புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 6 (இறுதிப் பகுதி)

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

ஆங்கில மொழிமூல போதனை நிறுத்தமும் அரசாங்கம் பொறுப்பேற்றலும்

இலங்கையில் ‘பைத்துல்மால்’ என்ற பெயரில் ஏழைகள் நல  நிதியத்தை உருவாக்கியவர் H.S. இஸ்மாயில் ஆவார். அதன் தாபகத் தலைவர் அவர். அன்னாரின் முயற்சியின் பலனாக, பைத்துல்மால் நிதியம் மூலமும் பொதுமக்களின் அன்பளிப்புகளுடனும் கட்டப்பட்டதே   ‘இஸ்மாயில் கட்டிடம்’ (Ismail Block) ஆகும். 28.10.1961 இல் ஏ.எம். அலிமரைக்கார் அவர்களால் கல்லூரிக்கான விஞ்ஞான ஆய்வுகூடம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. அதுவே ‘சாரா கட்டிடம் ஆகும். H.S. இஸ்மாயில் அவர்களின் பின்னர் கல்லூரி முகாமையாளராக இருந்த முஹம்மது ஏ காதர் (Chairman Cader) அவர்களின் முயற்சியினால் கட்டப்பட்டது ‘காதர் மண்டபம்’ (Cader Hall) ஆகும்.

H.S. Ismail Block

 ஏ.எம். அலிமரைக்கார்

Chairman Cader

Cader Hall

ஆங்கில மொழிமூலம் இருபாலரும் கற்கக்கூடிய வகையில், உதவி நன்கொடை பெரும் பாடசாலையாக (Grant-in-Aid) ஆரம்பிக்கப்பட்டதே புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியியாகும். எனவே கட்டிடங்கள் அமைத்தல், ஆசிரியர்களை பெற்றுக்கொள்ளல், போதிய நிதியை தேடிக்கொள்ளல் என எல்லாவற்றையும் முகாமைத்துவக் குழுவே கவனிக்கவேண்டியிருந்தது. இதற்காக இக்குழு எதிர்நோக்கிய சவால்கள் பல.

ஸாஹிறாவின் மனேஜராக இருந்த H.S. இஸ்மாயில் அவர்களின் டயரிக் குறிப்புக்களை வாசிக்கும்போது இது எமக்கு நன்கு புலப்படுகின்றது. 1952 ஆம் ஆண்டில் தனது டயரியில் எழுதிய குறிப்பொன்று பின்வருமாறு. ‘ஸாஹிறாவின் இரண்டாவது கட்டிடத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் கட்டிடம் பூர்த்தியாக்குவதில் யாருக்குமே அக்கறையில்லை. நிதியும் இல்லை. நான் பிச்சைதான் எடுக்கவேண்டும்’.

1948 – 1961 காலப்பகுதியில் கொழும்பு ஸாஹிறாவின் அதிபராக A.M.A. அஸீஸ் கடமையாற்றினார். 1955 காலப்பகுதியில் இஸ்மாயில் அவர்கள், அஸீஸ் அவர்களுடன் புத்தளம் ஸாஹிறாவின் எதிர்காலம் பற்றி கலந்துரையாடினார். ஸாஹிறாவை மத்திய கல்லூரியாக்குமாறும் பெண்களுக்கென தனியான கல்லூரி ஒன்றை உருவாக்குமாறும் அஸீஸ் அவர்கள் H.S. இஸ்மாயிலுக்கு ஆலோசனை வழங்கினார். தனது தினக்குறிப்பேட்டில் இஸ்மாயில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘ஸாஹிறா கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தும்படி அரசாங்கத்தை கேட்பதென யோசித்து வருகின்றேன்’.

