பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-09

மின்சக்தி துறையில் சேவையாற்றி ஓய்வு பெற்ற பொறியிலாளர் அந்தோனிப் பிள்ளை இன்னும் சிலர், நான் அன்றைய கூட்டத்தில் பேசினோம். விஞ்ஞான விளக்கம், எதிர்ப்புச் செயற்பாடு என்பவற்றில் முபாரக்குடன் அந்தோனிப்பிள்ளை சிறப்பாக இயங்கினார்.
.
அரசாங்கங்களால் புத்தளம் தேர்தல் தொகுதிக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் பற்றியும் நிலக்கரி மின் ஆலையினால் கடலேரிக்கும் கடலுக்கும் சுற்றாடலுக்கும் நிகழவிருக்கும் பேராபத்துக்கள் பற்றியும் நான் பேசினேன். புத்தளம் வருமுன்னர், எமது குடும்ப நண்பர் , பேராதனைப் பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கரீம் அவர்களைச் சந்தித்துச் சில விடயங்களை அறிந்து கொண்டேன்.
.
அணுமின் நிலையம் இலங்கையில் அமைப்பது சாத்தியமா என்பதைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் அவர் ஒரு அங்கத்தவராகப் பணியாற்றி இருந்தார். நிலக்கரி மின் நிலையம் பற்றியும் அக்குழு கருத்துத் தெரிவித்திருந்தது. அணுமின் சக்தி நிலையம் இலங்கையில் அமைப்பதை அக்குழு ஏற்றுக் கொள்ளவில்லை. அமைக்கலாம் ஆனால் அதை இலங்கையினால் பாதுகாக்க முடியாது என்று கூறிவிட்டது.
.
நிலக்கரி மின் நிலையம் காலங்கடந்த முறை என்றும் அமைக்கப்படும் இடங்களின் சுற்றாடலை அது சர்வ நாசம் செய்யக் கூடியது என்றும் அக்குழு கண்டித்திருந்தது. நிலக்கரி எரிக்கப்பட்டு வானை நோக்கி எழும் புகையும் , நிலக்கரி கழிவு சேகரமாவதிலிருந்து எழும் தூசுகளும் சுற்றாடலை மாசுபடுத்தும் .அமில மழை பெய்யும் . இதனால் பல வித சரும நொய்களுக்கும் புற்று நோய்க்கும் சுவாச நோய்களுக்கும் மக்கள் ஆளாவார்கள் கீழ் நோக்கி விழும் தூசு, துகள்களால் தாவரங்கள், விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படும் .
.
இயந்திர இயக்கங்களால் சூடாக்கப்பட்டுப் பயன் படுத்திய சூடான நீர் கடலுக்கு ( இந்து சமுத்திரம் ) அனுப்பப்படும். கடலின் வெப்பநிலையில் கணிசமான மாற்றத்தை இது கொண்டுவரும் . மீன்வளத்துக்குப் பெயர் போன நுரைச்சோலை முதல் கல்பிட்டி வரையிலான கடலில் மீன் உற்பத்தியை இது பாதிக்கும். சுற்றாடலின் தட்ப வெப்ப நிலையையும் இது பாதிக்கும். (3, 4 வருடங்களிலேயே இவை அனைத்தும் நிகழ ஆரம்பித்தன. இப்பிரதேசத்துக்கே இது ஒரு அச்சுறுத்தலாகி உள்ளது). இவை நான் பேசிய முக்கிய விடயங்கள்.
.
மற்றப் பேச்சாளர்களும் முபாரக்கும் பல புள்ளிவிவரங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்துப் பேசினர். இவ்வாறு இரண்டு கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். பின்னர் பல கூட்டங்களும் போராட்டங்களும் புத்தளம் நகரிலும் கல்பிட்டிப் பகுதிகளிலும் நடந்தன. நுரைச்சோலை – மாம்புரிப் பகுதிகளில் பெரிய கண்டனக் கூட்டங்கள் நடந்தன. தலவில் மாம்புரி மற்றும் கல்பிட்டிப் பிரதேச கிறிஸ்தவ தலைமைத்துவங்களும் கடும் நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். ஆனால் முடிவை மகிந்த அரசாங்கமும் சீன வங்கிகளும் சீன கொந்தராத்துக்காரர்களும் தீர்மானித்தனர்.
.
எதிர்ப்பது போல் நாடகம் ஆடிக் கொண்டிருந்த சில உள்ளூர் அரசியல்வாதிகளையும் சில கட்சி அடிவருடிகளளையும் மற்றும் சில அப்பாவிகளையும் சீனாவுக்கு அழைத்துச் சென்று விருந்தினர்களாக நடத்தியது சீனா. மூளைச்சலவை செய்து அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதுடன் எதிர்ப்புக்கள் மறைந்தன. சொர்க்கம் வாக்களிக்கப்பட்டது போல் சீனா சென்ற குழு குதித்தது. உள்ளூர் மகிந்த வாதிகள் மொனம் காத்தார்கள்.
.
முன்னர் இதே சொர்க்கம், திருகோண மலை சென்றபோது, தென் மாகாணக் கரையோரங்களுக்குச் சென்ற போது துரத்தி அடிக்கப்பட்டது. துன்பம் தரும் திட்டங்கள் என்றால் பாவப்பட்ட ( சிறுபான்மை ) மக்களுக்கு. நுரைச்சோலையில் அது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. வெற்றியோ தோல்வியோ முபாரக் முழங்கிக் கொண்டே இருந்தார்.
.
WAK