பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-12

புத்தளம் இருந்து மன்னார்ப் பாதையில் வடக்கு நோக்கி வண்ணாத்தி வில்லுவைக் கடந்து 40 மைல் வரைப் பயணம் செய்தால் சேராக்குழி குப்பை கொட்டும் இடத்தை அடைந்துவிடலாம். கடலேரி அங்கும் வளைந்து அலைவீசி அழகாகக் காட்சி தருகிறது. கல்பிட்டியில் இருந்து இதன் தரை வழித்தூரம் 70 மைல்கள் இருக்கலாம். ஆனால் புவியியல் இதை இன்னொருவிதப் பாணியில் நமக்குத் தந்துள்ளது . அங்கிருந்து பார்த்தால் கல்பிட்டி நகரம் கூப்பிடு தொவைவு .குறுக்கே கல்பிட்டிக் கடலேரி. இது நான் நேராகக் கண்ட காட்சி .
.
புத்தளம் , கொழும்பு முகத்திடல் மக்கள் ஆர்பாட்டக் களமாகி இருந்தது. குட்டி அரபு வசந்தம் மாதிரி ஒரு அரகல அங்கு அரங்கேறியிருந்தது. இளைஞர்கள், பெண்கள் அதிகமாகக் கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டம் பொது மக்கள், உள்ளூர் அரசியல் தலைவர்களின் ஆசீர் வாதத்துடன் நடந்து கண்டிருந்தது மாதக் கணக்கில். இதே வேளை குழிகள் தோண்டப்படும் இடங்களில் உள்ள ஊர்மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வாக்களிக்கப்பட்டன.
.
கல்பிட்டி, ஆனமடு ,வண்ணாத்தி வில் ,தலவில் எல்லா மக்களும் அரகலவில் சமய இன பேதமின்றி புத்தளம் நகரில் ஒன்று கூடுவதைக் காண முடிந்தது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கைக் கண்டித்து பத்ரிகைகளில் சில கட்டுரைகள் எழுதினேன். அப்போது பேராதனையில் . அங்கிருந்தவாறு ஸன்ஹீருடன் பேசினேன். சேராக்குழி சென்று குப்பைக்காகக் குழிகள் தோண்டப்படும் இடத்திற்குச் செல்வது என்று முடிவு செய்தோம்.
.
புத்தளம் இருந்து ஒரு காலை நேரத்தில் காரில் பயணத்தை ஆரம்பித்தோம். புத்தளம் எதிர்ப்புப் பலமடைந்து கொண்டிருந்ததால் குழி தோண்டப்படும் இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்குதல்கள் நிகழலாம் என்ற அச்சம் இருந்ததால் பொது மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது . சீன – இலங்கை அதிகாரிகளுடன் நல்ல தொடர்பிருந்த உள்ளூர் வாசி ஒருவரின் முயற்சியில் அனுமதி பெற்றுக் கொண்டோம்.
.
சில மைல்கள் தூரம் முன்னாலிருந்த பெரிய தற்காலிகக் காரியாலயத்தில் காரை நிறுத்திவிட்டு அதிகாரிகளுடன் பேசினோம் . எங்களை வர வேற்பதாக அவர்கள் கூறினார்கள் . அங்கிருந்த மினி மாதிரித் திட்டங்களைக்காட்டி சுற்றாடல் பாது காப்புக்குத் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தையும் விளக்கினார்கள். பின்னர் ஒரு வாகனத்தில் ஏற்றி எங்களை அனுப்பிவைத்தனர்.
.
மூன்று மைல்கள் சென்றிருப்போம். எங்களுடன் வந்த உள்ளுர் வாசி என்னைப் பார்த்துச் சொன்னார். “உங்களுக்குச் சொந்தமான ஐலிக்காணி கொஞ்சத்தூரம்தான். ஒரு மௌலவி ஆடுகள் வளர்க்கிறார் மழை காலத்தில் விவசாயமும் செய்கிறார். ” ஒரு காலத்தில் கல்பிட்டி மரைக்கார்மார்களுக்குச் சொந்தமானதாக இருந்த பூமியில் அதுவும் ஒன்று. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம். வேளாண்மைக் காணிகளும் அதில் இருந்தன. பராமரிப்பில்லாமல் கை நழுவிச் சென்ற காணிகள் . அறுவாக்காடு இருப்பதே ஐலிக்காணிக்குள்ளேதான்.
.
பழைய தேசப்படத்தில் ஐலி இடப் பெயர் உண்டு. அந்தப் பெயர், அந்தக்காணிக்கான எங்கள் காணிச் சீட்டுகளிலும் உண்டு. அது எனது தாயாரின் முன்னோர்களுக்குச் சொந்தமானது. ( அந்தக் கதை பெரியது ). நாங்கள் காணிக்குச் செல்ல வில்லை. குப்பை கொட்டும் இடத்துக்கு வேகமாக நகர்ந்தோம். கதவுகள் திறக்கப்பட்டன. ஜுராசிக்பார்க் படம் பார்த்த பிறகு நான் பார்த்து அதிர்ச்சி அடைந்த அடுத்த பிரமாண்டக் காட்சி இதுதான்.
.
நூற்றுக்கணக்கான டிப்பர், ட்ரக்கள், வகை வகையான பெக்கோ, புல்டோசர்கள் நூற்றுக்கணக்கில் சேவையாளர்கள். 60 – 80 அடிகளையும் கடந்த ஆழமான குழி. குழி அல்ல பாரிய பாதாளம் . பாதிக் கொழும்பை சிரமமின்றி உள்ளே வைத்து விடலாம். பாரிய திட்டம். மேலே மலை போல் குவிக்கப்பட்டிருந்த சீனச் சுவர் போன்ற மணற் குவியலில் ஏறினோம்.
.
கீழே கடலேரி. ஏரிக்கு அப்பால் கண்ணுக் கெட்டிய தூரத்தில் கல்பிட்டி நகர். உயர்ந்த சில கட்டிடங்கள் காட்சி தருகின்றன. குழிகள் இருந்த இடத்துக்கும் கடல் ஏரிக் கரைக்கும் இடையில் தூரம் 100, 200 யார்கள் மட்டும். கடலின் ஆழத்தை விட பள்ளங்களில் ஆழம் அதிகம். சுற்றாடலை மட்டும் அல்ல கடலையும் நாசமாக்கும் திட்டம் அது.
.
WAK