கையின் மாவட்ட தலைநகரங்களில் தேசிய மீலாத் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கண்டி காலி போன்ற இடங்களிலும் அதற்கு அடுத்து 1987 இல் குருநாகலிலும் தேசிய மீலாத் நடைபெற்றுள்ளது. இலங்கையில் தேசிய மீலாத் விழா மாவட்டரீதியில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. வேறு மாவட்டங்களில் விழா நடத்தமுடியாத சூழ்நிலைகளில் அது கொழும்பில் இடம்பெறும்.
02.01.1989 இல் ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றபின் முறையே 23.03.1989 இல் ஜாபிர் ஏ காதர் அவர்களும் 30.03.1991 இல் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அல்ஹாஜ் அஸ்வர் பதவியேற்ற பின்னர் தேசிய மீலாத் விழா மேலும் உயிர்ப்புடன் உத்வேகம் கொண்டது. 1990 இல் மாவனல்லை ஸாஹிறாவிலும் 1991 இல் புத்தளம் ஸாஹிறாவிலும் மீலாத் விழாக்கள் நடைபெற்றன. புத்தளத்தில் தேசிய மீலாத் இரு வருடங்கள் நடைபெற்றுள்ளன. கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோரை அவர்களின் காலத்திலேயே கெளரவிக்கும் வகையிலான ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ போன்ற நிகழ்ச்சிகளும் அமைச்சர் அஸ்வர் அவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டமையை முஸ்லிம் சமூகம் என்றும் மறவாது.

1991 புத்தளம் தேசிய மீலாத் விழா மலரில், ஜனாதிபதி ஆர். பிரேமதாசவி ன் கூற்றொன்று பின்வருமாறு பதிவிடப்பட்டுள்ளது. “இந்நாட்டில் வாழும் முஸ்லிம் பெருமக்கள் எங்கள் தேசிய இனத்துடன் பிரிக்கவொண்ணாதவாறு இணைந்துள்ளனர். அரசியலமைப்பின் கீழ் ஏனைய குடிமக்கள் துய்த்துவரும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் முஸ்லிம் மக்கள் துய்த்து வருகின்றனர். முஸ்லிம், சமய, பண்பாட்டு, அலுவல்களுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஒருவர் எம்மத்தியில் இருக்கின்றார். இது உலகில் எப்பாகத்திலேனும் முஸ்லிம் அல்லாத நாடொன்றில் காணப்படாத அதி விஷேட பண்பாகும்”
தேசிய மீலாத் விழாவையொட்டி ஆரம்ப காலத்தில் நினைவு மலர்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் அப்பிரதேச முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகள், படைப்பிலக்கியங்கள் போன்றன பதிவிடப்பட்டன. பின்னர், விழா கொண்டாடப்படும் மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு, கலை கலாசார, பண்பாட்டு அம்சங்கள், அவர்களின் மரபு, மரபுரிமை, இருப்பு என்பனவற்றை வெளிக்கொணரும் வகையில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. காலத்தின் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் அவை.
அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை , கண்டி, அம்பாறை, கம்பஹ, புத்தளம், யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை போன்ற மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு, மரபுரிமைகள் பற்றிய புத்தகங்கள் மீலாதை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளன. 1992 இல் களுத்துறையில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையின் போது களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் பற்றிய நூலொன்றும் அமைச்சினால் வெளியிடப்பட்டது. தேசிய மீலாத் இடம்பெறும் போது தேசிய மட்டத்தில் பல போட்டிகள் நடத்தப்படும். ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் நாடு முழுவதுமிருந்தும் கலந்துகொள்வர். வெற்றிபெறுவோருக்கு ஜனாதிபதியின் கரங்களினால் பரிசில்கள் வழங்கப்படும். ஜே. மீரா மொஹிதீன் அவர்கள் இருபத்தியேழு வருடங்களாக போட்டி நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்துள்ளார். மீலாத் காரணமாக அது நடைபெறும் பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். முஸ்லிம்களின் கலாசார பண்பாடுகளை சித்தரிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் மீலாத் மேடையில் நடத்தப்படும்.
