பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-14

ல்பிட்டி மக்களின், முஸ்லிம்களின் வரலாற்றை மீளக் கட்டியெழுப்ப ஒரு முக்கிய சாதனமாகக் கோட்டை விளங்குகிறது. கம்சபா, ரேகு, கிட்டங்கி களஞ்சியசாலை , சிறிய பஸார் என சின்னக் குடியிருப்பில் கோட்டையின் முன் பகுதி இருந்துள்ளது. இன்று காணாமல் போயுள்ள கல்பிட்டித்துறை முகத்தின் கதையும் இதோடு இணைய வேண்டும் . அப்போதுதான் இது முழுமை பெறும்.
.
கோட்டையுடன் இணைந்த கல்பிட்டியின் பண்டைய ஜெட்டி , இறங்குதுறை இன்னும் இருக்கிறது. புத்தளம் உள்ளகத்துறை முகம் இன்று இல்லை. கடலேரி விழுங்கிவிட்டது. அதனுடைய பழைய புகைப்படம் ? அதற்கு அருகில் இருந்து அழிக்கப்பட்ட முகிய்யதீன் ஆண்டகை தர்ஹா புகைப்படம்? நானும் ஸன்ஹீரும் எங்கள் குழுவினரும்
இன்றும் இந்த முயற்சியைக் கைவிடவில்லை. 1933 வரை தர்ஹா இருந்துள்ளது. 1960 வரை புத்தளம் நகரத் துறைமுக இறங்கு துறைப்பாலம் – அழியும் நிலையில் – ஆனால் இருந்துள்ளது.
.
கல்பிட்டிக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டிய காலத்தில் கல்பிட்டியில் கட்டப்பட்ட சில வீடுகள், ( ஒரளவு ) ஒல்லாந்தக் கட்டிடக்கலைச் சாயல் கொண்ட வீடுகள் கல்பிட்டியில் இன்றும் உள்ளன. மான்ஸ் உடையார் வீடு , சைமன் காசிச் செட்டிவீடு , மு கா மு முஹம்மது அலி மரைக்கார்வீடு . குறைந்தது இன்னும் சில கல்பிட்டி மரைக்கார்களின் வீடுகள் அந்தக் கால வரையறைக்குரியவை. ஓரிரு பழைய தேவாலயங்களும் உள்ளன. புனித பீட்டர்ஸ் தேவாலயம் முக்கியமானது.
.
சைமன் காசிச் செட்டியின் சந்ததியினர் அதன் புனர் நிர்மாணத்திலும் பராமரிப்பிலும் கவனம் செலுத்திவருகின்றனர. இந்தக் காலத்தோடு சமமாகக் கூடிய கல்பிட்டிப் பள்ளிவாசல் எது ? செய்கு சிக்கந்தர் ஒலி தர்ஹாவின் வயது என்ன ? பள்ளிவாசல் துறை தர்ஹாவின் வரலாறும் அதன் கட்டிட நிர்மாண வளர்ச்சியும் ஒல்லாந்தர் காலத்தையும் அதற்கு முற்பட்ட 250 வருட கால வரலாற்றையும் நமக்குத் தருகிறது.
.
போர்த்துக்கேயர் புத்தளம் – கல்பிட்டிக்குள் பிரவேசித்த போது முஸ்லிம்களும் கரையார்கள் அல்லது பரதவர்களும் நாகர் குடிகளும் இங்கு வாழ்ந்துள்ளனர். அப்போது கிறிஸ்தவம் அறிமுகமாகி இருக்கவில்லை. பள்ளிவாசல்துறை மரைக்காயர் வம்ச வரலாற்றுடனும் ஆரம்பக் குடிகளுடனும் செய்கு அலாவுதீன் தர்ஹா வின் வரலாறு ஒன்றிணைந்துள்ளது. மீரா உம்மா என்ற வன்னிய குல அல்லது வன்னியர் பட்டத்தைப் பெற்ற மாதரசியின் வரலாறும் அவர் புத்தளம் முகிய்யதீன் தர்ஹாவுக்கு 16ம் நூற்றாண்டில் வழங்கிய நில நன்கொடைகளும் புத்தளம் வரலாற்றை நிர்ணயிப்பதில் நம்பகமான வரலாற்றுத் தரவுகளை நமக்குத் தருகின்றன.
.
18 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்னதாக சைமன் காசிச் செட்டியின் மூதாதையருள் ஒரு செட்டி ( சிட்டி ) பள்ளிவாசல்துறை தர்ஹாவுக்கு சில நன்கொடைகளை வழங்கியதோடு அந்த தர்ஹாவைப் புனர் நிர்மாணம் செய்து ( பெரும்பாலும் ) இன்றுள்ள நிலைக்கு அதைத் திருத்தம் செய்துள்ளார். புதிய தூண்கள் , ஓட்டுக் கூரை, அருகே குளம் ஒன்றும் கிணறு ஒன்றும் கட்டித்தந்தான். தர்ஹா வரலாற்றிலும் உள்ளூர் மரபுச் செய்திகளிலும் நாட்டார் பாடல்களிலும் இச்செய்திகள் பதிவாகி உள்ளன. ஓட்டுப் பள்ளி என்றும் ஒரு காலத்தில் அந்த தர்ஹா அழைக்கப் பட்டது.
.
இந்த தர்ஹாவுக்கு தான் செய்த நேத்தி ஒன்று நிறை வேறிய ஆனந்தத்தில் தனது தாராள உதவிகளைச் செய்துள்ளான்
செட்டி. கல்பிட்டியில் காசிச் செட்டியின் மூதாதையர் வீட்டில் இருக்கும் ( அல்லது அதேகால பழைய கல்பிட்டி வீடுகளில் இருக்கும் ) கூரைக்கான மர சலாகைகளும் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உயர்ந்த மரத்தூண்களும் தர்ஹாவில் காணப்படுபவற்றிற்குச் சமமானவையாகும். ( காசிச் செட்டியின் முன்னோர் கால வீடு கீழே தரப்படுகிறது) .
.
தர்ஹாவுக்கான ஆரம்ப அடிப்படைக் கட்டிட வசதிகளையும் பராமரிப்புச் செலவுக்கான நிதி வசதிகளையும் மரைக்கார்கள் வழங்கினர். பல ஏக்கர் தென்னந்தோட்டங்களையும் தர்ஹாவுக்கு எழுதி வைத்தனர். தர்ஹா புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பின்னர் தர்ஹாவின் புகழ் மேலும் பரவியது.
.
WAK