புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 2

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

கொழும்பு ஸாஹிறாவின் கிளைப் பாடசாலைகள்

ஆரம்பகாலங்களில் மருதானை ஸாஹிறா கல்லூரியில் ஏ.எம். வாப்பிச்சி மரைக்கார், N.H.M. அப்துல் காதர், A.S. அப்துல் காதர், S.J.A. தொரை, அப்துல் அஸீஸ் ஆகியோர் உதவி தலைமை ஆசிரியர்களாகக் கடமையாற்றியுள்ளனர். பின்னர் O.E. மார்டினஸ் அவர்களும் (1913 – 1914) J.C. மெக் ஹெய்ஸர் அவர்களும் (1914 – 1920) அதிபர்களாகக் கடமை புரிந்தனர். சட்டக் கல்லூரியின் இறுதி வருட மாணவராகக் கற்றுக்கொண்டிருந்த T.B. ஜாயா அவர்கள், மருதானை பள்ளிவாசல் சார்பாக, N.H.M. அப்துல் காதர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 01.09.1921 இல் ஸாஹிறாவின் அதிபராகப் பதவியேற்றார் (1921 – 1947). அங்கு அவரின் சேவைக்காலம் 27 வருடங்களாகும். இக்காலம் ஸாஹிறா கல்லூரியின் பொற்காலமாகும்.

‘ 1930 – 1950 காலப்பகுதியில் கொழும்பு ஸாஹிராவில் தனது மகனைப் படிக்கவைக்காத, மாகாண / மாவட்ட முஸ்லிம்களின் சமூக அந்தஸ்து பூரணமாகக் கருதப்படுவதில்லை’ என ஸாஹிறாவின் பழைய மாணவரும் பின்னர் அங்கு உயர் வகுப்புக்களில் தமிழ் பாடத்துக்குப் பொறுப்பாக இருந்தவருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். T.B. ஜாயா பதவியேற்றபோது அங்கு 59 மாணவர்கள் கல்விகற்றுக்கொண்டிருந்தனர். ஆறு ஆசிரியர்கள் கடமையாற்றிக்கொண்டிருந்தனர். ஜாயா பதவியேற்று அடுத்தவருடமே மாணவர் தொகை 450 ஆகவும் ஆசிரியர் தொகை 30 ஆகவும் அதிகரித்தது.

 T.B. ஜாயா

1942 ஸாஹிராவின் வெள்ளிவிழா ஆண்டாகும். அப்போது கல்லூரியின் முகாமையாளர் A.H.M. இஸ்மாயில் ஆவார். இக்காலப்பகுதி உலக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியுமாகும். இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையால், ஜப்பானின் குண்டு வீச்சுக்கு இலங்கை இலக்காகலாம் என்ற அச்சமும் அப்போது இருந்தது. பள்ளிக்கூங்கள் படைவீரர்களின் இருப்பிடங்களாகின. ஸாஹிறாவில் கற்றுக்கொண்டிருந்த தம் பிள்ளைகளை பெற்றோர் தமது ஊருக்கு அழைத்துச் சென்றனர். ஸாஹிறா கல்லூரியை சிலகாலம் மூடவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

தூர சிந்தனையுடன், சொல்லொணா துயர்களுக்கு மத்தியில், சமூக விடிவுக்காக, முஸ்லிம் தலைவர்களினால் உருவாக்கப்பட்ட ஸாஹிறாவின் நிலையை எண்ணி T.B. ஜாயா மனம் வருந்தினார். முஸ்லிம்களின் கல்வி மத்திய நிலையம் அழிந்துவிடக்கூடாது என்ற முயற்சிகளில் ஈடுபட்டார். நாடளாவிய ரீதியில் ஸாஹிராவின் கிளைகளைத் தோற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கினார்.

கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் பெற்றார்கள், பழைய மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், செல்வந்தர்கள் போன்றோரின் உதவியுடன் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் கொழும்பு ஸாஹிறாவின் கிளைகள் தொடங்கப்பட்டன. அளுத்கம (7.5.1942), கம்பளை (15.5.1942), மாத்தளை (1944), புத்தளம் (21.02.1945), வேகந்தை (01.03.1945) ஆகிய இடங்களில் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட ஐந்துமே கொழும்பு ஸாஹிராவின் கிளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு தாமே அதிபராக இருந்தார். கிளைப் பாடசாலை நிருவகிக்க  பதில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் ஒரு கிளையை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நகர மக்களின் ஒற்றுமையின்மை காரணமாக அது சாத்தியப்படவில்லை.

 Zahira College, Aluthgama

Gampola Zahira College

இன்னும் வரும் …