புத்தளத்தில் தேசிய மீலாத் விழா 1991, 1999 ஆகிய இரு வருடங்கள் நடைபெற்றன. 13.10.1991 அன்று புத்தளம் ஸாஹிறா கல்லூரியில் தேசிய மீலாத் விழா நடைபெற்றபோது அப்போது நகரபிதாவாக இருந்த எம். ஐ. பிஷ்ருல் ஹாபியை தலைவராகவும் நகரசபையில் கடமையாற்றிய எம்.எஸ். அப்பாஸ் அவர்களை செயலாளராகவும் கொண்ட செயற்குழு ஒன்று அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. வரவேற்பு ஒழுங்குகள், பிரச்சாரம், நிதி, கண்காட்சி போன்றவற்றுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஸாஹிறா கல்லூரி மீலாத் விழா, புத்தளம் தொகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் கலந்துகொண்டார்கள். அவருடன் அமைச்சர்களான பெஸ்டஸ் பெரேரா, ஏ.ஆர். மன்சூர், ஹெரல்ட் ஹேரத், இம்தியாஸ் பாக்கிர்மாக்கார், முதலமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, நகர பிதா பிஷ்ருல் ஹாபி ஆகியோரும் வெளிநாட்டுத் தூதுவர்களும் அரச அதிகாரிகளும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அது யுத்தம் நடைபெற்ற காலப்பகுதி என்பதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியில் ஓர் அம்சமாக கொழும்பு, வெள்ளவத்தை, அகில இலங்கை ஜம்மிய்யதுல் குர்ஆன் இயக்க தலைவர், மெளலவி ஹாபிழ் எஸ்.எம். ஆரிப் பீ. ஏ. அவர்களின் புகழ்பெற்ற குர்ஆன் கண்காட்சியும் இடம்பெற்றது. கண்காட்சிக்கு கூடங்கள் அனைத்தும் படையினரால் நாயின் துணையுடன் சோதனையிடப்பட்டன. குர்ஆன் காட்சிக்கூடத்துக்குள் படையினர் பிரவேசித்தனர். நாய் மூலமான சோதனைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடமையை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு படையினருக்கு இருந்தது. இவ்வேளை ஜனாதிபதியும் மேடைக்கு வந்துவிட்டார். செயலாளர் அப்பாஸ் அவர்கள் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டுசெல்லவே அவரின் விஷேட பணிப்புரையின் பேரில் அது நிறுத்தப்பட்டது.
இம் மீலாத் விழாவின்போது இடம்பெற்ற, புத்தளம் முஸ்லிம்களின் வரலாறு, கலாசார பண்பாடுகள் என்பனவற்றை வெளிக்கொணரும் வகையிலான கண்காட்சி அனைவரினதும் பாராட்டைப் பெற்றது. புத்தளத்தில் முன்பு எடுக்கப்பட்ட பஞ்சா, நமது ஊர் பரியாரிகள் பாவித்த Pressure meter உட்பட பல அரிய பொருட்களும் கலைப் பொக்கிஷங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மூன்று நாட்கள் இடம்பெறவிருந்த கண்காட்சி அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க இன்னுமொருநாள் நீடிக்கப்பட்டது. கண்காட்சிக் குழுவின் செயலாளர், ஆசிரியர் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் அவர்கள் இவ்வமயம் நினைவுகூரத்தக்கவராவார்.
புத்தளம் தேசிய மீலாத் சிறப்புப் பேச்சாளராக வேலூர், பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி பேராசிரியர் மெளலானா மெளலவி ஷபீர் அலி கலந்து உரையாற்றினார். இவர் அரபு, பார்ஸீ, ஆங்கிலம், உருது, மலையாளம், எனப் பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர் என்பதுடன் விரிவுரை, விவாதம் சொற்பொழிவு போன்றவற்றுக்காக மலேசியா, புரூணை, சிங்கப்பூர், ஈராக், சவூதிஅரேபியா மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள் என பல நாடுகளுக்கும் சென்றவராவார்.
மெளலானா மெளலவி ஷபீர் அலி உரையாற்றுகிறார்
1991 இல் இடம்பெற்ற மீலாத் விழாவை முன்னிட்டு பல அபிவிருத்தித் திட்டங்களும் புத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஸாஹிறா கல்லூரி அமைத்திருக்கும் மன்னார் வீதி விசாலமாக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் நடப்பட்டன. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அஸ்வர் எம் பி யின் பிரத்தியேக செயலாளர் S.M.T. நூமான் மரைக்காராவார். அத்துடன் ஸாஹிறா கல்லூரிக்கான தொலைபேசி இணைப்பும் (5473) அப்போது வழங்கப்பட்டது.
