பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-10

2005 ம் ஆண்டிலிருந்து நுரைச்சோலை அனல் மின்சக்தி பிரச்சினை ஆரம்பமானதாக நினைக்கிறேன். புத்தளம் பிரதேசத்தின் சுற்றாடல் பிரச்சினை பற்றி மக்கள் விழிப்புணர்வு பெற இது வாய்ப்பாகியது. மக்கள் இதில் பாடங்கள் கற்றார்களா? தெரியாது.
.
பாலாவியில் சிமெந்துத் தொழிற்சாலை 1970 களில் உருவாக்கப்பட்டபோதும் அதன் பின்னரும் இன்று வரையும் புத்தளம் நகரும் அதன் சுற்றாடல் பிரதேசங்களும் கொடுத்த விலை இன்னும் முடியவில்லை. மக்கள் செறிவாக வாழும் , வயல்கள் தென்னந் தோப்பு கள் சூழ்ந்திருக்கும், இடங்களில் இந்த மாதிரியான பாரிய ஆலைகளை அமைப்பது பெரிய அநியாயமாகும் .
.
புத்தளம் நகருக்கு மழை காணாது என்றாலும் ( சிமெந்து) தூசி மழையில் குறைவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் வாழும் பிரதேசம் அது. தூசுக்கு முடிவு கட்டும்படி பல மனுக்கள் அனுப்பப்பட்டுவிட்டன. அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு காணு முன்னரே 2005ல் நுரைச்சோலையில் நிலக்கரிப் பிரச்சினை ஆரம்பமாகியது.
.
ஆழ்கடல் ( பெருங் கடல் ) மீன் வளம், கல்பிட்டிக் கடலேரி ( சிறு கடல் ) மீன் வளம், சுற்றாடல் , மரக்கறி , தெங்கு , மனித சுகாதாரம் எல்லாவற்றுக்கும் பெரிய அச்சுறுத்தலாக அது மாறியது. தம்புல்லைக்கு அடுத்த மரக்கறி மத்திய விற்பனை நிலையம் நுரைச்சோலையில்தான் இருக்கிறது. நுரைச்சோலையில் இருந்து சிறுகடல் ஊடாக அயல் மாவட்டங்களுக்கு அதிசக்திவாய்ந்த மின்கம்பிகள் மூலமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தினால் மீனவர்கள் கொதிப்படைந்தனர் .
.
அடிக்கு மேல் அடி , கடலேரி கதறி அழாத குறை. கடலேரியைச் சூழ வாழ்கின்ற எல்லா மக்களுக்குமான உயிர் பிடிப்பும் அச்சுற்றாடலைச் சுத்தமாக்கித் தருகின்ற சக்தியும் கடலேரிக்கே உள்ளது. அதற்கான தாவரங்களைப் பெற்றிருக்கும் நீர்த் தடாகம் கல்பிட்டிக் கடலேரி. கன்னா மரங்களும் கண்டல்களும் உமிரி மரங்களும் மற்றும் பல கடற்தாவரங்களும் மண்டிக்கிடக்கும் கடல் பிரதேசம் நம்முடையது.
.
உமிரிக்குளம் , கன்னா வாடி, கண்டல் குடா, கண்டல் குழி என்று குளப் பெயர்கள் ஊர்ப் பெயர்கள் வழங்கும் பிரதேசம் இது. இவற்றைக் கற்றுக் கொடுக்க எமது கல்வி தவறிவிட்டது. இவை பற்றிப்பேச எமது கலாசாரத்தில் எதுவுமே இருக்கவில்லை. பேசத் தொடங்கினாலே வானத்துக்கு அப்பாலும் பூமிக்கு கீழும். காலூன்றி நிற்கும் பூமிக்கு முடிவுரையில் கூட இடமில்லை. பாடசாலைகள் இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பாடம் சாராத அறிவுச் செயற்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்த எங்களிடம் திட்டங்கள் இருந்திருக்க வேண்டும்.
.
எமது பிரதேசப் பெருங்கடலையும் சிறு கடலையும் குளங்களையும் ஓடைகளையும் காடுகளையும் தாவரங்களையும் புற்பூண்டுகளையும் நிலவியலையும் தட்ப வெப்பங்களையும் காட்டித் தர வேண்டும் . சிறந்த மீனவர்கள் விவசாயிகள் இருக்கும் இடத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். பொதுவாகச் சுற்றாடல் கல்வியும் சுற்றாடல் ஒழுக்கவியலும் பாடசாலை மட்டத்திலேயே ஆரம்பம் ஆக வேண்டும்.
.
அதில் மாணவர் வாழும் பிரதேசத்தின் சுற்றாடல் கல்வியும் இணைய வேண்டும். புத்தளத்தின் அனுபவம் எல்லா இடங்களுக்கும் தேவைப்படலாம். மூடர்களும் ஊழல் பேர்வழிகளும் மோசடிக்காரர்களும் ஆட்சி செய்யும் தேசத்தில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். நடக்கும் அநீதி என்ன என்பதையாவது மக்கள் அறிந்திருக்க கல்வி நமக்கு உதவும்.
.
WAK