A.M.A. Azees

ஆங்கில மொழிமூலம் கற்பிக்கக்கூடிய தரமான ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமங்கள், போதிய நிதி வசதியின்மை போன்ற பல்வேறு காரணகளினால் 1955 இன் பின்னர் புத்தளம் ஸாஹிறா கல்லூரியில் ஆங்கில மொழி மூலமான போதனை நிறுத்தப்பட்டது. புத்தளத்தில் இதற்கு எதிர்ப்பலைகள் எழுந்தன. ஸாஹிறாவின் மானேஜர் என்ற வகையில் H.S. இஸ்மாயில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அக்காலத்தில் இலங்கையின் M.E.P. அரசு தனது சுயமொழிக்கொள்கையூடாக ஆங்கிலக் கல்வியை முடிவுக்குக் கொண்டுவந்திருந்த பின்னணியும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே ஆங்கில மொழி மூலமான போதனை நிறுத்தம் அன்றய அரசின் கொள்கைகளுள் ஒன்றாக இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1960 இல் நம் நாட்டில் அரசாங்க பாடசாலைகள்,உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் ஆகிய மூவகை பாடசாலைகள் காணப்பட்டன. இவற்றிற்கிடையே கல்வி நிலையிலும் ஏற்ற தாழ்வுகள் நிலவின. ‘கல்வியில் சமவாய்ப்பு’ என்ற ரீதியில் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டன. பதியுதீன் மஹ்மூத் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தபோது 28.10.1960 இல் இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தான் நீண்டகாலம் அதிபராக இருந்து நேசித்த கம்பளை ஸாஹிறா கல்லூரியை அவர் முதலில் அரசிடம் கையளித்தார்.

BADI UDIN MAHMUD

உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக இருந்த புத்தளம் ஸாஹிறாக் கல்லூரி 1.1.1961 இல் அரசால் சுவீகரிக்கப்பட்டது. 01.02.1962 இல் புத்தளம் நகரில் பாடசாலை ஒன்றிணைப்பு (Amalgamation) நடந்தது. அதனடிப்படையில் ஸாஹிறாக் கல்லூரி அரச ஆண்கள் பாடசாலையாக மாறியது. ஸாஹிறாவில் கற்ற பெண்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட (01.02.1962) பாத்திமாவுக்கு மாற்றப்பட்டனர். பாத்திமா கல்லூரி அமைந்திருந்த இடத்தில் 1921 இல் ஆரம்பிக்கப்பட்ட அரச ஆண்கள் பாடசாலை இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு கற்ற ஆண்கள் ஸாஹிராவுக்கு மாறினர். தற்போது ஸாஹிரா ஆரம்பப் பிரிவு அமைத்திருக்கும் இடம் 1938 இல் ஆரம்பிக்கப்பட்ட அரச பெண்கள் பாடசாலைஅமைந்திருந்தது. அங்கு கற்ற பெண் பிள்ளைகளும் பாத்திமாவுக்கு மாற்றப்பட்டனர். அந்த இடம் ஸாஹிறா பாலர் பிரிவாகியது (Infant School).

Photograph Taken After Opening Boys Muslim Govt. School, Poles Road, Puttalam – 1921

இருப்பவர்கள் இடமிருந்து வலம் :

1….,2….,3….,4…., 5. E.S.A.M. பளுலூன் மரைக்கார் ( சின்ன முதலாளி), 6…,7….., 8. முஹம்மது காசிம் மரைக்கார்( ஊர் மரைக்கார்),9,……,10. M. அந்தோனிப்பிள்ளை புறொக்டர்,11. E.S.M.இப்றாகீ ம் நெய்னா மரைக்கார்,12. மஜீது மரைக்கார்.

நிற்போர், 2ம் வரிசை (இடமிருந்து வலம்) :

1. T.S.M. அப்பாஸ் மரைக்கார் (காதர் ஹாஜியாரின் தந்தை), 2.மு.நா.க. ஹமீது ஹுசைன் மரைக்கார் (H.S. இஸ்மாயிலின் தந்தை), 3…..,4…..,5….., 6. சி.அ.க.ஹமீது ஹுசைன் மரைக்கார் ( H.M. சாலிஹ் மரைக்காரின் தந்தை), 7….., 8. யூ.செ.செய்யது முகம்மது (கபூரின் தந்தை), 9. அகமது நெய்னா மரைக்கார் (ரஹ்மத்துல்லா ஆசிரியரின் அப்பா),10. சி.அ.மு. ஹனிபா மரைக்கார் (M.H.M.நெய்னா மரைக்காரின் தந்தை), 11. S.E.M. அசன் குத்தூஸ்,12. யு.செ. கபூரின் தந்தை,13. செய்யது முஹம்மது ஹூசைன் மரைக்கார்( ஹாஜா முக்கிதீனின் தந்தை ),14. U.A.சமது (றசீன் மஹ்ரூபின் தந்தை),15. முஹம்மது இப்ராகீம் (Dr. ஹனீபாவின் பாட்டனார்),16. S.M.S.மீராப்பிள்ளை (அபூத்தாஹிர் புரக்டரின் தந்தை),17. ஹமீது விதானை( அப்பாஸ் விதானையின் தந்தை).

