பேனாவால் சுஜூது செய்த ஊடக ஆளுமை அப்துல்லாஹ் அஸாம்
(Irsath Imamdeen)
.
அல்லாஹ்வின் மார்க்கம் இந்த உலகில் வாழவேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோளுக்காக மட்டுமே வாழும் அற்புதமான மனிதர்கள் நிறைந்த ஓர் அழகிய பாசறை அது. அத்தனை வாய்ப்புகளையும் துறந்துவிட்டு அல்லாஹ்வுக்காக மட்டுமே வாழும் மனித நந்தவனம் அது. யாரையும் காயப்படுத்தாத நேர்மையும் அன்பும் பரிவும் நிறைந்த மனித மாணிக்கங்களை அங்கு கண்டேன்.
.
மனிதகுளத்தின் மேம்பாட்டுக்காகவும் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் நட்புறவோடு வாழ வேண்டுமென்பதற்காகவும் எத்தனை எத்தனை வேலைத்திட்டங்கள்; எத்தனை அர்ப்பணிப்புகள் அவர்களிடம். அவ்வாறான மனிதப் பூந்தோட்டங்களுக்கு மத்தியில் நான் பார்த்து வியந்த ஓர் ஆளுமை அஷ்ஷெய்ஹ் அப்துல்லா அஸாம் அவர்கள்.எளிமையும் செயற்கைத்தனமில்லாமல் இயல்போடு வாழ்ந்த ஒரு மனிதர்.தமிழ் அறிவும் ஊடகவியல் அறிவும் அவரிடம் அதிகமாகவே கொட்டிக்கிடந்தன.
.
அவரிடமிருந்து தமிழ் மொழி தொடர்பாகவும் ஊடகம் தொடர்பாகவும் கற்கக் கிடைத்தது. அல்லாஹ் தந்த பாக்கியத்தால் அவ்வாறான ஓர் இடத்தில் பேனாவால் சுஜூது செய்யும் அருள் ஓர் ஆறு வருடங்கள் கிடைத்தன. காட்டாருபோல் போல் பயணித்த எனக்கு வாழ்வு பற்றிய தெளிவு கிடைத்த இடம் அது.இறைபணி செய்யும் அந்த இடத்தில் கேட்ட அத்தனை துஆக்களையும் அல்லாஹ் அங்கீகரித்தான். சாத்தியமில்லாத பல விடயங்களை அல்லாஹ் அந்தப் பணிக்காக வேண்டி சாத்தியப்படுத்தித் தந்தான்.
.
எங்கள் தேசம் ஆசிரியர் பீடத்தில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்தவேளை ஒரு மேலதிகாரியாக அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் அஸாம் இருந்தார்.மிகவும் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் பணிபுரிவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்.ஒரு மேலதிகாரி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரி.எப்போதும் அவர் தன் இயல்பிலிருந்து மாறாத ஒருவர்.ஒரு சமுத்திரத்தைப் போல அமைதியாக இருப்பார்.அவர் மிகப் பெரிய ஊடக ஆளுமையாக இருந்தபோதும் தன்னை ஓர் ஊடகவியலாளனாகவோ எழுத்தாளனாகவோ எப்போதுமே காட்டிக்கொள்ள பிரயத்தனப்படவில்லை. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டையைக்கூட பெற முயற்சிக்காதவர்.
.
அவர் எழுத்துப் பணியை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்தார்.அதனால் தன் எழுத்துப் பணிக்காக இறை பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்தவர். உமர் ரழி அவர்கள் கூறும் ஒரு விடயம் ஜாஹிலியத்தை புரியாதவன் மார்க்கத்தை இரண்டாக உடைத்துவிடுவான்.அப்துல்லாஹ் அஸாம் அவர்கள் ஜாஹிலியத்தின் முகத்தை சரியாக விளங்கிக் கொண்ட ஒருவர்.அரோடு எல்லா விடயங்களையும் ஆழமாக உரையாடலாம் அரசியல் தொடக்கம் சினிமா முதல் சமூகம் தொடர்பில் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார்.
.
இந்தியா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் சிறை சென்று திரும்பியவேளை எங்கள் தேசத்திற்காக நான் ஒரு கட்டுரை எழுதியபோது அந்தக் கட்டுரைக்கு அவர் வைத்த தலைப்பு “மீண்டு வந்தார்: மீண்டும் வந்தார்” இதுபோன்ற மறக்க முடியாத நினைவுகள் நிரம்பி வழிகின்றன.
.
புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷெய்ஹ் அப்துல்லா அஸாம் ஒரு எழுத்தாளரும் நூலாசிரியரும் ஊடகவியலாளரும் அல்ஹசனாத்,எங்கள் தேசம் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவருமாவார். பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவரும், பல எழுத்தாளர்களை எழுத்துத் துறைக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செய்தவரும், பன்முக ஆளுமை கொண்டவருமான இவர், தமிழ் மொழி மூலமான பல நூல்களும், ஆக்கங்களும் வெளிவருவதற்கு நீண்ட காலமாக பங்களிப்பு செய்துள்ளார்.
.
குர்ஆனிய கலைகள் தொடர்பான இவருடைய நூல் தமிழ் உலகில் மிகவும் பிரபலமானதாகும். இறை பணிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் அஸாம் அவர்கள் இறைபணியாளனாகவே தன் பயணத்தை அழகாக நிறைவு செய்துள்ளார்.இவ்வாறான நல்ல மனிதர்கள் பயணித்த பாதை வழியே பயணம் செய்து எமது பயணத்தையும் சிறப்பாக நிறைவு செய்யும் பாக்கியத்தை வல்ல றஹ்மான் வழங்குவானாக!
.
WAK
