புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 4

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரி ஆரம்பிக்கப்படல்

புத்தளம் நகரில் ஸாஹிறாவைத் தொடங்குவதற்கு முன்னரே மாணவர் பதிவுகள் இடம்பெறத்தொடங்கின. 12.2.1945 அன்று 44 பேர் பதிவு செய்யப்பட்டனர். எஸ்.எச். உதுமான் லெப்பை மரைக்கார் அவர்களால்  தனது மகன் யூ.எல்.எம். சேகு இஸ்மாயில் அவர்கள் சேர்க்கப்பட்டு, முதல் மாணவராகப் பதிவுசெய்யப்பட்டார். அன்றய தினம் எஸ்.ஏ.கே. ஹமீது ஹுசைன் மரைக்கார் (Head Moor man) அவர்கள்  சித்தி பாத்திமா என்ற தனது மகளை சேர்த்தார். இவரே இக்கல்லாரியில் சேர்க்கப்பட்ட முதலாவது மாணவியாவார். அவரின் பதிவிலக்கம் 15 ஆகும்.

யூ.எல்.எம். சேகு இஸ்மாயில்

சித்தி பாத்திமா

பாடசாலையைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முடிவுற்றபின்னர் 21.2.1945 புதன்கிழமை காலை 11 மணிக்கு அன்றைய கல்வியமைச்சரும் இலவசக்கல்வியின் தந்தையுமான C.W.W. கன்னங்கர அவர்களால் கொழும்பு ஸாஹிறாவின் கிளை நிறுவனமாக புத்தளம் ஸாஹிறாக் கல்லூரி உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. இத்தகவல் புத்தளம் டிஸ்திரிக்ட் முஸ்லிம் கல்விச் சங்க (The Puttalam District Muslim Educational Socity) அறிக்கையில் 24.4.1954 இல் பதிவாகியுள்ளது. முகாமையாளர் H.S. இஸ்மாயில், தலைவர் M.H.M. நெய்னா மரைக்கார், கெளரவ காரியதரிசி M.A.S. ஆபுதீன் ஆகியோர் கல்லூரியின் திறப்பு நிகழ்வு பற்றி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். முதல் மாணவர் பதிவு செய்யப்பட திகதி தொடக்கம் , பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி வரை 77 மாணவர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.

C.W.W. கன்னங்கர

M.A.S. ஆபுதீன்

கொழும்பு ஸாஹிறாவின் கிளை நிறுவனமே புத்தளம் ஸாஹிறா என்றவகையில் இதன் அதிபராக T.B. ஜாயா அவர்கள் கடமையாற்றியுள்ளார். புத்தளம் நகரில் ஸாஹிறா கல்லூரியை ஆரம்பிப்பதற்கான முதலாவது கூட்டம் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றபோது ஸாஹிராவின் அதிபராக T.B. ஜாயா அவர்களே கடமையாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டமையும் பதிவாகியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.  

ஸாஹிறாக் கல்லூரி முதற் தொகுதி மாணவிகள் சிலர். கலை நிகழ்ச்சி ஒன்றின் போது

புத்தளத்தில் ஸாஹிறா தொடங்கப்பட்டபோது இக்கிளை நிறுவனத்துக்குப் பொறுப்பாக கொழும்பு ஸாஹிறாவில் கணிதபாடம் கற்பித்துக்கொண்டிருந்த பட்டதாரி ஆசிரியர் A.M. கல்தேரா நியமிக்கப்பட்டார். பறங்கி இதை சேர்ந்த இவர் ஒரு குத்துசண்டை வீரராவார். அத்துடன் அவர் ஒரு வரலாற்று ஆய்வாளரும் கூட. தனது ஓய்வு நேரங்களில் எமது பிரதேசதில் வரலாற்று ஆய்வு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.

ஸாஹிறாக் கல்லூரி நோர்த் வீதியில் இயங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம். அதிபர் M.K.M. லதீப் (1946 – 1951)

கல்தேரா அவர்களின் காலத்தில் சாஹிறாவில் கற்பித்த புத்தளம் பெருமகன் என்ற அடிப்படையில் ஆங்கில ஆசிரியர் S.M.S. அஹ்மத் (சீனிமுத்து) அவர்களும் இங்கு குறிப்பிடத்தக்கவர். கல்பிட்டியில் ஒரு பாடசாலையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கும் பாடசாலை ஆரம்பிக்கப்பட முன்னரே முதற் தொகுதி மாணவர்கள் பதிவு இடம்பெற்றது. அந்தவகையில் அங்கு மாணவர்களை பதிவுசெய்தவர்  S.M.S. அஹ்மத் அவர்களே. அவர் மாணவர்களை 2.9.1946 இல் மாணவர்களைப் பதிவுசெய்து, பாடசாலையை உத்தியோகப்பற்றற்ற வகையில் தொடக்கிவைத்தார். பின்னர் 22.11.1946 இல் கல்வியமைச்சர் C.W.W. கன்னங்கர அவர்களால் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

S.M.S. அஹ்மத் (சீனிமுத்து)

கல்பிட்டி பாடசாலை ஆரம்ப நிகழ்வில் T.B. ஜாயா, H.S. இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொண்டனர். இன்றைய அல் அக்ஸா தேசிய பாடசாலையின் சம்பவத் திரட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இது பதிவாகியுள்ளது. C.W.W. கன்னங்கர அவர்கள் இதனை தனது கையெழுத்தில் பதிவுசெய்துள்ளார். 22.11.1946 இல் கல்வியமைச்சர் C.W.W. கன்னங்கர அவர்களின் கல்பிட்டி விஜயத்தின் போது புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலைக்கும் (கால ஸ்கூல் – தற்போதைய பாத்திமா) விஜயம் செய்துள்ளார். அந்தப் பாடசாலையின் பாடசாலையின் சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் அன்றய தினம் C.W.W. கன்னங்கர அவர்கள் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Al Aqsa 1st Log

இன்னும் வரும் …