மொரோக்கோ நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற நாடுகாண் பயணி இபுனு பதூதாவின் புத்தளம் வருகையை நினைவுகூரும் வகையில் செப்பனிடப்பட்ட கடற்கரை வீதி ‘இபுனு பதூதா வீதி’ என்ற பெயரில் அப்போது ஜனாதிபதி பிரேமதாச அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பாதைக்கான பெயரை கலாபூஷணம் ஜவாத்மரைக்கார் அவர்களின் ஆலோசனையின் பேரில், கலாபூஷணம் அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜஹான் அவர்கள் முன்மொழிந்தார்கள்.
தேசிய மீலாத், இரண்டாவது முறையாக புத்தளத்தில் 23.08.1999 இல் பாத்திமா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதுவும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதி என்பதனால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இடம்பெற்றது. அப்போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தார். எம்.எச்.எம். நவவி அவர்கள் வடமேல் மாகாண சபையின் போக்குவரத்து, பெருந்தெருக்கள், சுற்றாடல் அமைச்சராக இருந்தார். அவரின் பூரண ஒத்துழைப்புடன் இது இடம்பெற்றது.
1991 மீலாத் போன்றே 1999 லும் கண்காட்சி இடம்பெற்றது. கலாபூஷணம் ரபீக் ஆசிரியரும் நானும் அதற்குப் பொறுப்பாக இருந்தோம். ஜனாதிபதி வருவதற்கு முதல் நாள் நள்ளிரவு இரண்டுமணி இருக்கும். வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. சென்று பார்த்தபோது ரபீக் ஆசிரியர் இராணுவத்தினருடன் வீட்டு வாசலில் நின்றார். உடனே பாத்திமா கல்லூரிக்கு அழைத்துவரச்சொன்னார்கள் என்றார். நாம் அங்கு சென்றோம். அப்போது பாடசாலையில் எம்மைத்தவிர வேறுஎவரும் இருக்கவில்லை.
கூரை உட்பட பாடசாலைக் கட்டிடங்கள், மைதானம் அனைத்தையும் இரு நாய்களின் துணையுடன் இராணுவம் அங்கு சல்லடை போட்டது. நாம் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். நள்ளிரவு தொடங்கிய இச்செயற்பாடு முடிவடைய காலை ஒன்பது மணிக்கும் மேலாகிவிட்டது . அதன் பின்னர் பாடசாலை வளவுக்குள் வருகை தந்த அனைவரும் சோதனையிடப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். மாலை நான்கு மணி இருக்கும். பாடசாலை பிரதான வாயிலில் ஜனாதிபதியை வரவேற்க எல்லோரும் மாலையுடன் காத்திருக்க அவர் ஏற்கனவே மேடைக்கு வந்துவிட்டதாக செய்தி வந்தது. பாதுகாப்பு கருதி கண்காட்சியையும் பிரமுகர்கள் பார்வையிடவில்லை. புத்தளம் மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு கொடுக்கப்படவிருந்த நினைவுச்சின்னமும் பாதுகாப்பு அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டது. அது இன்றும் எங்கள் வீட்டிலேயே இருக்கின்றது.
பாத்திமா கல்லூரியில் இடம்பெற்ற மீலாத் விழாவில் பிரதம அதிதி ஜனாதிபதி சந்திரிக்காவுடன் சிறப்பு அதிதிகளாக கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி, அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, ஸெய்யத் அலவி மெளலானா, வடமேல் மாகாண முதலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன, வடமேல் மாகாண போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் சுற்றாடல் அமைச்சர் எம்.எச்.எம். நவவி ஆகியோரும் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் இடம்பெற்ற விழாவில் முஸ்லிம் பாடசாலை மாணவர்களினதும் எனையோரினதும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. எம்.எச்.எம். ஷம்ஸ், மும்தாஸ் ஹபீல், ஜவாத் மரைக்கார் ஆகியோரின் பயிற்றுவிப்பிலும் மேற்பார்வையிலும் இடம்பெற்ற கலைவிழாவில் ‘வெண்புறா நடனம்’ அனைவரினதும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் எம்.எச்.எம். ஷம்ஸ் இயற்றிய பாடல்கள் அடங்கிய ‘மானுட கீதம்’ என்ற புத்தகமும் மீலாத் மேடையில் வெளியிடப்பட்டது. இது புத்தளம் ‘க்ளோப் லிங்க்’ நிறுவனத்தில் அச்சிடப்பட்டதாகும்.