நிற்போர் (இடமிருந்து வலமாக)

1.கொத்துவால் அப்பா, 2. நல்ல இப்றாகீம் (பள்ளிமாமா செய்யது அகமதுவின் அப்பா,3. சீனிமுத்துவின் காக்கா, 4…., 5. செய்யது முஹம்மது(சீனிமுத்து) செய்யது அகமதின் வாப்பா, 6. துவான் யூசுப் சாபார், 7. பீர் மரைக்கார் (அப்பாஸ் விதானையின் அப்பா), 8. ப. தம்பி மரைக்கார் (ப.த) (M.H.M.நவவியின் வாப்பா), 9. சேகு சிக்கந்தர்

படவிளக்கம்: ஹனிபா டாக்டரின் தந்தை – 1995 இல்

(நன்றி – நெய்னா மரைக்கார் ஜஹான்)

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்  போன்ற காரணிகளால் 21.08.1961 இல் கொழும்பு ஸாஹிறா கல்லூரி அரசினால் சுவீகரிக்கப்பட்டபோது மருதனைப் பள்ளிவாசல் நிருவாகம் அதற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தது. 01.01.1967 இல் அது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையாகியது. நிதிவளத்தை திரட்டல், தகுதியான ஆசிரியர் பெறல், கட்டிட புனரமைப்பு , மாணவர் ஒழுக்கம் போன்ற பல்வேறு சவால்களை அது அப்போது எதிர்நோக்கியது. அவற்றை  நிவர்த்திக்கும் பொறுப்பு மருதானை பள்ளிவாசலுக்கும் கல்லூரி அதிபருக்கும் ஒப்படைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் அது, மத்திய கல்லூரியாகவும் 19.07.1994 இல் தேசிய பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. ஆரம்பம் முதல் இன்றுவரை அனுபவமும் ஆளுமையும் மிக்க அதிபர்களாலும் அர்பணிப்புமிக்க ஆசிரியர்களாலும் கல்லூரி வழிநடத்தப்பட்டு,  பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தில் கல்விச் சாதனைகள் பல புரிந்து சிறந்த பிரசைகளையும் தொழில்சார் வல்லுனர்களையும், துறைசார் நிபுணர்களையும் பல்வேறு ஆளுமைகளையும் உருவாக்கி, கல்வியை வழங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் கல்வி நிறுவனம் ஸாஹிறாக் கல்லூரி என்பது மிகையல்ல. எமது கல்லூரியில் கற்றோரும் கற்போரும் அதன் மீது பேரன்பும் பெரு மதிப்பும் கொண்டிருக்கின்றோம்.

நம்முன்னோர் பல்வேறு அர்பணிப்புக்களுடன் நமக்காக உருவாகித் தந்த நமது கல்லூரியை, நாம் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பாதையில் பயணிக்கச் செய்வது நம் அனைவரினதும் கடமையாகும்.

எமது ஸாஹிறாக் கல்லூரி புத்தளத்தின் சொத்து. “நாம் ஸஹிரியன் என்பதில் பெருமையடைகின்றோம்”.

“Proud be a Zahirian”

உசாத்துணைகள்:
1. The Puttalam district Muslim Educational Society Zahira College Progress Report – 24.4.1954 (H.S. Ismail (Manager), M.H.M. Naina Maraikar (President), M.A.S. Abdeen (Hon Secretory)

2. எச். எஸ். இஸ்மாயில் – ஒரு சமூக அரசியல் ஆய்வு – எம்.எஸ்.எம். அனஸ், மே 1995, YMGA வெளியீடு

3. இலங்கையில் முஸ்லிம் கல்வி – ஷாபி மரைக்காரின் சிந்தனையும் பங்களிப்பும், ஏ.எம். நஹியா – 2018

4. வித்தியாலயம், புத்தளம் கல்வி வலயம், தமிழ்ப் பிரிவு வெளியீடு – 2018

5. பாடசாலை சம்பவத் திரட்டுக்கள் (Log)

6. நேர்காணல்கள்

குறிப்பு:

புகைப்படங்கள், ஆவணங்கள், தகவல்கள் போன்ற அனைத்தையும் தந்துதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

முற்றும்