பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-11

2018ல் கொழும்பு குப்பை – சீன கொந்தராத்து மீண்டும் சூடு பிடித்தது. பாட்டலி சம்பிக்க இதைப் புத்தளத்தில் நிறைவேற்றத் தலை கீழாக நின்றார். இதற்கான பூர்வாங்க எதிர்ப்புக்களை புத்தளம் வெளிப்படுத்தி வந்தது. தேசிய சுற்றாடல் பாதுகாப்புச் சபை சுற்றாடல் பாதிப்பைக்காரணங்காட்டி அனுமதி மறுத்தது. இது புத்தளம் எதிர்ப்புக்குக்
கிடைத்த வெற்றியாகும்.
.
கொமிஷனுக்காகக் காத்திருந்த காக்கைக் கூட்டங்கள் அதிர்ச்சி அடைந்தன. இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் முபாரக்கின் மூளையும் கடும் உழைப்பும் இருந்தது. மனுக்கள் மூலமாக மட்டும் அன்றிக் கொழும்பிலும் புத்தளத்திலும் வண்ணாத்தி வில்லுவிலும் நடந்த அரச நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்ட எல்லாக் கூட்டங்களிலும் புத்தளத்தை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினார். ஆதாரங்களுடன் புள்ளிவிபரங்களுடன் எதிர்த்துப் பேசினார், வாதாடினார்.
.
வழமைபோல் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி , குறுக்கு வழிகளில் அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து , சீனாவின் விருப்பப்படி அல்லது சீனாவுக்கு வாக்களித்தபடி புத்தளம், அறுவாக்காட்டில் இடம் தயார்படுத்தப்பட்டது.
இதற்குள் மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. புத்தளம் நகரில் இருந்து 40 மைலுக்கும் அப்பால் ஆனால் கடல் ஏரி கரையைத் தொடும் இடத்தில் ஆயத்தங்கள் துரித வேகத்தில் நடந்தன.
.
புத்தளத்தில் ஒரு ‘அரகலய ‘ உருவானபோது கொழும்புக் குப்பைகளை ஏற்கக் கூடிய இடமாக அறுவாக்காடு (சேராக்குழி ) தயார்படுத்தப்பட்டுவிட்டது. சில மேலதிக வேலைகள் மட்டும் மிச்சம் இருந்தன. இந்தத் தாமதம் எப்படி ஏற்பட்டது ? இளைஞர்கள்நம்பிக்கை இழக்கவில்லை. புத்தளம் அதுவரை காணாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கால வரையறை இன்றி இரவு பகல் பேதமின்றித் தொடர்ந்தன. புத்தளம் மாவட்டம் முழுக்க ஒரு எதிர்ப்பலை உருவாகியது.
.
புத்தளம் கடைசி ஆயுதமாகவே தொடர் போராட்டத்தைக் கையில் எடுத்தது. புத்தளம் நகரின் முற்றம் போல் பரந்து கிடக்கும் கொழும்பு முகத் திடலில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. ‘புத்தளத்திற்குக் குப்பை வேண்டாம்.’ எளிமையான கோஷம் . ஆனால், கொள்கையில் இளைஞர்கள் உறுதியாக இருந்தனர். படிப்படியாக மக்கள் ஆதரவு மாவட்ட அளவில் அதிகரித்தது.
.
WAK