1991 மீலாத் விழாவில் சிறப்பு நினைவு மலர் வெளியிடப்பட்டது. 1999 விழாவில் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் – வரலாறும் மரபுரிமையும் என்ற நூல் வெளியிடப்பட்டது. மேலும் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள மீலாத் மேடை மைதானத்தில் கட்டப்பட்டுள்ள கலாசார மண்டபமும் இவ்விழாவின் நிமித்தம் அமைக்கப்பட்டதேயாகும். அதற்குத் தேவையான தளபாடங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் பல பெறுமதிமிக்க புத்தகங்களும் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான கலாசார மண்டபம் என்ற ரீதியில் இசைக்கருவிகள் பலவும் வழங்கப்பட்டன. கலாசார அமைச்சின் ஆலோசகராக இருந்த எஸ்.எச்.எம். ஜெமீலின் மேற்பார்வையில் இவை அனைத்தும் நடைபெற்றன.
தேசிய மட்டத்தில் இடம்பெறும் மீலாத் விழாவையொட்டி, மாவட்ட ரீதியாக முஸ்லிம்களின் வரலாறு, மரபுகள், கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கதும் பாராட்டப்படவேண்டியதுமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் அமைச்சர் அஸ்வர் ஆவார். அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை , கண்டி, அம்பாறை, கம்பஹ, புத்தளம், யாழ்ப்பாணம் போன்ற மாவட்ட முஸ்லிம்கள் பற்றிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே 1992 இல் களுத்துறையில் இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையின் போது களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் பற்றய நூலொன்று வெளியாகியது.
‘ரங்கீலா ரசூல்’ என்ற, நபிகளை அவதூறு செய்து எழுதப்பட்ட நூலின் எதிரொலியாகத் தோற்றம் பெற்றதே மீலாத் விழாவாகும். தவிர இது ஒரு மார்க்க கடமையல்ல. புத்தளத்தில் மீலாதின் பெயரால் நடந்த நல்லவைகள் பல. அக்காலத்தில் இருந்த நம்பிக்கையின் அடிப்படையில் பக்திப் பரவசம் பெருக்கெடுத்திருக்கின்றது. அது செயலுருவம் பெற்றுள்ளது. நடத்தை மாற்றங்கள் தனிப்பட்ட வகையிலும் சமூக ரீதியாகவும் ஏற்பட்டுள்ளன. ஊரில் ஒற்றுமை, கட்டுப்பாடுகள் போன்றவற்றை மீலாத் வளர்த்திருக்கின்றது. குடும்ப, சமூக வேற்றுமைகளைக் களைய ஒரு கருவியாக அது அமைந்துள்ளது. ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கியுள்ளது. கலையார்வத்தையும் ஆக்கத் திறன்களையும் வளர்த்துக்கொள்ளவும் தாம் அறிந்திராத தமது திறன்களை உணர்ந்து அவற்றை வெளிக்கொணரவும் வளர்க்கவும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பிரயோசனமான பொழுதுபோக்காக இருந்துள்ளதுடன் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் வழிசமைத்துள்ளது. தேசிய மீலாத் விழாக்கள் ஆக்கங்களுக்கும் அபிவிருத்திக்கும் ஆவணப்படுத்தலுக்கும் பங்களிப்பு செய்துள்ளன. எனவே மீலாத் விழாக்களை மேலும் நெறிப்படுத்தி செயற்படுத்துவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது.
புகைப்படங்கள், ஆவணங்கள், தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்.
குறிப்பு: மீலாத் விழாவுடன் தொடர்புடைய பழைய புகைப்படங்கள், மெளலூது கிதாபுகள், அரபுத்தமிழ் புத்தகங்கள் இருப்பின் தயவுசெய்து அறியத்தரவும்
Zanhir +94 777 48 49 12 (zanhir@gmail.com)
நிறைவுற்றது