புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 1

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

அறிமுகம்

எமது நாட்டின் கல்விப் பாரம்பரியம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு அப்பால் செல்கின்றது. இலங்கையில் சமயம் சார்ந்த மரபுவழிக் கல்வி நிலவிய நிலையில் ஐரோப்பியரின் ஆதிக்கம் காரணமாகக் கல்வி முறைமையில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1505 இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் முஸ்லிம்களுடன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை. போர்த்துக்கேயப் படைகளைத் தொடர்ந்து மிஷனரிகள் வந்தன. அவை பாடசாலைகளையும் கல்லூரிகளையும் ஆரம்பித்தன. தமது சமயத்தைப் பரப்புவதற்கு கல்வியே அவர்களுக்கு உறுதுணையாய் அமைந்தது. இந்நிலையில் முஸ்லிம்கள் தமது சமய கலாசாரத்தை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. எனவே முஸ்லிம்கள் இக்கல்விமுறையில் இருந்தும் தூரமாகினர். ஒல்லாந்தர் காலத்திலும் இந்நிலைமை தொடர்ந்தது. அவர்கள் கோயிற்பற்றுப் (Parish) பாடசாலைகளைத் தொடங்கினர். இவை ஒல்லாந்திலிருந்து வந்த பூரண தகுதியுடைய போதகர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் நிருவாக்கத்துக்குத் தேவையானோரை உருக்குவதற்கும் தம்மை விசுவாசிக்கும் பரம்பரை ஒன்றை உருவாக்குவதற்குமான கல்விக் கொள்கைகளை வகுத்து அவர்கள் செயற்பட்டனர். ஆங்கிலம் முக்கியத்துவம்பெற்றது. மிஷனரிப் பாடசாலைகளும் தொடங்கப்பட்டன. ஐரோப்பியரின் கொள்கைகளினால் முஸ்லிம்கள் மதமாற்றம் பெற்ற சந்தர்ப்பங்களும் இருந்தன. இதனால் அக்கல்வி முறைகளையோ, அவர்களின் மொழிகளை கற்பதையோ முஸ்லிம்கள் விரும்பவில்லை.

முஸ்லிம்களின் கல்விமுறை பள்ளிவாசல்களுடன் இணைந்த திண்ணை(விறாந்தை)ப் பள்ளிக்கூடங்களை (மக்தப் அல்லது குத்தாப்) அடிப்படையாகக் கொண்டிருந்தது. குர்ஆன் ஓதும் முறையுடன் தொழுகைக்கான ஓதல்கள், நபிகளாரின் நடைமுறைகள், அரபுத்தமிழ் இலக்கிய நூல்கள் என்பன போதிக்கப்பட்டதுடன் ஆரம்பக் கல்விக்கான வழிகாட்டல்களும் அங்கு இடம்பெற்றன. காலை, பகல், அந்தி என நாளொன்றுக்கு மூன்றுமுறை பல மக்தப்கள் இயங்கின. மரபார்ந்த கற்பித்தல் முறை அங்கு பின்பற்றப்பட்டது. உயர் கல்வியைப் பெற விரும்பியோர் மத்ரஸாக்களை நாடினர். அங்கு அரபுமொழி, இஸ்லாம் போன்ற பாடங்களுடன் பூமிசாஸ்திரம், வானசாஸ்திரம், தர்க்கசாஸ்திரம், கேத்திர கணிதம், அட்சர கணிதம், வைத்தியம் போன்றனவும் கற்பிக்கப்பட்டன.

1880 ஆம் ஆண்டில் இலங்கையில் பாடசாலைகளில் கற்ற முஸ்லிம் மாணவர் தொகை 2.2% ஆகும். 1881 சனத்தொகைக் கணிப்பீட்டின் பிரகாரம் முஸ்லிம்களில் எழுத வாசிக்கத் தெரிந்தோர், ஆண்கள் 32% பெண்கள் 2% ஆகும். 1921 இல் இவை முறையே 47%, 6% ஆகும்.  அக்காலப்பகுதியில் முஸ்லிம் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டபோதும் அவை வெற்றியளிக்கவில்லை.

