பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-13

ல்பிட்டிக் கடலேரியின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் நன்கறிந்திருந்தனர். கல்பிட்டியில் இருந்த ஜெட்டி இறங்கு துறைக்கு அண்மையில் இருந்த கரைப்பகுதியை கோட்டை கட்டப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். வர்த்தகக் கட்டுப்பாடும் எதிகளிடமிருந்து பாதுகாப்பதுமே கோட்டை நிர்மாணத்தின்
நோக்கம்.
.
அதற்கு அருகில்தான் வணிகப்பொருட்களைக் களஞ்சியப்படுத்தும் குதங்கள் அல்லது களஞ்சிய சாலைகள் இருந்தன. போர்த்துக் கேயரின் அவா நிறைவேறவில்லை. பெரும்பாலும் போர்த்துக்கேயரின் நிர்மாண திட்டங்களின் பின்னணியில் அங்கு கோட்டை கட்டியது ஒல்லாந்தர்கள். குறைந்தது 14 ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே அந்த இடம் வணிகப் பொருட்களின் ஏற்றிறக்குமதிக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதற்கான பெரிய துறைமுகம் கல்பிட்டிக் கடலேரி இந்து சமுத்திரத்தைத் தொடும் இடத்தில் அமைந்துள்ளது.
.
கடல்களின் சந்திப்பு நிகழும் இந்த இடமும் அதைச் சூழ உள்ள கடற் பரப்பும் இயற்கை அழகை அள்ளிச் சொரிவதை எப்படி வர்ணிப்பது. கி. மு . 2 ம் நூற்றாண்டில் செமித்தியரான பீனிஸியர் வணிகத்துக்காக இலங்கையை அடைந்த துறைமுகம் இது . புகழ்பெற்ற குதிரைமலைத்துறைமுகம் இருப்பதும் ( சிலாவத்துறைக்கருகில்) நேர் கோட்டில்தான். கல்பிட்டியின் பெருமை அதன் துறைமுகத்தோடும் கடல் வாணிபத்தோடும் தான் ஒன்றிணைந்துள்ளது.
.
கடலேரியின் இறுதிப் பரப்பு புத்தளம் சேராக்குழி வரை செல்கிறது. புத்தளம் ஒரு துறைமுக நகரம். தென்னிந்தியாவில் இருந்து பொருட்கள் கல்பிட்டி வந்து அங்கிருந்து புத்தளம் வந்தடைந்தன. இங்கிருந்து தவளம் மாடுகள் மூலமாக சிங்கள ராஜதானிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. குருநாகல் , யாப்பகுவ, கண்டிராச்சியப் பொருட்கள் தவளம் மூலம் புத்தளம் கொண்டு வரப்பட்டு கல்பிட்டித் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
.
அங்கிருந்து பெரிய படகுகளில் அல்லது கப்பல்களில் தென்னிந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த வணிகச் செயற்பாடுகளில் பெரிய அளவில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தனர். வரலாற்று பூர்வமான இந்த இடங்களை அலங்கரிக்கும் சின்னங்களில் கல்பிட்டியின் ஒல்லாந்தர் கோட்டை முக்கியமானது . புத்தளத்திலும் ஒல்லாந்தர் கட்டிய கோட்டை ஒன்றிருந்து அது பராமரிப்பின்றி அழிந்துள்ளது.
.
குறிப்பாகக் கல்பிட்டியியின் பொருளாதார அடிப்படை துறைமுகத்தை ஒட்டியதாகவே இருந்துள்ளது. ஆயினும் 19 ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியோடு வணிகச் செயற்பாடுகள் குறைவடைகின்றன. ஒரளவிற்கு 1930கள் வரை இறுதி மூச்சு நீடித்திருந்தாலும் பழைய செல்வாக்கை அது இழந்து விட்டது. கல்பிட்டியின் பொருளாதாரத்தில் இது ஒரு பெரிய வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. கல்பிட்டி மரைக்கார் வம்ச செல்வச் செழிப்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியது.
.
1940 களில் துறைமுகத்தைத் திருத்தம் செய்து வணிகச் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிக்குமாறு கல்பிட்டி செல்வந்தர்கள் ஆங்கில அரசாங்கத்தையும்( சுதந்திரத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தையும் ) கருணையுடன் வேண்டிக் கொண்டனர். அவர்கள் எழுதிய மனுக்களில் துறைமுகம் செயல்படாததால் முன்னைய பொருளாதார சுபீட்சத்தைக் கல்பிட்டி இழந்து விட்டது என்று கவலையுடன் குறிப்பிட்டிருந்தனர்.
.
WAK