புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 3
(இஸட். ஏ. ஸன்ஹிர்)
கல்லூரியை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்கள்
கொழும்பு ஸாஹிறா கல்லூரியின் கிளையொன்றை புத்தளத்தில் தாபிப்பதற்கான முயற்சியில் T.B. ஜாயா இறங்கினர். கம்பளை ஸாஹிராவின் அதிபராக இருந்த, புத்தளம் நகரில் திருமணம் புரிந்திருந்த, முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ஜாயாவுக்கு உதவினார். 25.12.1944 திங்கட்கிழமையன்று புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் T.B. ஜாயா தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது. நகரப் பிரமுகர்கள் உட்பட பலர் அதில் கலந்துகொண்டனர். கொழும்பு ஸாஹிறா கல்லூரியின் கிளையொன்றை புத்தளத்தில் நிறுவுவதற்கான தீர்மானம் அங்கு எடுக்கப்பட்டு, அதற்காக செயற்பட ‘புத்தளம் டிஸ்திரிக்ட் முஸ்லிம் கல்விச் சங்கம்’ (The Puttalam District Muslim Educational Socity) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
கலாநிதி பதியுதீன் மஹ்மூத்
இச்சங்கம் நிதி சேகரிப்பு உட்பட கல்லூரியைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. புத்தளத்தின் சோனகர் தலைவராக (Head moor man) அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த சி.அ.க. ஹமீது ஹுஸைன் மரைக்கார் அவர்கள் வழங்கிய 1500.00 ரூபா பனத்துடன் நிதி சேகரிப்பு ஆரம்பமானது.

ஹமீது ஹுஸைன் மரைக்காரின் மகன் எச்.எம். ஸாலிஹ் மரைக்கார், எஸ்.ஏ.எம். ஹனிபா மரைக்கார், அவரின் மகன் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் (அமைச்சர்), ஈ.எஸ்.எம். முஹம்மது காசிம் மரைக்கார் (முதலாளி), டி.எஸ்.எம். அப்பாஸ் மரைக்கார் (நகர பிதா காதர் அவர்களின் தந்தை), எஸ்.எம்.ஏ. ஜமால்தீன் மரைக்கார் , ஈ.கே. காசிம் முஹியத்தீன் மரைக்கார் (கல்பிட்டி), எச்.எஸ். இஸ்மாயில் (சபாநாயகர்) ஆகியோர் தலா 1000.00 ரூபா வழங்கினர். பாடசாலை தொடங்கவேண்டும் என்பதற்காக 1500.00 ரூபா முதல் 1.00 ரூபா வரை 168 பேர் வழங்கிய 20,990.00 ரூபா பணத்துடன் கல்லூரியை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் நடந்தன.








பாடசாலை தொடங்குவதற்காக மட்டுமன்றி, இது ஒரு உதவி நன்கொடை பெரும் பாடசாலை என்ற ரீதியில், மாதாந்த செலவுகளுக்குமென பெருந்தொகைப் பணம் புத்தளம் செல்வந்தர்களாலும் பொதுமக்களாலும் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கட்டிடத்துக்கெனவும் நம் முன்னோர் பணம்தந்து உதவினர்.
பணம் சேகரிக்கப்பட்ட நிலையில், பாடசாலையை ஆரம்பிப்பதற்காகப் பொருத்தமான கட்டிடம் ஒன்றின் அவசியம் உணரப்பட்டது. அவ்வமயம், ஈ.எஸ்.ஏ.எம். பலுலூன் மரைக்கார் (சின்ன முதலாளி) அவர்கள் தனக்கும், தனது சகோதரர் ஈ.எஸ்.எம். இப்ராஹிம் நெய்னா மரைக்காருக்கும் சி.அ.க. ஹமீது ஹுஸைன் மரைக்காருக்கும் சொந்தமான, நோர்த் வீதியில் அமைந்துள்ள வீட்டை வழங்க முன்வந்தார். அதில் சில திருத்த வேலைகள் மேற்கொண்டதன் பின்னர் பாடசாலையை உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