ஆங்கிலக் கல்வியும் கிறிஸ்தவ சமயமும் வேறுபட்டவை என்பதனை இலங்கை முஸ்லிம் தலைவர்கள் விளங்கியிருந்தனர். அரச சேவை உயர் பதவிகளுக்கு மட்டுமன்றி வியாபார அபிவிருத்திக்கும் ஆங்கிலம் அவசியம் என்பதனை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனினும் இச்சிந்தனையை தமது சமூகத்துக்கு எடுத்துச்செல்ல அவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

இக்கருத்தினை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்து வெற்றிகண்டோரில் பிரதானமானவர் ‘இலங்கை முஸ்லிம்களின் பத்திரிகைத் தந்தை’ அறிஞர் எம். சி. சித்தி லெவ்வை ஆவார். தான் வெளியிட்ட ‘முஸ்லிம் நேசன்’ பத்திரிகை ஊடாக இதனை நமது சமூகத்துக்கு அவர் எடுத்துச்சென்றார். இக்கருத்துக்களை முஸ்லிம் சமூகத்தில் புகுத்த சில பின்புலங்கள் அவருக்கு உதவின.அமெரிக்காவின் முதலாவது பெளத்தராகக் கருதப்படும், பெளத்த மதத்தைத்  தழுவிய கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வந்து, இங்கிருந்த கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு நிகரான பெளத்த பாடசாலைகளை ஆரம்பித்தார். 01.11.1886 இல் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில உயர்தர பாடசாலை 17.08.1895 இல் மருதானையில் ஆனந்த கல்லூரியாக செயற்பட ஆரம்பித்தது. இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இந்துக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அங்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கேர்ணல் ஒல்கொட்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

முஸ்லிம்களும் ஆங்கிலம் கற்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவில் சேர் செய்யத் அஹ்மத்கான் 24.05.1875 இல் உருவாக்கிய பாடசாலை 1920 இல் தென் ஆசியாவின் முதலாவது முஸ்லிம் பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது. ஆங்கிலம் பேசுவது ஹராம் அல்ல, இங்கிலாந்தில் முஸ்லிம்கள் ஆங்கிலமே பேசுகின்றனர்  என்பதை, நம் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்கு இங்கிலாந்து லிவப்பூல் இயக்கம் சித்திலெப்பைக்கு ஒரு சான்றாக அமைந்தது. காற்சட்டை அணிவது ஹராம் என்று சொல்லப்பட்ட அக்காலத்தில், ஒறாபி பாஷாவும் 56 பேர் அடங்கிய அவரின் குழுவினரும்  எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 10.01.1883 இல்   இலங்கையை வந்தடைந்தனர். அவர்கள் துருக்கித் தொப்பியும் (Faz cap) காற்சட்டையும் அணிந்திருந்தனர். இவர்களின் வருகையும் எமது கல்வி மறுமலர்ச்சிக்காகப் போராடியோருக்கு உத்வேகத்தை அளித்தது.

சேர் செய்யத் அஹ்மத்கான்

ஒறாபி பாஷா

முகம்மது காசிம் மரைக்கார் சித்தி லெவ்வை மரைக்கார் 1891 இல் மருதானை பள்ளிவாசலில் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை, மருதானை ஸாஹிறாவின் தோற்றத்திற்கு உடனடிக் காரணியாக அமைந்தது. கொடைவள்ளல் ஏ.எம். வாப்பிச்சி மரைக்காரை நிருவாகியாகவும் பொருளாளராகவும் கொண்ட கல்வி அபிவிருத்தி சங்கம் (ஜமிய்யதுல் இத்திஹானுல் உலூம்) உருவாக்கப்பட்டது. 21.08.1892 இல் ‘அல் மத்ரஸத்துஸ் ஸாஹிறா’ தோற்றம்பெற்றது. ‘ஸாஹிறா’ என்ற பெயரை சூட்டியவர் ஒறாபி பாஷா ஆவார். 1894 இல் ‘மருதானை முகம்மதியன் ஆண்கள் பாடசாலை’ – உதவி நன்கொடை பெரும் பாடசாலை (Maradana Mohammedan Boys School – grant-in-aid school) என்ற பெயரில் 35 மாணவர்களுடன் இது அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டது. 1911 இல் அது Muslim Zahira College எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மருதானை பள்ளிவாசல்

Zahira College

இன்னும் வரும் …